தமிழர் பண்பாட்டு மையம் என்ற பெயர்கொண்ட வளாகத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அந்தக் கல்யாணமண்டபம். ஏறத்தாழ ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தை தனி ஒருவனாகச் சுத்தம் செய்து கதிரைகளை ஒழுங்காக்கியபடி இருந்தான் கதையின் நாயகன் பொம்மன். ஜேர்மனியன்.. கழக வளாகக் கடைநிலை ஊழியர்களின் மேலாளன். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனை விட்டு விட்டு மண்டபத்தின் மேடைக்குப் போவோம்.
மேடையில் மூவர்… நடுநாயகமாக இருப்பவன் செல்வா. கழகத்தின் நிர்வாக இணைப்பாளர்களில் ஒருவன். லண்டனில் அமைந்துள்ள தாய்க்கழகத்திலிருந்து ஜெர்மனிக்கு பயிற்சிப்பட்டறை நடத்த வந்திருந்தான். கடந்த இருவாரமாக இடைவிடாது நடந்த பட்டறையின் மிச்சமாக அவன் முகத்தில் களைப்பும் மேசையில் சில கோப்புகளும் இருந்தன. களைப்புக் கூட களை கொடுக்கும் முகமாக அமைந்திருந்தது செல்வாவின் சிறப்பு. அந்தச்சிறப்புடன் பட்டறை பற்றி அறிக்கை தயாரித்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜெர்மன் கழகப்பொறுப்பாளரும் துணைப்பொறுப்பாளரும் அவனுக்கு உதவியபடி இருந்தார்கள். அப்பப்போ பட்டறையின் பூரண வெற்றிக்கு கட்டியம் சொல்லும் செயற்றிட்ட அமுலாக்கம் தொடர்பான ஆலோசனைகள் மோதிக்கொண்டன. மோதல் அதிகரித்த போது குரலில் அதிகாரம் கலந்து உத்தரவுகளைக் கொடுத்தான்.
எல்லாம் முடிந்த எல்லாரும் போனபின்னர் மண்டபத்தில் செல்வாவும் பொம்மனும் மட்டும்.. அவர்கள் பேசிக் கொள்ளும் அரைகுறை தமிழும் உடைந்த டொச்சும் உங்களைக் கொல்லாதிருக்க உரையாடல் பெயர்ப்புடன் தொடர்வோம்..
பட்டறையை இன்று முடித்தே ஆகவேண்டிய நிலை. அதனால் மதியபோசனம் செல்வாவின் பசியை அடக்கவில்லை. அன்னபூரணன் (அன்னபூரணிக்கு எதிர்பால்) பொம்மனைக் கேட்டான்.
பொம்மன்.. சாப்பிட என்ன இருக்கு..
மத்தியானக் கறிகளும் புட்டும் இருக்கு..
புட்டு எப்பத்தையான்..
பின்னேரத்தான்… வழக்கமான கடையிலதான் எடுத்தனான்.. நல்லா இருகும் செல்வா..
சரி வா.. சாப்பிடுவம்..
சாப்பிடும்போது பொம்மனிடம் கேட்கவென பிடித்து வைத்த கேள்விகளை திறந்துவிட்டான் செல்வா..
உனக்கு வீடு சொந்தம் எதுவுமே இல்லையா பொம்மன்..
இல்லை செல்வா. எங்கே எப்படிப் பிறந்தேன் என்று தெரியாது. ஆனால் தெரிவோரத்திலும் நிலக்கீழ் ரயில் தரிப்புகளிலும் வளர்ந்தேன் என்று மட்டும் தெரியும்.. அங்கிருந்துதான் இங்கே கூட்டி வந்தாங்க.. எந்நாடு செய்யாததை நீங்கள் செய்ததுதான் என் வாழ்க்கை.. உங்களுடந்தான் என் வாழ்க்கை..
கழகம் தொடர்புபட்ட அனைத்து வேலைகளிலும் அவன் காட்டிய ஈடுபாடு செல்வாவின் நெற்றியில் போட்ட முடிச்சு அவிழ்தது. கழுத்தில் விழுந்து பேச்சை நிறுத்தியது.. ஆழமான அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான் செல்வா. இடைக்கிடை சாப்பிட்டார்கள். மற்றப்படி பலதும் பத்தும் பேசினார்கள். பேசிப் பேசி நேரம் அதிகாலை ஆகிவிட்டிருந்தது. காலை எட்டுமணிக்கு செல்வாவுக்கு பிளைட். இப்ப உறங்கினாத்தான் சரி. அதை பொம்மனிடம் சொல்லி விட்டு தனது தொலைபேசி இலக்கச் சுட்டிப்புத்தகத்தை கொடுத்தான்..
