நாள் : 70
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் :10
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
இப்பொழுது சட்டென தந்தை மகற்காற்று “நன்றி” ஞாபகம் வந்திருக்கும்.
இங்கே மகன் தந்தைக்காற்றும் “உதவி”யைப் பற்றிச் சொல்கிறார் வள்ளுவர். பெற்றகடன் என்னும் வார்த்தையை வள்ளுவர் ஒப்புக் கொள்வதாயில்லை. பெற்று உலகில் விட்டது குழந்தைகளுக்காக இல்லை. தமக்காகவே குழந்தைகளைப் பெறுகிறார்கள் பெற்றோர்கள்.
அப்படி பெற்ற தந்தைக்கு மகன் ஒரு உதவியைச் செய்ய முடியும். அது என்ன உதவி?
கரும காரியங்கள் செய்வதா? இல்லை அது மனிதனின் கடமைகளில் ஒன்று.
தந்தைக்கு மகன் செய்ய முடியும் ஒரே உதவி இப்படி ஒரு மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என புகழை அடையச் செய்தல் வேண்டும்.
மோகன் தாஸைப் பெற்றதால் கரம்சந்த் ஞாபகம் இருக்கிறார்.
சிவாஜியைப் பெற்றதால் ஷாஜி போன்ஸ்லே நினைவில் இருக்கிறார்.
அக்பரைப் பெற்றதால் ஹூமாயூன் நினைவில் இருக்கிறார்.
அலெக்ஸாண்டரைப் பெற்றதால் பிலிப் நினவில் இருக்கிறார்.
கரிகாலனைப் பெற்ற இளஞ்சேட்சென்னியும்
இராஜராஜனைப் பெற்ற சுந்தர சோழனும்
என பல பெயர்கள் வரலாற்றில் அவர்களின் மக்களால் இடம் பெற்றன.
ஆக ஒருவர் மிகப்பெரிய புகழ்பெறுவதால் அவன் பெயர் மட்டுமல்ல, அவனது தந்தையும் வரலாற்றில் இடம்பெற்று விடுகிறான்.
அதுவே ஒரு மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய மிகப் பெரிய உதவியாக இருக்கும்.