நாள் : 7
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 7
தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது.
உவமை சொல்லப்பட இயலாதவன். நெடு நாள் ஆய்ந்தபின் நாரை மூக்கிற்கு உவமை கிட்டியது பாண்டிய மன்னனுக்கு. பனம்படு கிழங்கு பிளந்த கூர்மூக்கு நாரை என.
ஒரு பொருளின் ஒரு குணம் இன்னொரு பொருளில் இருந்தால் ஒன்றுக்கொன்று உவமையாகி விடுகிறது. மான் விழியாள், மீன் விழியாள் என உவமைகள் சொல்லலாம்.
அப்படி ஒன்றையுமே உவமை சொல்லமுடியாது இறைவனுக்கு. இதுதான் இறைவன் என வரையறுக்க முடியாது என்கிறார் வள்ளுவர் இங்கு. மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டிய வாசகம் இது. இறைவனின் ஒருபகுதியைக் கூட யாரும் முழுமையாக அறிந்ததில்லை. அவனுக்கு ஒப்பானதும் ஒன்றுமில்லை.
மனக்கவலை மாற்ற ஒரே வழி, இறைவனின் வல்லமையை நினைப்பதுவே ஆகும். இறைவனின் இம்மகத்துவத்தை அறியாதவனுக்கு மனக்கவலை என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.
கடவுளை உணராதவன் கவலையை உணர்கிறான்