சீனப்புத்தாண்டின் நேரடித் தமிழ்பெயர்ப்பு வசந்த விழா என்று சொல்லப்படுவதுண்டு. சீனப்பருவ காலத்தில் வசந்த காலம் மலர்ந்த பின்பு வருகின்ற முழுமதி நாளில் சீனப் புத்தாண்டு வரும்படி சீனாவின் பாரம்பரிய நாள் காட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. மிருகங்களின் பெயர் கொண்டு அழைக்கப்படும் இப்புத்தாண்டு வசந்த காலப் பருவம் பிறந்ததை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது.
அதே போல் தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் விளைச்சல் வீடு வந்து, செல்வம் கொழித்து, மகிழ்வு கொப்புளிக்கும் வேளையில் கொண்டாடப்படுவதும் வசந்த விழாவே. அதைச் சிலர் பொங்கல் விழாவுடன் ஒப்பிட்டாலும், பொங்கல் விழாவின் இதயமான நன்றி நவிலல் அதில் இல்லாததால் வசந்த விழா என்பதே மிகவும் பொருத்தமானதாகும். இதுவே உறுதிப்படுத்தப்பட்டதுமாகும். அவ்வளவு ஏன் வட இந்தியாவில்க் கொண்டாடப்படுகிற ஹோலிப்பண்டிகை வசந்த விழாதான் தெரியுமா?
மலர்ந்த மனதில் மணக்கும் எண்ண வண்ணங்களை வெளிப்படுத்தவும், வண்ணக் கனவுகள் நிஜமாகிவிட்ட வசந்ததைப் போற்றவும், கடந்து விட்ட வசந்தங்களை மீளக் கடந்தி வந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் என கொண்டாடுப்படுவதே ஹோலி. சுருங்கச் சொன்னால் ஹோலியில் பூசப்படும் நிறங்கள் வசந்த கால வண்ணக் கனவுகளே.
எனவே தங்கள் வண்ணக் கனவுகளைச் சாயங்களாக்குவதும், அவற்றை மற்றவர் மீது பூசி தமது கனவுகள் நிறைவேறப் போகிறது; வாழ்வில் வசந்தம் வீசப் போகிறது என்று சொல்லும் குறியீடாகவும் ஹோலியைக் காணலாம். அதே நேரம் வட இந்தியாவில் பருவ காலங்களில் ஒன்றான வசந்த காலமாதலால் அதற்கான வரவேற்பு விழாவாகவும் ஹோலியை நோக்கலாம். முடிவாகச் சொல்வதானால் ஹோலியின் தமிழ்ப்பெயர் வசந்த விழாவே.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் ஆரிய இனம் எனச் சொல்லப்படுகிற வட இந்தியர்கள் ஹோலியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை. அவ்வளவு ஏன்? அவர்கள் சித்திரை முதலை கூடப் புத்தாண்டாகக் கொண்டாடுவதில்லை. பைசாகி எனும் பெயரில் கொண்டாடுகிறார்கள் எனச் சொல்லப்பட்டாலும் “பைசாகி”யை பெரியளவில் கொண்டாடுபவர்கள் சீக்கிய இனத்தவரே.. அதேவேளை தெலுங்கில் யுகாதி என்றும் கேரளத்தவர்களும் கொண்டாடுகின்றனர். இந்த இடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. “ஆரியர்கள் கொண்டாடாமல் இருக்கையில் தமிழர் மட்டும் ஏன் சித்திரை முதலை புதுவருஷமாகக் கொண்டாடினர்”
தொன்மத் தமிழன் பண்டிகை ஒன்றைக் கொண்டாடினானா? அதை புதுவருஷம் என திரிந்த ஆரியம் திரித்ததா? ஆம் எனில் தொன்மத் தமிழன் கொண்டாடிய அந்தப் பண்டிகை என்ன? வசந்த விழாவா?
ஆம்… சிலப்பதிகாரத்தில் சித்திராபௌர்ணமி அன்று வசந்த விழாக் கொண்டாடப்பட்டதாக இளங்கோ அடிகள் பதிவு செய்திருக்கிறார். அதை காதலர் விழாவாகவும் வரித்து இந்திரவிழா எனப் பெயர் சூட்டியும் உள்ளார். (காதலர் தினத்தை முதலில் கொண்டாடினதும் தமிழன் தான் பாருங்கோ) இந்தக் காலத்தில் தொன்மத் தமிழனின் மரபுக் கலைகளுடன், பல கொண்டாட்டங்கள் பங்குனி, சித்திரையில் நடைபெற்று வருவது எம் கண்கூடு.
தமிழீழத்தின் வல்வையில் சித்திரையில் நடைபெறும் வசந்த விழா.. இணுவிலில் நடைபெறும் வசந்த விழா.. கடலோர ஊர்களில் நடைபெறும் வசந்த விழா… மற்றும் பல் பிரதேசங்களில் நடைபெறும் வசந்த விழா எல்லாமே சித்திரையில் நடைபெறுவதையும் நாம் கவனிக்க வேண்டும். அத்தைகயதொரு வசந்த விழா வயவையூரிலும் நடைபெற்றுள்ளது.
ஆம்.. சித்திரை ஒன்றில், புதுவருஷம் கொண்டாடிய அன்றைய நாளில், மடை என்ற பெயரில் வசந்த விழா கொண்டாடப்பட்டது இன்றும் என் மனச்சுவரோவியமாய் கீறப்பட்டுள்ளது. (அதை அடுத்த கிழமை காண்போம்).
ஆக, சித்திரையில் பண்டைத் தமிழன் வசந்த விழாக் கொண்டாடி உள்ளான். இடையில் வந்த ஆரியன் இனவழிப்பு செய்யும் நோக்கில் அதை திரித்து சித்திரை ஒன்றில் புதுவருஷமாக்கி உள்ளான். இதன் இன்னொரு பக்கமாக தமிழனின் புத்தாண்டாம் தை முதலை அழிக்க முனைந்துள்ளான். ஒற்றைத் துப்பாக்கியில் இரட்டை இலக்கு வைத்துள்ளான். தை முதலை தமிழன் புத்தாண்டாக்கி ஆரியச் சூழ்ச்சியை முறியடித்த நாங்கள், சித்திரை ஒன்றைக் கொண்டாடாது விட்டால் ஆரியத்தின் சூழ்ச்சி வென்றதாகி விடும். அதற்கு நாம் இட்ங்கொடலாகாது.
தமிழீழத்தில் கூட சித்திரை ஒன்றைக் கொண்டாடத் தடை இருந்ததாக நான் அறியவில்லை. சித்திரை ஒன்றை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லப்பட்டதாகவே அறிந்தேன். எனவே சித்திரை ஒன்றைக் கொண்டாடுவோம். புது வருஷமாக அல்ல.. வசந்த விழாவாக,,
சித்திரை ஒன்றில் வயவையூரின் வசந்த விழாவில் சந்திப்போம்