ஓயாத அலைகள்

பொங்கி எழுந்த பென்னம்பெரிய ஆழியின் அலைகளுடனும்
பொருதியபடியே மங்கிய நிலாவொளியில் குடாரப்பு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.

நஞ்சணிந்த வஞ்சினம் கொண்ட நெஞ்சினிலே “வெல்வோம் வெல்வோம்” எனும் நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் விஞ்சியே நின்றாலும்
Sea sickness காரணமாய் படகிலிருந்த போராளிகளில் பலர் களைப்படைந்திருந்தனர்.

போராளிகளில் சிலர் சத்தி எடுத்ததால் மேலும் சோர்வடைந்தனர்.

ஆதலால் களமருத்துவர்களாகிய எங்களின் பணி விசைப்படகிலேயே ஆரம்பித்திருந்தது.

சத்திக்காக(Vomiting )அல்லது குமட்டலுக்காக( Nausea) கொடுக்கப்படும் அனைத்துமே சத்தியை நிறுத்திவதுடன் நித்திரையைத் தூண்டக் கூடியது என்பதால் மாத்திரைகளைக் கொடுக்கவும் முடியாமல் திண்டாடினோம்…..”

அதே நேரம் கடலில் உண்டாகக் கூடிய அனேக விடையங்களை முன்னரே கருத்தில் கொண்ட கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சில ஆலோசனைகளையும் எமக்கு சொல்லியிருந்தார்.

தமிழர் கடற்படையின் தளபதி முன்னரே சொன்னது போல “கடல்நீரால் வாய் கொப்பளிக்க செய்துவிட்டு எம்முடன் எடுத்துச் சென்ற பெப்சி(Pepsi) சோடாக்களை (Beverage) குடிக்கக் கொடுத்தோம்.

தலைச்சுற்றும், சத்தியும் சத்தியால் உண்டான உபாதைகளுக்கும் தீர்வு கொஞ்சம் கொஞ்சமாய்க் கிடைக்கத் தொடங்கியதால் ஆனையிறவுக்கான பாதை கண்ணில் தெரிந்தது.

மரபு வழி இராணுவ உத்திகளுடன் கூடவே மாத்திரைகளோ அல்லது குளிசைகளோ இல்லாத பரிகாரங்களைச் சொல்லியே எமக்கு கைலாகு கொடுத்து கைகாட்டி அனுப்பி வைத்த சூசை அண்ணரை நடுக்கடலில் வியப்புடனும் அன்புடன் அடிமனதில் நினைந்து கொண்டோம்.