நாளொரு குறள் – 55

நாள் : 59
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் : 9

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

நம்மை புகழ்வோரும் உண்டு. இகழ்வோரும் உண்டு.

நம்மை நேரடியாக இகழ்வோரை பல சமயங்களில் நாம் கண்டு கொள்வதே இல்லை.

சில சமயங்களில் நம்மை இகழ்வோர் முன் நாம் பீடு நடையும் போடுவோம்..

இன்றைய தேர்தலில் வெல்லும் கட்சிகள் எதிர்கட்சிகளின் விமர்சனங்களை துச்சமாய் எண்ணி, பாராட்டு விழாக்கள் நடத்திக் கொண்டாடுவது போல பீடு நடை இருக்கும்.

அதற்குப் பிண்ணனியில் என்ன இருக்கும்?

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணிற்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள்.

கர்வம் கொண்ட ஒவ்வொரு ஆணின் பின்னாலும் அதே போல் ஒரு பெண் இருக்கத்தான் செய்கிறாள்.

ஒரு மனிதன் தன்னை இகழ்வதை பொருட்படுத்துவதில்லை.

காரணம் இருக்கிறது. தான் சரியெனக் கருதுவதையே எந்த மனிதனும் செய்கிறான். அவனின் ஒவ்வொரு செயலுக்கும் அவனளவிளான ஒரு தர்ம காரணம் இருக்கிறது.

எனவே தன் மனசாட்சிப்படி நடக்கும் எந்த மனிதனும் தன்னை பிறர் இகழ்கின்றனரே என கூனிக் குறுகுவதில்லை. நான் செய்தது சரிதான் என்ற கர்வம் அவனுக்குள் இருக்கும். பீடு நடை போடுவான்.

அதே சமயம் நற்காரியங்களை, புகழ்தரும் காரியங்களை செய்யாத குடும்பத்தைப் பெற்றவருக்கு பீடு நடை இருக்காது.

ஒவ்வொருவரும் தமக்கு சிறந்த வக்கீலாகவும், பிறருக்கு நீதிபதிகளாகவும் இருக்கின்றனர்.

தன் செயல் என வரும்பொழுது வாதாடும் ஒருவன், குடும்பத்தாரின் இகழீட்டும் செயல்களால் குறுகித்தான் போகிறான்.

இகழீட்டும் குடும்பம் பெற்ற ஒருவன், தன் இகழ் தாங்குதல் போல் அதைத் தாங்க இயல்வதில்லை.

புகழீட்டும் குடும்பம் பெற்ற ஒருவன் தன் இகழ்களையும் மறந்து தலை நிமிர்ந்து நடக்கிறான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். புகழ்சேர்க்கும் மனைவி பெறுதல் தலை நிமிரவைக்கும். பொருள் மட்டுமே சேர்க்கும் மனைவி வாழ்க்கைக்கு பொருள் சேர்ப்பதில்லை.