கபடன் கற்ற உண்மை

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் கபடன் என்றொரு திருடன் வாழ்ந்து வந்தான். நீண்ட நாட்கள் எதுவும் கிடைக்காததால் தக்க தருணத்துக்காகக் காத்திருந்தான். ஒரு நாள் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து அவனும் அவர்கள் பின்னால் சென்றான்.

அடடே என்னே வியப்பு! அடர்ந்து படர்ந்த பூந்தோட்டம். நடுவில் குளுமையான குளம். குளத்தில் நன்கு கொழுத்த மீன்கள். அந்த அழகிய பூவனத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக ரசிக்க கபடன் கண்ணோ குளத்தில்; நினைப்பெல்லாம் மீன்; “கொழுத்த இந்த மீன்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும்” என்று கணக்குப் போட்டான். பொழுது சாய பூந்தோட்டம் பூட்டும் நேரம் வந்தது. மக்கள் பூந்தோட்டத்தை விட்டு வெளியேறினர். கபடனோ நன்கு சடைத்த பூங்கன்றுகளுக்குள் மறைந்திருந்தான். கதவுகள் பூட்டப்பட்டன.

நன்கு இருட்டும் வரை கபடன் காத்திருந்தான். காரிருள் சூழ்ந்ததும் கபடன் மறைவை விட்டு வெளியில் வந்தான். குளத்தை அடைந்தான். குளத்தை ஒட்டி இருந்த அலங்கார மின்குமிழ் உமிழ்ந்த மெல்லிய வெளிச்சத்தில் குளத்து மீன்கள் மின்னின.

“இன்று நல்ல வேட்டைதான்.. இந்த மீன்களைப் பிடித்து விற்க வேண்டியதுதான்” என்று நினைத்தபடி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினான். அட..! பொல்லாத மீன்கள்! கபடன் பிடிக்கத் தொடங்கியதும் எகிறிக் குதித்து தொப் தொப் என்று தண்ணீரில் வீழ்ந்தன. கபடனிடம் அகப்பட்ட மீன்கள் துள்ளிக் குதித்து பெரிய தொப்புடன் குளத்தில் வீழ்ந்தன. சத்தம் கேட்டு பூந்தோட்டக் காவலர்கள் ஓடி வந்தனர்.

காவலர்கள் வருவார்கள் என அனுமானித்த புத்திசாலிக் கபடன் புதருக்குள் ஒழிந்து கொண்டான். காவலர்கள் கண்ணில் படாமல் எப்படி வெளியேறுவது என்று யோசித்தான். காவலர்கள் கண்ணின் அகப்படாமல் போவது சாத்தியமில்லை என்றுணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தூரத்தில் எரிந்து சாம்பலான விறகைக் கண்டான். திட்டம் ஒன்று அவன் மூளையில் “பளிச்”சிட்டது.

சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசிக் கொண்டான். பெரியதொரு மரத்தடியில் சாய்ந்து படுத்தான். நெடு நேரம் உறங்காததால் சற்றுக் கண்ணயர்ந்தான். சற்று நேரத்தில் குசுகுசுக்கும் குரல்கள் கேட்க உறக்கம் கலைந்தான். கண்ணைத் திறக்காமல் உதடுகளை அசைத்தான். தியானத்தில் இருப்பது போல நடித்தான்.

மகான் ஒருவர் பூங்காவில் இருப்பதாகச் செய்திப்பரவ மக்கள் திரண்டனர். கபடனை வணங்கினர். மக்கள் அவனுக்குப் பக்தியுடன் மதிப்பளித்தனர். கபடன் நெகிழ்ந்தான். தன்னை திட்டியவர்கள் எல்லாரும் தன்னை மதிப்பதைக் கண்டு நெக்குருகினான். மனம் மாறினான். களவு போன்ற கெட்ட குணங்களை விட்டொழித்து நல்லவனாக வாழத் தொடங்கினான்.