சமூகப் பிரஞ்ஞை உள்ளவர்களாகப் பலரைச் செதுக்கி அவர்தம் மனங்களில் சிலையான சிற்பி அமரர் அருள்பிரகாசம் அவர்கள்.

தாயார், தந்தையார், தாரம், தமக்கையார், தமையன்மார் போலவே எந்தன் பொதுவாழ்வுக்கும் தனிப்பட்ட வாழ்வுக்கும் நெருக்கமாகத் துணை நின்றவர் அருள் சித்தப்பா!

எங்கள் கண் எதிரே பலர் கொடூரமாக சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்க தனக்கே உரித்தான சாதுரியமான புத்தியால் அந்த பேராபத்திலிருந்து என் ஒன்றுவிட்ட தம்பிமாருடன் (அவரது புதல்வர்கள்) சின்னண்ணரையும் எனையும் காத்து வயாவிளான் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்!

ஆம்,

1984 ஆண்டு மாங்கனித் தீவின் வட மாகாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா (Brigadier Ariyapperuma) கட்டுவன், வறுத்தலைவிளான் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி மரணமானதைத் தொடர்ந்து வீதிகள் எங்கும் துமுக்கி ஏந்திய பச்சைப் பேய்கள் மனித வேட்டையில் ஈடுபட்ட சம்பவம்தான் அந்த பேராபத்து ஆகும்!

காலதேவன் தன் தேரினில் சூரிய, சந்திரர்களை சக்கரங்களாக பூட்டிக் கொண்டு வேகமெடுத்த போது அடியேன் தீவிர பொதுவாழ்வில் வனவாசம், அஞ்ஞானவாசம், சிறைவாசம் தாண்டி வவுனியா வைரவப்புளியங்குளம் வீட்டில் ஒரு வகையான விரக்தியுடன் இருந்தேன்!

அன்று கையில் ஒரு பத்திரிகையுடன் வந்த அருள் சித்தப்பா எனை ஒரு வகையான பூரிப்புடன் பார்த்து வண்ணம் “ஐ சே ஐ ஆம் புறவுட் ஒவ் யூ!” (I say, I am proud of you!) எனத் திருவாய் மலர்ந்ததுடன் எனக்கு கைலாகு (Handshake) தந்தார்!

கல்லூரியில் எனது ஆசானாகவும் இருந்த சித்தப்பாவைக் காணும் போதெல்லாம் ஒரு பயம் கலந்த மரியாதையும் என்னோடு ஒட்டிக் கொள்ளுவதுண்டு.

சித்தப்பா ஏன் பாராட்டுகின்றார் என ஒன்றுமே புரியாமல் அவரது முகத்தைப் பார்த்த போது பதிலுக்கு பத்திரிகையில் காணப்பட்ட ஒரு ஒளிப்படத்தைக் காட்டினார்.

அந்த ஒளிப்படத்தில் கட்டுவன், வறுத்தலைவிளான் ஆபத்திலிருந்து அவர் காப்பாற்றிய சிறுவன் பெரியவனாகி முள்ளிவாய்க்கால் காலத்தில் ஒரு முதியவருக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்த ஒளிகொண்ட ஒளிப்படம் இருந்தது!

தேவை அறிந்து சேவை செய்வதிலும்… தனைச் சூழ்ந்திருக்கும் மாந்தரின் உளவியலை அறிந்து
தேவையான நேரத்தில் உற்சாக மாத்திரைகளைக் கொடுப்பதிலும்…

அருள் சித்தப்பாவுக்கு நிகர் அருள் சித்தப்பாவேதான்.

ஆசிரியப்பணி மூலம்  
“அறம்”காத்தவரை
“அகம்”தனில் ஆழ நினைந்து
“கரம்”தனை கூப்பி
“சிரம்”தனை தாழ்த்தி

புகழ்வணக்கம்
செலுத்தியே
நிமிர்வோம். ☀️

1 COMMENT

Comments are closed.