திலீபன் எனும் தீபம்…. திரிதூண்டப்பட்டதே அன்றி அணைக்கப்படவில்லை .

ஆண்டாண்டு காலமாக கடவுளுக்காக ஆடப்பட்ட காவடிகள் முதன் முதலில் ஓர் மானுடனுக்காக ஆடப்பட்டது.

ஓர் புதுயுகம் அல்லது ஒரு யுகமாற்றம் எம் கண் முன் நிகழ்ந்தது.

ஆம்,இனவிடுதலைக்காக தனை ஆகுதியாக்கிக் கொண்டிருந்த தியாகி திலீபனுக்காக இங்கே ஆடப்பட்டது.

1987ஆம் ஆண்டில் திருமிகு. மயிலு அப்பன் அவர்கள் வயாவிளானில் இருந்து உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்ற நல்லூர் வடக்கு வீதி வரை தூக்குக் காவடி ஆடிவந்தார்.

ஈழவிடுதலை இயக்கங்களால் குறிப்பாக விடுதலைப் புலிகளால் தோண்டி எடுக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் வீரவழிபாட்டிற்கு புதிய வடிவம் கொடுத்த மனிதர்களில் திருமிகு.மயிலு அப்பன் அவர்களும் ஒருவர் ஆவார்.

சென்ற ஆண்டு இதே மாதங்களில் திருமிகு அப்பன் அவர்கள் நோயுற்றுள்ளார்கள் என்பதை அறிந்தேன்.

இவ்வாண்டு அவர் தொடர்பாக வயவையின் மைந்தர் ஒருவருடன் பேசிய போது அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்.

அவரின் ஆத்மாவும் சொர்க்கத்தில் ஓய்வெடுக்க தமிழர்கள் நாம் எல்லாமெ வல்ல இறைவனை வேண்டுவோம்.

திருமிகு. மயிலு அப்பன் அவர்களின் குடும்பம் வயாவிளானின் வடக்கு எல்லையில் உள்ள வவுணத்தம்பை என்ற இடத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டது.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்ற காரணத்தைக் காட்டித் தமிழர்கள் அவ்விடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் ஈழவிடுதலை தேடிப் புறப்பட்ட விடுதலை இயக்கம் ஒன்று வயவையூரின் தென்கிழக்கே “சுதந்திரபுரம்” என்ற இடத்தில் இவர்களைக் குடியமர்த்தியது.

நிற்க,
ஆக்கிரமிப்பார்களின் பெருங்கோட்டையாக்கப்பட்ட பலாலிப் பெருந்தளத்தின் தலைவாசலாக வயாவிளான் இருந்து வருகிறது.

வயவையூரின் ஓர் பகுதி தொடர்ச்சியான ஆக்கிரமிப்பில் இருந்த சமயம் இந்தத் தூக்குக் காவடி ஆடப்பட்டு வந்தமை அன்று இன்னுமொரு பெரும் விடையத்தை வெளிப்படுத்தி நின்றது.

தியாகத்தின் எல்லையை மீறிய உலகத்தமிழர்களின் பிள்ளையாய் வானளாவ உயர்ந்து தியாகியின் தியாகச் சாவின் முன்னர் அவர் உண்ணா நோன்பிருந்த மேடை வரை தூக்குக்காவடிகள் ஆடப்பட்டன. 

அவர் தீயகச் சாவடந்த பின்னர் அடுத்து வந்த ஆண்டுகளிலும் நினைவேந்தும் பொழுதுகளில் தூக்குக் காவடிகள் ஆடப்பட்டு வந்தன.

அலங்காரக் கந்தன் உறையும் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் திலீபனினத்தினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் பொருத்தப்பட்டிருந்த தியாகி திலீபனின் திருவுருவப் படத்திற்குத் தூக்குக் காவடியில் வந்த ஒரு தமிழன்பர் மாலை இடுவதே இங்கு இணைக்கபட்டுள்ள ஒளிப்படத்தில் காணப்படுகின்ற நெஞ்சைத் தொடும் காட்சி.

1995ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது சந்திரிக்கா அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சியின் தொடக்க காலத்தில் யாழ் நகரை முழுமையாக இராணுவம் ஆக்கிரமித்தது.

“தமிழர்களின்கலாச்சரத் தொட்டில்” என வியந்துரைக்கப்பட்ட முகத்தை கோரமாகச் சிதைத்தது.

1981 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31இல், முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது தமிழர்தம் அறிவாலயமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

அறிவாலயமான யாழ்நூலக எரிப்பைக் கண்டித்த சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை மனுக்குலத்துக்கே இழைக்கப்பட்ட இன்னுமோர் அசிங்கமான அநீதியாக மானுட வரலாறு பதிவு செய்து கொண்டது.

செந்தமிழின் காவலர்களாக உலகப்பரபெங்கும் பரந்து விரிந்து நீதி கேட்டு நிற்கும் தமிழன்பர்கள் குறிப்பிடுவது போல…

“திலீபன் எனும் தீபம்….
திரிதூண்டப்பட்டதே
அன்றி அணைக்கப்படவில்லை .. “

🕯🌷வீரவணக்கம்🌷🕯

தொடரும்…

நன்றி

-வயவையூர் அறத்தலைவன்-