ஒளிகொண்ட இந்த படத்தினைப்
பார்த்தவுடன் “நனவிடை தோய்கின்றது” எந்தன் இளகிய இலக்கிய மனம்!
எங்கள் திருவூர்கள் தோறும் “பெட்ரோல் மக்ஷ்” பற்ற வைக்கத் தெரிந்த திறனாளர்கள் (Experts) போலவே “ஆட்டுக் கடாய்” அறுத்துப் பங்கு போடவும் சில திறனாளிகள் இருந்ததுண்டு.
தென் வயவையில் “ஆவரங்கால் ஆறுமுகம்” என அழைக்கப்பட்ட எங்கள் சின்னத் தாத்தா ஆடு பிடித்து அடித்து உரித்துப் பங்கு போடுவதில் பிரபலம் வாய்ந்தவர் மட்டுமல்ல கை தேந்தவரும் ஆவார்!
தென்மூலைக் குறிச்சியில்
இன்னும் ஒரு பெரியவர் இருந்தார் அவரை “என்னம் பெரேரா” என அழைப்போம்.
மறி ஆட்டினை “கடாய் ஆடு” அறுத்து விற்பவர்களும் எம்மூரில்
இருந்ததால் எங்கள் அப்பா இந்த இருவரிடம் மட்டுமே “பங்கு இறைச்சி” வாங்குவதுண்டு.
“காடுபடு செல்வம்”இல்லாத
எம் ஊரில் கடாய் வெட்டி காய்ச்சி உண்பதும் ஒரு சின்னஞ் சிறிய குதூகல நிகழ்வாக இருப்பது வழமை.
கடாய் இறைச்சி காய்ச்சி கத்தரிக்காய்ப் பால் கறிக்கு பக்குவமாய் பச்சைத் தேசிக்காய் புளியும் இட்டு உண்ணும் ந(பொ)ன்னாட்களில்
எல்லா வீடுகளிலும்
“நல்லெண்ணெய்”
தலையினில் தாராளமாய் தடவி போதாக் குறைக்கு உடலிலும் தடவி ஒவ்வொரு வீட்டிலும் தலை முழுகுவார்கள்.
எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
எந்தன் பெரிய அண்ணாவுக்கு அப்பாவை நல்லாப் பிடிக்கும் ஆனால் அப்பா தலையெல்லாம் நிரம்பி கண்கள் எல்லாம் வடிந்து வடிந்து கண்களில் எரிச்சல் உண்டாக்கும் அந்த செயல் பிடிக்காது ஓடித் திரிவார்!
உழுதூண் விரும்பும் பெருங்குடி மக்கள் வாழும் எம் பொன்னூரில் எல்லோரும் நன்றாய் ஏன் அளவுக்கு அதிகமாகவே உப்பும் உறைப்பும் இட்டு உண்பார்கள்.
அதுவும் போதாதென,
பங்கு இறைச்சி அடித்து ஊரெல்லாம் அல்லது எங்கள் ஊரின் குறிச்சிகள் எல்லாம் மகிழ்ந்து உண்ணும் நாளில்
“இறைச்சிக் கறி” தூக்கலாய் இருக்க வேண்டுமெனப் புதுத்தூள் இடித்துப் போடுவார்கள்.
முட்டை போட பெட்டைக் கோழி கேரும் அல்லது உலைப்பானை கொதிக்கும் ஓசை கேட்கும் அந்தப் பத்துப் பதினொரு மணி நேரத்தில் வீடுகள் தோறும் உரலில் உலக்கை இட்டு இட்டு புதிய “மிளகாய்த்தூள்”(Fresh chilli curry powder) இடிக்கும் ஓசையும் மேலதிகமாகக கேட்டுக் கொண்டேயிருக்கும்!
ஒத்திசைவான ஒரு கிராமத்து வாழ்க்கையில் கடாய் அடித்து ஒன்றாய்க் காய்ச்சி பேரின்ப மயமானது ஆகும்.
மாமல்லபுரத்து
உளியின் ஓசை
போல அல்லது கரவெட்டியின் மத்தொலியின் (இன்றைய மத்தொனி) வரலாறுகளை வரலாற்று நூல்களிலும் திரைப்படங்களிலும் செவிவழிகாவும் மட்டுமே கேட்டு இரச்சித்தேன்.
அஃதே,
என் திருவூராம் வயவையின் உரலின் ஓசையும் என் சிறுவயதில் முதன் முதலில் யான் கேட்ட இன்னிசை ஆகும்.
கல்லுரல்களும் கருங்காலி மரத்தாலான உலக்கைகளும் எல்லா வீடுகளிலும் ஒரே தாளலயத்துடன் அல்லது ஒரே சந்ததுடன் ஒலித்த
அந்த உரலின் ஓசை
என் பெருத்த சுளகுச் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கின்றது.🎼🎸
-வயவையூர் அறத்தலைவன்-