கவிதை படிப்பதில் இருந்த ஆர்வம், அண்மைக்காலமாக கவிதை வடிப்பதில் ஏற்பட்டிருக்கு. ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. தேடிப்பார்த்ததில் கிடைத்த சில பாடங்கள் பயனுடையதாக இருந்தன. யான் பெற்ற இன்பம்…
ஆக்கம் – ஆதவா
கவிதை எழுதுவது என்ன கஷ்டமான வேலையா? கிடையவேகிடையாது… எண்ணங்களை எண்ணுவது எப்படி சுலபமோ அம்மாதிரி எண்ணங்களை எழுதுவதும் சுலபம்தான்..
கவிதைக்கு என்ன என்ன தேவை?
- தமிழில் ஆழ்ந்த சொற்கள் அல்லது கருத்துக்கேற்ப சொற்கள்
- சொல்லவரும் கருத்து
- அழகுபடுத்தும் திறன் அதாவது கற்பனை
- சொல்லடுக்கு (இது அடுத்த பரிமாணம்//)
- போதாது என்ற மனம்
ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவேன் ; பாரதியின் புத்தகம் படியுங்கள் கவிதை எழுதிடலாம் என்று… தமிழில் ஆழ்ந்த சொற்கள் அதைவிட சிறந்த இடத்தில் கிடைக்காது.. சொற்களை நமக்குத் தேடுவதில் பிரச்சனை இருக்காது.. தமிழராகவே நாம் இருக்கும் பஷத்தில் சொற்கள் பல தானாகவே வந்துவிடும். தகுந்த தமிழ் சொற்கள் அடங்கிய புத்தகம் வாங்கிக்கொள்ளலாம்.. விற்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.. இல்லையெனில் ?? நமக்குத் தெரிந்த தமிழை வைத்துதான் முதலில் கவிதை ஆரம்பிக்கவேண்டும்……………………
அடுத்து கருத்து:
நம் வாழ்க்கையில் எத்தனையோ காட்சிகள் காணுகிறோம்.. இல்லையானால் காதல், நட்பு என்று சில உறவுமுறைகள் காணுகிறோம்… அங்கிருந்தே நாம் கவிதையை ஆரம்பிக்கலாம்.. கவிதை ஆரம்பத்தில் நாம் எழுதும்போது அது எதைப்பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஏற்கனவே எழுதியிருப்பார்களே என்ற கவலை இல்லாமல் எழுதவேண்டும்… சரி உதாரணமில்லாமல் பாடம் நடத்தினால் சரியாக இருக்காது… உதா:க்கு காதலை மையமாக வைத்துகொண்டு கவிதை எழுதுவதாகக் கொள்வோம்..
காதலியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
இப்படி ஒன்றன்கீழ் ஒன்றாக இட்டுவிடுங்கள்…. மேலே எழுதப்பட்ட மூன்றுவரிகள் நிச்சயம் ஒவ்வொரு கவிஞனும் எழுதியிருப்பார்கள். அந்த கவலை நமக்குவேண்டாம்.. ஆனால் இம்மாதிரி சில யோசிக்கலாம்.. சரி இந்த வரிகளை எப்படி அலங்காரப்படுத்தலாம்?
சொல்லவந்த கருத்து:
நாம் கவிதையில் என்ன சொல்லவருகிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். கருத்து இல்லாமல் கவிதை எழுதி பிரயோசனமில்லை… மேற்கண்ட உதாரணக் கவிதையை எடுத்துக்கொண்டால், காதலின் மகத்துவம் இருக்கிறது….. நமக்குள் கருத்து எதுவும் தோன்றாவிடில் மிகவும் எளிதாக, எழுதப்பட்ட வரிகள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்ம்ம் உதாரணம்
காதலியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
என்னிடம்
காதல் சொல்ல வந்தாய்
நான் வேண்டாம் என்கிறேன்
மேற்கண்ட வரிகளில் பாருங்கள்.. சற்று கருத்து வேறுபாடாக இருக்கிறது.. காதலியை உயர்த்தி பேசிவிட்டு, காதலை ஏற்காதவன் போல் சொல்வது ஒட்டாமல் இருக்கிறது பாருங்கள்.. அதை சற்றே மாற்றி கீழ்கண்டவாறு இடலாம்…. நன்றாக ஒட்டும்..
தோழியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்
சரி சரி… கருத்து என்பது நம் மனதுக்குள் , கவிதைக்குள் திணிக்கப்படும் விதை… அது இன்றி கவி எழுதினால் எப்போதுமே நன்றாக இருக்காது…
அடுத்த பரிமாணம் கற்பனை:
இங்கேதான் நமக்கு பிரச்சனையே!! கற்பனை எப்படி உதிக்கிறது?,,, என் நண்பர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்… கற்பனை என்பது பிறப்பிலிருந்தே வரவேண்டுமாம்…. இல்லவே இல்லை.. பிறவிக் கவிஞர்கள் உண்டு…. ஆனால் இல்லாதவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளலாம்..சரி எப்படி கற்பனை செய்வது…
முதலி ஒப்புமைகள் இடலாம்… அதாவது இதைப் போல நீ இருக்கிறாய் ; அதைப் போல நான் இருக்கிறேன் என்று சொல்வது…
முதலில் கற்பனை நம்முள் உதிக்க நாம் நிறைய பார்க்கவேண்டும்… இயற்கையிடம் இல்லாத கற்பனை இல்லை.. கவிதையில் பொய்தான் அதிகம் பேசப்படும்.. மேற்கண்ட வரிகளோடு கற்பனையைப் பொருத்தலாம்..
தோழியே
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்
நான் நிழல் போலத் தொடருவேன்.
கவனியுங்கள்.. நிழல் நம்மை எப்போதுமே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.. அதை நாம் கவனித்திருப்போம். ஆனால் வேறெந்த கற்பனையும் செய்திருக்கமாட்டோம்…
நான் காணும் காட்சிகளிலிருந்துதான் நாம் கற்பனையை எடுக்கவேண்டும்.. நீங்கள் ஒரு பறவையைப் பார்க்கிறீர்கள்.. உதாரணத்திற்கு மைனாவைப் பார்க்கிறீர்கள் ; அழகாக இருக்கிறது என்றால்
மைனாவைப் போல என் காதலி .
என்று யோசியுங்கள் தவறே இல்லை… கவிதைக்கு முதல்படியே இதுதான்.. சரி விடுங்கள் வழியில் ஒரு பாறாங்கல்லைப் பார்க்கிறீர்கள்…
பாறாங்கல்லின் குணம் என்ன? உடைக்கமுடியாததும் வலிமையானதும், அதிக எடை கொண்டதும்தானே!!! உடனே
பாறாங்கல்லாக இருக்குதே உன் மனது
என்று எழுதுங்கள்… உடைக்க முடியாமல் இருக்குதே என்ற அர்த்தம் வரும்.. கற்பனைகள் நாம் நினைப்பதைப் பொறுத்து நிறைய வரும்… சாதாரணக் கற்பனைதான் நாளடைவில் அசாதாரணக் கற்பனையாக மாறக்கூடும்……
நம் உதாரணத்தைத் தொடருவோம்
தோழியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்
நான் நிழல் போலத் தொடருவேன்.
நீ பாறாங்கல் மனதை வைத்திருக்கிறாய்
அடுத்து சொல்லடுக்கு :
கொஞ்சம் கவிதை எழுதிப் பழகியவுடன் இந்த சொல்லடுக்கு காணலாம்..
- சொற்களாலே கவிதையை அழகு படுத்தலாம்…
- இலக்கணம் சற்று தழுவி எழுதலாம்
- வார்த்தை விளையாட்டுக்களை புகுத்தலாம்
இப்படி பல்வேறு உள்ளன… ஆனால் இவையனைத்திற்கும் பல தமிழ்சொற்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.. நாம் கவிதை எழுத எழுத தானாக வந்தமையும் இந்த சொல்லடுக்கு…. இல்லையென்றால் மிகவும் எளிது: பாரதியின் கவிதையை மிக ஆழமாக படிக்கவும்……….
போதாது என்ற மனம் :
எத்தனை கவிதை எழுதினாலும் போதாது என்ற மனமிருந்தாலே நாம் நிச்சயம் பல வலிமையான அழகான கவிதை தரமுடியும்… நம்பிக்கை மட்டுமே இதற்குத் தூண்… நீங்கள் எழுதுவது எப்படி இருப்பினும் அதை மீண்டுமீண்டும் எழுத எழுத கூர் செய்யப்படும்…. யாரும் எடுத்த எடுப்பில் மிகப்பெரிய கவிஞராகிவிடமுடியாது… பிறவிக்கவிஞனுக்கு மட்டுமே உரிய பழக்கம் அது..
அதேபோல நாம் எழுதும் கவிதைகள் இன்னும் சீர்படுத்த வேண்டுமென்றால் பல புத்தகங்கள் படிக்கலாம்.. கற்பனைகளை நன்றாக வளர்த்தலாம்.. நிச்சயம் முடியும்…
முடியுமென்ற நம்பிக்கையும் இது போதாது; இன்னமும் வேண்டுமென்ற நம்பிக்கையும் இருந்தாலே போதும்.. எல்லாருமே கவிதை எழுதலாம்…