“இது பேரழிவுக்கான அடையாளம்!” – ஆஸ்திரேலியா வெப்பம் குறித்த பகீர் தகவல்

200

ஸ்திரேலியாவின் வரலாற்றில் ஜனவரி மாதம் மிக மோசமான காலகட்டமாக பதிவாகியுள்ளது. அதிகமான வெப்பம், காட்டுத் தீ மற்றும் சூழலியல் மாற்றம் போன்றவற்றால் ஆஸ்திரேலியா அவதிப்பட்டு வருகிறது. இது மிகவும் மோசமான தாக்கத்தை அங்கு ஏற்படுத்தியிருக்கிறது.

 முதல் முதல் முறையாக, ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை விட அதிகமாகவும், சில இடங்களில் அதற்குக் கொஞ்சம் குறைவாகவும் இருந்ததாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் டிசம்பர் மாதங்களில் இருந்தே அதிகமான வெப்பம் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் வரைபடங்களைக் கொண்டு ஒரு சிறப்பு அறிக்கையைத் தயாரித்துள்ளனர். வரைபடங்களில் அதிகமான வெப்பம் கொண்ட இடங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தது.

ஆஸ்திரேலியாவின் தஸ்மேன் கடலில் தொடர்ச்சியான உயர் அழுத்தம் கொண்ட அமைப்பு, நாட்டின் தெற்குப் பகுதியை அடைந்து குளிர்ச்சியான காற்றைத் தடுத்தது. அதனால் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் தாமதமான பருவமழை, வெப்ப மண்டலத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. காலநிலை மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுவதில்லை. காலநிலை மாற்றம் உருவாகப் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். கடந்த 100 ஆண்டுகளில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

வெப்பமயமாதலும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. தென்கிழக்கு கடற்கரையில் உள்ள அகஸ்டா மாகாணத்தில் அங்குள்ள தெர்மோமீட்டர்களில்  49.5டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. ஆனால் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பர்ட்ஸ்வில்லா (Birdsville) நகரில் தொடர்ந்து பத்து நாட்களாக 45 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பம் பதிவாகியிருக்கிறது.

கடந்த மாதம் முழுவதும் ஆஸ்திரேலியா, தாஸ்மேனியா தீவில் வறண்டச் சூழல் நிலவுவதால் காட்டுத் தீ ஏற்பட்டன. அங்கு அவசரக் கால நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.  வடமேற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போரோனா டவுன்ஸ் விமான ஓடுதளத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பொதுவாக இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவவில்லை. இது சுற்றுச்சூழலின் மிகப்பெரிய தாக்கமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் அதிகப்படியான வறட்சிதான். ஆஸ்திரேலியாவின் பெரிய பகுதிகளும் வழக்கமான மழைக்காலங்களில் 20 சதவிகிதம் மட்டுமே மழையைப் பெற்றது. குறிப்பாகத் தென் ஆஸ்திரேலியாவின் பகுதிகளான விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் குறைந்த அளவு மழைப் பொழிவை பெற்றுள்ளது. அங்கு வழக்கமான மழைக்காலங்களில் அதிகமான மழைப் பொழிவு இருக்கும்

ஆஸ்திரேலியா

மேற்குப் பகுதியில் உள்ள மெனின்டீ (Menindee) நகரில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக 47டிகிரிக்கும் மேல் வெப்பநிலை இருந்தது. இதனால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமான மீன்கள் டார்லிங் ஆற்றில் இறந்து மிதந்தன. வெப்பநிலைக்கு உள்ளூர் மீன்களும் தப்பவில்லை. ஆஸ்திரேலிய வானிலை அதிகாரிகள் வெப்ப அடுக்கு மாற்றத்தால் ஆக்ஸிஜன் குறைவானதால் மீன்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் தலைவர் பில் ஷார்டன் (the Labor leader, Bill Shorten) பேசும்போது, “இதை ஒரு சுற்றுச்சூழல் பேரழிவிற்கான அம்சமாகத்தான் பார்க்க வேண்டும். இது நிலையானது அல்ல, இதனால் பேரழிவுகள் நிகழும் வாய்ப்புகள் அதிகம். மீன்கள் இறந்ததற்கான காரணங்களை வைத்து அப்படித்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்.

மேற்குப் பக்கத்தில் உள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத்  வேல்ஸ் மாகாணங்களில் இன்னும் 40 நாட்களுக்குத் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ் அளவான வெப்பம் நீடிக்கும்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த மாதம் வெளியான அதன் அறிக்கையில், ‘வெப்ப வானிலை மற்றும் வறட்சி நீண்ட காலங்களுக்கு இருக்கும்’ என்று சொல்கிறது.

காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு இயக்குநர் ஹெலன் க்ளூப் (Helen Cleugh) “ஆஸ்திரேலியா ஏற்கெனவே காலநிலை மாற்றத்தை அனுபவித்து வருகிறது. பல துறைகளிலும் வெப்ப நிலையின் தாக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன” என்கிறார்.
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுப்பிக்கப்படும் அவர்களின் ஆய்வில், ஆஸ்திரேலியாவின் வறண்டப் பருவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்குள் இது கடுமையானதாக மாறும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு ஆஸ்திரேலியாவில் அதிக வறண்ட நிலைமைகளுக்கு மாறும். கடல் மட்டங்கள் ஏற்கெனவே 20 செ.மீ உயர்ந்துள்ளன. கடல் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதனால் கடல் அமிலத் தன்மைக்கு உள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. 300 மில்லியன் ஆண்டுகளில் 10 மடங்கு வேகமாக ஆஸ்திரேலிய பவளப்பாறைகள் சேதமடைந்துள்ளன.

ஆஸ்திரேலியா

PC – Daily Express

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தளவுக்கு மோசமானதாக இருந்ததே இல்லை. இனியும் மோசமான நிலைக்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது, வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியத்தைக் காட்டுகிறது.

உலகின் சமநிலையான சூழ்நிலையால் மட்டுமே இங்கு உயிர்கள் வாழும் என்பதுதான் இயற்கையின் நீதி. அறிவியலின் வளர்ச்சி வானத்தை முட்டிப் பிளந்தாலும், இயற்கையின் முன்னர் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலியா நிகழ்வு ஓர் சிறந்த உதாரணம்.

தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை உலகம் முழுவதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் எல்லாச் சூழலியலாளர்களும் உலக அரசாங்கங்களை உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசாங்கங்கள் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கின்றன.