பவானி தர்மகுலசிங்கம் அவர்களின் வியன் களம் கவிதை நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

236

“முத்திசையும் கடல்சார்ந்த முழுநிலவுப் பெண்ணே!
எத்திசையில் நோக்கினும் எழில்மிகு கண்ணே!
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியளே!
நித்திலமாய் ஒளிர்கின்ற நிலமடந்தை வாழியவே!”
எனத் தன் வரிகளால் தமிழர்களின் தேசத்திற்கு பெண்தெய்வம் கொற்றவை எனப் புது வடிவம் கொடுத்த பவானி தர்மகுலசிங்கம் அவர்களின்  “வியன்களம்”

போர்கால மரபுக் கவிதைத்தொகுப்பு நூல் அறிமுகவிழா Harrow Civic Centre இல் கடந்த நொவம்பர் 3ம் திகதி நடைபெற்றது.

இக்கவிதைகள் தனித்துவம் மிக்கவை. இத்தனித்துவம் போர்காலம். மரபுக்கவிதைகள், ஈழம், பெண்கவிஞர் என்ற நான்கு சொற்களுக்குள் அதன் தனித்துவத்தை சாற்றி நிற்கின்றன.

எந்தக்கவிதை என்றாலும், எவ்வளவு உயரிய இலக்கண இலக்கிய வரைமுறைக்கு உட்பட இயற்றப்பட்டிருந்தாலும் அது வாசகனை சென்றடைய வேண்டும்,. இங்குதான் பவானி அவர்களின் எழுத்துநடையும், மரபுக்கவிதையை அவர் கையாளும் சொல்நடையும் சிறப்புப் பெறுகின்றது. மரபு கவிதையை இலகுவாக எழுதுவதற்கு நிறைய சொற்பதங்கள் தெரிந்திருக்க வேண்டும். அது இவரிடம் தாரளமாக உள்ளதால் மரபு வரையறைக்குள் இருந்து கொண்டு, உணர்ச்சி ததும்ப எழுதக்கூடியதாக இருக்கிறது

ஈழத்து பெண்கவிஞர்களில் மரபு சாராமல், போர்சார் கவிதைகள் எழுதிய பெண் கவிஞர்கள் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” கவிதைத்தொகுப்பு போர் கொடுமையால் இருப்பற்று அலையும் துயரைப் பேசுகிறது. என்றாலும் ஈழத்தில் மரபுக் கவிதைகள் எழுதுபவர்கள் குறைவு அதிலும் பெண்கவிஞர்கள் மிக அரிதாகவே உள்ளார்கள்.

இதற்கு காரணம் மரபுக்கவிதைகள், யாப்பிலக்கணத்தின் வரையறைக்குள் உட்பட்டவை. கவிதையின் உறுப்புக்கள் எழுத்து, அசை, சீர், தளை. அடி, தொடை என ஆறும், அது எப்படி எழுதவேண்டும் என்ற விதிகளும் உள்ளன. இவருக்கு இவரின் தாய்வழிப் பேரன் ஒரு தமிழ் ஆசிரியர், தாய் மாமன் பாடசாலை அதிபர், தந்தை அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ் வித்துவான் என்று பலமான அடித்தளம் இருந்ததும் ஒரு காரணம் என்கிறார்.

எத்தனைபேர் இருந்தாலும் இவரின் தமிழ்பற்றுத்தான் இவரை மரபுக்கவிதை எழுத வைத்துள்ளது. இவரின் தேசப்பற்றுத்தான் இவரை போர்காலக்கவிதைகள் எழுதவைத்துள்ளது.

அக்காலத்தை அறிய பழந்தமிழ் இலக்கிய இலக்கணநூற்கள் உதவியது போல, இக்காலத்தை விளக்குவதற்கு இக்காலத்தில் நாம் பாவானி |போன்ற கவிஞர்களை நாம் வாழும் காலத்திலேயே ஆதரவு அளித்து, எமது வாழ்கை நாம் வாழ்ந்த வரலாறு, எமக்க நடந்த துன்பயியல் நிகழ்வுகள், எமது வீரம், எமது அடங்காமை, எமது அடிபணியாமை, எமது தேசப்பற்று, எமது தாய் வாழ்ந்த வாழ்கை எமது பாட்டன் விட்டு சென்ற முதிசம், எமது பயம், எமது கோபம், எமது சினம் என்று எல்லாமே பதியப்பட வேண்டும்.

நாம் பதிய வேண்டும், அயல்நாட்டான், கேள்வி ஞானத்தில் எழுதியதில் உண்மை உறைக்காது போகலாம், இன்னொருவரின் அடைக்கலத்தில் எழுதும் போது உண்மை உறைந்து போகலாம், இன்னெருவரின் அரசியற் பின்னனியின், பின் நின்று, எழுதும் போது உண்மை இல்லாது போகலாம், பொய்மை நிறைந்தும் இருக்கலாம். நாம் நமக்கேன் வீண்வம்பு என்று இருந்தால் உண்மையை யார் உலகிற்கு சொல்வது. நாம் வாழும் காலத்தில் வந்த ஆய்வுகளில் உண்மை திரிக்கப்பட்டிருந்தால் நாமே அதை உரத்து சொல்ல வேண்டும்.