பொம்மன் உன் பேரையும் அலைபேசி இலக்கத்தையும் இதுல எழுது.
எனக்கு எழுதத்தெரியாது – எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் சொன்னான் பொம்மன்..
செல்வாவின் மனதில் திடீரென்று ஒரு பிரவாகம்.. பழகிய யாவருக்கும் நினைவுப் பரிசு கொடுத்துப் பழக்கப்பட்டவன். பொம்மனுக்கு எதுவும் கொடுக்க இயலவில்லை என்ற குறுகுறுப்புடன் இருந்தவன் சுறுசுறுப்பானான்..
வா… உன் பேரை உனக்கு எழுதப்பழக்குகிறேன்..
அவனது மறுமொழிக்கு காத்திருக்காது கோப்பிலிருந்த ஒரு வெற்றுக்காகிதத்தை உருவி எடுத்து பொம்மன் என்பதை தமிழில் எழுதினான் செல்வா. எழுதிய தாளைக் கையில் கொடுத்தபோது மலங்க மலங்க முழித்தான் பொம்மன். ம் எழுது… என்ற செல்வாவின் மந்திரத்தில் கட்டுண்டு பேனையை கையில் எடுத்தான். ஏதோ ஒன்று உடலில் பாய்ந்த உணர்வை வெளிப்படித்தினான். அதை எப்படிச் சொல்ல… அறியாத தாய் ஆசீர்வதித்தது போல.. உயிர் பிரியும் தருணத்தில் அன்புக்குரியவரின் ஆதூரம் கிடைத்தது போல.. இப்படியானவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.
சில நிமிடங்கள் செலவழித்து எழுதியபின்னர் தாளைத் திருப்பித்தந்தான். கோணல் மாணலாக தூறல் மழை மண்ணில் தீட்டிய ஓவியம் போல அவனது பெயர் தமிழில் மின்னியது. செல்வாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் முகத்தில் மலர்ந்த புன்னைப்பூவால் பொம்மனின் முகத்தோட்டம் மலர்ந்தது. மின்னலடித்தது.. அந்த மின்னலில் செல்வாவின் கண்கள் இருட்டுக் கட்டின.. பார்வையைத் திருப்பி தாளின் மறுபுறத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட அளவில் அவனது பெயரை எழுதினான் செல்வா.. அதை மீண்டும் பொம்மனிடம் கொடுத்தான்..
இதுக்கு மேல கன தரம் எழுதிப்பழகு.. பிறகு வடிவாக எழுத வரும்.
சொல்லி விட்டு செல்வா படுக்கப் போய்விட்டான்.. அசதியோ இல்லை திருப்தியோ ஏதோ ஒன்று நல்ல உறக்கத்தைக் கொடுத்தது.. ஆனாலும் நேரம் சதி செய்தது.. அலார அரக்கன் அடித்து எழுப்ப துடித்து எழுந்தான்..
தயாராகி வெளியே வந்தபோது பொம்மன் விழிப்பாக இருந்தான். கண்மடல் திறந்து இரவுதனைக் குடித்திருப்பான் போலும். செவ்வந்தியாக நிறந்திருந்தன அவனது கன்கள். அவன் கையில் இருந்த காகிதம் கலகலத்தது. காத்திருந்தவன் போல் காகிதத்தை காட்டினான்.. செல்வாவின் எழுத்துக்கு மேலாக பல கோடுகள்.. பொம்மனை ஆழமாகப் பார்த்தான்.. அடுத்த பக்கம் பாருங்கள் என்று சொன்னது போல உணர்ந்தான். திருப்பினான்.. மணிமணியாக பொம்மன் நிறைந்திருந்தான்.. இதனால்த்தான் காகிதம் கலகலத்ததோ என்று நினைத்துக்கொண்டான்.. பார்வையாலே தட்டிக்கொடுத்தான்.. பொம்மனிடம் பேனாவை நீட்டினான்.. பெட்டியை எடுத்துக்கொண்டு பேனாவை வாங்காமலே புறப்பட்டான் செல்வா.. தன் பெயரை விரல்களால் தடவியபடி செல்வா சென்ற திக்கை பார்த்தபடி நின்றான் பொம்மன்..