ஆறும் அறுபதும்.. காலக் கணக்குகளும்… வாழ்க்கை நோக்குகளும் – 03

1 நிமிடத்திற்கு அறுபது வினாடிகள்.
1 நாளுக்கு அறுபது நாழிகைகள்
 
 
மொத்தம் 60 ஆண்டுகள் என அறுபது காலக் கணக்கில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று.
 
 
ஒரு நாளை 12 ஆகப் பிரிப்போம்..
 
2 மணி நேரம் ஒரு இலக்கினம் அதாவது ஒரு இராசிமண்டலம் அதாவது வானப்பகுதியின் 30 பாகைகள்.
 
 
இரண்டு இலக்கினங்கள் சேர்ந்தால் ஒரு பொழுது.
 
அதாவது ஒரு பொழுதுக்கு 4 மணி நேரம்..
பகலில் மூன்று பொழுது, இரவில் மூன்று பொழுது ஆக ஆறு பொழுதுகள்
 
காலை, மதியம், மாலை, முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என ஆறு பொழுதுகள்..
 
 
பகல் இரவு என இரண்டு வகை.
 
சரி ஒரு வருடத்தை எடுத்துக் கொள்வோம்
 
அதிலும் 12 மாதங்கள் (12 லக்கினங்கள்)
 
ஆறு பொழுதுகள் போல ஆறு பருவங்கள்
 
கார்காலம், குளிர்காலம், வசந்தகாலம், இளவேனில், முதிர்வேனில், இலையுதிர்காலம்
 
இரண்டு அயனங்கள், இரவு பகல் போல..உத்தராயணம், தட்சிணாயினம்..
 
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இவை உத்தராயணம்
 
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இவை தஷிணாயனம்
 
இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி
 
நன்கு கவனியுங்கள் பின்பனிக் காலத்தில் ஆரம்பிக்கிறது உத்தராயணம். நமது விடியலும் அப்படித்தான் குளிராகவே இருக்கிறது…
 
அதன் பின் வருவது கோடை,, அதாவது மதியம்…இள்வேனில் எனலாம்
 
அதன் பின்வருவது முதுவேனில் அதாவது மாலை.. முதுவேனிலின் இறுதியில் மழை பெய்யும். அதே போல் பகல் முழுதும் வெயிலடித்து மழை மாலையின் இறுதியில் வரும்..
 
இதன்பின் தஷிணாயனம் ஆரம்பமாகிறது. அதாவது இரவு ஆரம்பமாகிறது..
 
முன்னிரவு என்பது மழைக்காலத்திற்கு சரியாகிறது
 
நள்ளிரவு என்பது முன்பனிக் காலமாகவும்
 
விடியல் என்பது பின்பனிக் காலமாகவும் இருக்கிறது.
 
அதாவது ஒரு நாளைப் பிரித்த விதத்திலும் ஒரு ஆண்டைப் பிரித்த விதத்திலும் ஒற்றுமை இருக்கிறது..
 
அதுக்கு இந்தப் படத்தைப் பாருங்க…
 
 
 
 
மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு மிகுந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. போர்வைக்குள் பதுங்கும் விடியற்காலம் போல.
 
முதல் 2 மணிநேரம் போல அதாவது தை மாதக் குளிருக்கு போர்த்துதல் போல முதல் 10 வருடங்கள் குழந்தையாக பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறான். காலை 6 லிருந்து 8
 
அடுத்த இரண்டு மணிநேரம் போல அதாவது காலையில் பணிகள் ஆரம்பம் செய்வதைப் போல, அடுத்த 10 வருடம் மாசி மாதம் வசந்தத்தை அனுபவிக்கிறான். மலர்கிறான்..8 லிருந்து 10 வயது 20 வரை
 
அடுத்து பங்குனி வெயில் ஆரம்பிக்கும் காலம். அதாவது 10 மணி முதல் 12 மணிவரை… இந்தப் பத்துவருடங்கள் கல்யாணம் ஆகி சூடு ஏற ஆரம்பித்து விட்டது. 20 லிருந்து 30 வரை
 
அடுத்து சித்திரை மாதம், அதாவது 12 மணி முதல் 2 மணி வரை அதாவது 30 லிருந்து 40 வயது வரை.. கடுமையாக உழைக்க வேண்டிய காலம். வெயில் ஏறுவதைப் போல பொறுப்புகளும் கூடி வியர்த்து விடுகிறது.. கத்திரி வெய்யில் மண்டையைப் பிளக்கும் காலம்.
 
அடுத்து வைகாசி கத்திரி வெய்யில் உக்கிரம் தாண்டி மழை ஆரம்பிக்கும் காலம். அதாவது மகன் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலம்… 40 லிருந்து 50 வரை அதாவது 2 லிருந்து 4 மணி வரை.. வெயில் குறைய ஆரம்பிக்கிறது..
 
அடுத்து ஆனி மாதம்.. மழைக்காலம் 4 லிருந்து 6 மணிவரை நமக்கு. நமது மகன் சம்பாதிக்கிறான். பணம் மழையாய் கொட்டுகிறது…வயது 50லிருந்து 60 வரை.. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்
 
இது முடிந்து இரவு ஆரம்பமாகிறது. தட்சிணாயனம் ஆரம்பமாகிறது.. அதாவது நமது இரண்டாம் அறுபது வருட சுழற்சி ஆரம்பம்..
 
60 லிருந்து 70 வரை ஆடிமாதம் போல.. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அது மாதிரி நல்லவைகளை மனதில் விதைத்துக் கொள்ள வேண்டிய காலம். இரவு என்பது நான் உறங்க வேண்டிய நேரம். அதாவது இவ்வளவு காலம் இருந்த நான் என்ற அகந்தை உறங்க வேண்டிய காலம்.
 
70 லிருந்து 80 வரை ஆவணி மாதம் போல.. ஆடியும் ஆவணியும் தென்மேற்கு பருவக்காற்று காலம், விதைத்து பயிர்வளர்ப்பது போல ஆன்மீகம் நம்மில் விதைக்கப்பட்டு வளரவேண்டிய காலம். மாலை 6 லிருந்து 10 வரை தூங்கத் தயாராகி விடுகிறோம் அல்லவா
 
80ல் இருந்து தொண்ணூறு வரை, தொண்ணூறிலிருந்து 100 வரை இவை இரண்டும் அடை மழைக்காலம். நள்ளிரவு 10 லிருந்து 12, 12 ல் இருந்து 2 வரையிலான காலம். அகந்தை அழிந்து நம்மை மறந்து அடை மழையாய் உலகிற்கும் அன்பும் நல்வழியும் அளவான அறிவுரைகளாய் தரும் காலம்.
 
100 லிருந்து 110, 110 ல் இருந்து 120 இரண்டும் விடியற்காலம். கார்த்திகையும் மார்கழியும் இறைவனின் மாதங்களாக கருதப்படுகின்றன்..
 
மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். விடியற்காலம் 4-6 ப்ரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இது ஞான ஒளி பிரகாசிக்க பரம ஞானம் பெறும் காலமாகும்
 
அதாவது நாள், வருடம், மனித ஆயுள் மூன்றிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது நமக்கு இன்றுதான் புரிகிறது..
 
ஒரு முழு நாள், ஒரு முழு வருடம் ஒரு முழு வாழ்க்கை என்ன என்பதும் விளங்குகிறது..
 
இத்தனையும் இங்கேதான் இருந்தது நமக்குத் தெரியாமல்..