நாளொரு குறள் 67

நாள் : 67
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் :7

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

போன இரண்டு மூன்று செய்யுள்கள் கொஞ்சம் எளிமையாகவே இருந்தன. இது பார்க்க எளிமை என்றாலும் இதில் ஒரு நுட்பம் இருக்கு.

தந்தை மகனுக்கு செய்ய வேண்டியது என்ன?

சபைகளில் அவன் முதலிடத்தில் போற்றப்படுபவனாக இருக்கச் செய்வதே தந்தை மகனுக்கு செய்ய வேண்டியது.

சபைகளில் முதலிடம் பெற சிலபல தகுதிகள் தேவை.

அறிவு – மிகச் சிறந்த அறிவுள்ளவனாக இருத்தல் வேண்டும்
பண்பாடு – மிகச் சிறந்த பண்பாடு பெற்றவனாக இருத்தல் வேண்டும்
திறமை – பெரும் கூட்டங்களை வசப்படுத்தும் திறமை பெற்றவனாக இருத்தல் வேண்டும்

இப்படித் தேவையான அனைத்தையும் பெற்றவன் தரவேண்டும்.

சரி அதெல்லாம் விடுங்க ஒரு சொல் கண்ணை உறுத்துகிறதா? கண்டிப்ப உங்கள் கண்ணை உறுத்தாது எனக்கு தெரியும். ஏனென்றால் நீங்கள் மேலோட்டமாய் படிப்பவர்கள்.

மனதில் ஆழ்ந்து வாங்கிப் படிப்போருக்கு இந்த வார்த்தை உறுத்தும்.

தந்தை மகற்காற்று “நன்றி”

நன்றி என்பது என்ன? யாராவது நமக்கு உதவினால் அவருக்கு பதில் உதவி செய்தால் அது நன்றி.

பிறந்த குழந்தை நமக்கு என்ன உதவி செய்தது. வளர்க்கும் தந்தைக்கல்லவா மகன் நன்றி செய்ய வேண்டும்.

பிறந்ததே தந்தைக்கு மகன் செய்த பேருதவி என்கிறார் வள்ளுவர் இங்கே.

அப்படி என்ன பேருதவி? மூன்று காரணங்கள் உண்டு

1. பிறவியே ப்ரோபராகர்த்தம் அதாவது பிறருக்கு உதவ. அப்படி இருக்க நமக்குப் பின்னால் நம் கடமையை எடுத்துச் செய்வதற்காக பிறந்ததால் நாம் நன்றிக்கடன்படுகிறோம்.
2. புத்திரனைப் பெறாதோருக்கு இறப்பின் பின் செய்யப்படும் பித்ரு கருமங்கள் செய்யப்படாது. அவற்றைச் செய்யப்பிறந்தவன் அவன் என்பதால் அவன் பிறப்பில் நாம் கடன்பட்டு விடுகிறோம்.
3. குழந்தை இல்லோருக்கு சபையில் இடம் கிடைப்பது கடினம். தன் பிறப்பினால் அதைக் கொடுத்ததால் மகனுக்கு அவன்பிறப்பில் நாம் கடன்படுகிறோம்.

அதனாலேயே நன்றி என்ற வார்த்தையை உபயோகிக்கிறார் வள்ளுவர்