என் ஆங்கில இலக்கிய ஆசான் அடிக்கடி சொல்வார், மொழியின் முழுமை கவிதை என்று. நுணுக்கமான உணர்வுகளை பொருத்தமான சொற்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். விசாலமான கருக்களை சுமக்கக் கூடிய வாமணச் சொற்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தம் கொஞ்ச வேண்டும். சங்கதி பேச வேண்டும். இத்தனையும் செய்ய நிச்சயம் மொழியில் முழுமை அடைந்திருக்க வேண்டும் என்று எல்லாரும் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனாலும் அந்த ஆச்சரியமே ஆச்சரியப்படும் விதத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அபூர்வங்கள் பூப்பதுண்டு. குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வயவை மண்ணில் அவ்வாறு பூத்தவர்தான் கவிதைகளின் காதலன் வயவை லம்போ.
சுப்பிரமணியம் நீலாம்பிகை தம்பதிகளின் ஆறாவது பிள்ளையாகவும் கடைக்குட்டியாகவும் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை வயாவிளான் ரோமன் கத்தோலிக்கட் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கற்றிருக்கிறார். வயாவிளான் மத்திய கல்லூரி இடம்பெயர்ந்து புன்னாலைக்கட்டுவனில் இயங்கிய போதும், மீண்டும் ஊரில் இயங்கியபோதுமாக சில காலம் கற்றிருக்கிறார். அதன் பின் பன்னிரண்டு வயதில் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்திருக்கிறார். அதன் பின் இவர் கற்றது முழுக்க ஜேர்மன் மொழியில்.. ஆம்… பன்னிரண்டு வயதுடன் தமிழுக்கும் இவருக்குமான உறவு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரால் எப்படிக் கவிதை எழுத முடிகிறது! என்ற வியப்பு எழுந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் எனக்கு எழவில்லை.. ஏனெனில் இவர் பிறந்த இடம், தவழ்ந்த இடம், வளர்ந்த இடம் வயாவிளானின் கல்லடி வேலுப்பிள்ளை தெரு. கல்லடியான் தெருவோடு விளையாடிய இவரிடம் கவி குடி புகுந்ததில் ஆச்சரியமில்லை.
ஜேர்மனியில் தஞ்சம் அடைந்தாலும் அத்தெருவின் வாசம் இவரை விட்டுப்போகவில்லை. தமிழைத் தன்னோடு தக்க வைக்க தமிழ் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். தமிழ் இவர் மூலம் தன்னைத் தக்க வைக்க நினைத்திருக்கும் போல.. கவி எழுதும் புலமையை இவருக்குக் கொடுத்திருக்கு. அன்று தொடங்கிய இவருடைய கவிப்பயணம் இன்று வரை இடை விடாது தொடர்கிறது.
இருவரின் இணைவில்
பிறப்பு என்பது இயற்கையின் நியதி
இருவரின் பிரிவில்
பிறப்பு என்பது கவியுலகின் சிறப்பு விதி..
தனிமையின் தூண்டலில்
பிரிவு கிளர்ந்து இதயம் பிளந்து
உணர்வுடன் புணர்ந்து
கவிதையாய்க் கருக்கொள்ளும்..
கருக்கொண்ட கவிதையோ
கவிஞனைப் பிரசவிக்கும்..
பிறந்த கவிஞன்
காதலில் தவழ்வான்..
அழிவில் எழுவான்..
கவிதையால் நடப்பான்..
கவிஞன் லம்போவும் அப்படித்தான்..
இவரின் தமிழ்
பிரிவின் வலியில் வீழ்ந்திருக்கிறது..
காதல் பேசி இருக்கிறது..
இயற்கையை நேசித்திருக்கிறது.
தாயையும்
தாய் நாட்டையும் பேசி இருக்கிறது..
இனத்தின் அழிவு கண்டு
இரங்கிப் பொங்கி இருக்கிறது.
2008 இல்
செங்கதிர்த் தொகுப்பாய்
மலர்ந்திருக்கிறது…
2017இல்
தான் உறங்கிய தொட்டிலுக்குத்
தாலாட்டுப் பாடி இருக்கிறது..
கவிஞன்
முதலில் படித்த காவியம்
எரிமலையாம்..
இரண்டாம் காவியம்
களத்தில் ஆம்..
என்ன பொருத்தம்..
எரிமலை உறங்குவதில்லை..
களம் ஓய்வதில்லை..
கவிஞன் வயவை லம்போவின் கவிப்பயணமும் உறங்காது.. ஓயாது…
வயவையின் பெருமிதமாய் மிளிரும்..
வாழ்த்துகள் கவிஞரே..
குறிப்பு- அவுஸ்ரேலியாவில் உள்ள வயாவிளான் மக்கள் ஒன்றியம் மூலம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்ட இவருடைய நான் உறங்கிய தொட்டில் கவிதைத் தொகுப்பின் மூலம் திரட்டப்பட்ட தொகையை வயாவிளானின் வளர்ச்சிக்கு வழங்கி உள்ளார். கவிஞருக்கு அதற்கும் வயவன் இணையம் சார்பாக நன்றி கலந்த பாராட்டுகள்.
இனி கவிஞரின் கவிதைகள் வயவன் மூலம் உங்களோடு உறவாடும்..