நாளொரு குறள் 48

247

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :8

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

மற்ற அனைத்து இயல்பு மக்களும் ஒரு தன்மை வாய்ந்தவர்கள். இல்லற வாழ்க்கை கொண்டவம் இருதன்மை வாய்ந்தவன்.

துறவியோ, சன்னியாசியோ, வனப்பிரஸ்தனோ தம் அறம் மட்டுமே பேணுபவர்கள்.

இல்லறத்தான் தன்னுடைய அறமும் செய்கிறான். பிற இயல்பினர் அறம் செய்வதையும் காக்கிறான்.

இல்லறத்தை தமிழ் பண்பாடு எவ்வளவு உயர்வாக வைத்திருந்தது என இது சொல்கிறது.

தானும் அறம் செய்கிறான். பிறர் செய்யும் அறத்திற்கும் துணை நிற்கிறான். அவனே இல்லறத்தான்.

அப்படிப்பட்ட இல்லறம் என்பது எந்தக் கடுமையான நோன்பையும் விட உயர்ந்ததாகும் என்கிறார் வள்ளுவர்.

தவம் என்பது சுயநலம் சார்ந்தது என்பதை வான்சிறப்பிலே சொன்னார் வள்ளுவர்.

தானம் என்பது பொதுநலம் சார்ந்தது. பிற இயல்பினர் தவம் செய்கின்றனர். இல்லறத்தான் தானம் செய்கிறான்.

தானமும் தவமும் என்று முன்னரே வள்ளுவர் முன்னால் வைத்தார் இல்லறப்பயனை.

இப்பொழுதும் அதை உறுதியாகச் சொல்கிறார்.

இதனால் இன்றைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு.

இல்லறத்தான், சன்னியாசிகளைப் பணிந்து எனக்கு அதைக் கொடுங்கள், இதைக் கொடுங்கள் எனக் கேட்பது… இல்லற தர்மத்திற்கே எதிரானது.

அப்படி தர்மத்தை மீறியதாலேயே பலப்பல போலிச் சன்னியாசிகளைப் உருவாக்கி இருக்கிறோம்.

இல்லறத்தானை விட உயர்ந்த சன்னியாசியோ, பிரம்மச்சாரியோ, வனப்பிரஸ்தனோ இல்லை.