லாகரிதம் (அ.மை – 20)

80

ஸ்காட்லாந்து. முர்சிஸ்டன் சிற்றரசு.
அதன் பதின்மூன்றாம் வாரிசு – ஜான் நேப்பியர்.
அரச வம்ச பிறப்புக்கேற்ப தம் ஆளுகைப் பகுதியை மேலாண்மை செய்வதிலும்
இன்னும் மத சம்பந்தப்பட்ட பணிகளிலுமே பெரும்பான்மை நேரத்தைச் செலவிட்டு வந்தார் நேப்பியர்.

இதற்கிடையில் அறிவியலுக்கு இரும் பெரும் கொடைகளையும் அளித்தார்.
அவை : நேப்பியரின் ‘ கணக்கெலும்புகள்’ மற்றும் லாகரிதம்.

எண்ணிக்கை கணிதத்துக்கு ஆரம்பகால கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்றுதான்
நேப்பியர் அளித்த ‘ கணக்கு எலும்புகள்’.
நீளமான மர உருளைகள். அவற்றில் பெருக்கல் வாய்ப்பாடுகளின் செதுக்கல்.
இவற்றை வரிசையாய் அடுக்கியபின் பல சிக்கலான பெருக்கல்களுக்கு நீள,
குறுக்கு வாசிப்பின் மூலம் சட்டென விடை காணும் சிறப்பான உத்தி இது.
நீண்ட பெருக்கல் தேவைப்படும் கணக்குகளுக்கு, இடையில் செய்ய வேண்டிய
பெருக்கல்களை தாவி, இறுதி விடைக்கு அழைத்துச்செல்லும் துரித வழி இது.

பின்னாளில் லாகரிதம் கண்டுபிடிக்கப்பட இதுவே முன்னோடி.

கணித வரிசை என்பது – 0,1,2,3,4,5,6…..
ஜியோமெட்ரி வரிசை என்பது -1,2,4,8,16,32,64.
இரண்டுக்கும் ஓர் உறவை நேப்பியர் கண்டு அதன் அடிப்படையில் லாகரிதத்தை நிறுவினார்.
ஜியோமெட்-ரி வரிசையின் அடிப்படை எண் : 2
4* 16 = 64
இதை 2 (To the power of 2) * 2 ( To the poer of 4) = 2 (to the power of 6).
அதாவது அடிப்படை எண் 2 -ஐ வைத்து, பவர்களை மட்டும் ( 2+4) மட்டும் கூட்டி
ஒரு கணக்கு முறையைச் சொன்னார்.
பெருக்கலை கூட்டல் ஆக்கினார் நேப்பியர்.
எண்ணிக்கை பெரிதாக பெரிதாக இம்முறை எவ்வளவு உதவியாக இருந்தது
என்பதை பயனாளர்கள் உணர்ந்தார்கள்.

எந்த எண்ணையும் 2 என்ற அடிப்படையின் ‘பவராக, மாற்றி எழுதலாம்
எனக் கண்டு சொன்னார் நேப்பியர்.
எடுத்துக்காட்டாய் , 10 = 2 (பவர்-3.32).

கடலில் பயணிக்கும் மாலுமிகள் – ஒரு கணக்கைப் போட்டு முடிக்க
1 மணி நேரமானால், அந்த விடையும் அத்தனை பிசகி இருக்கும்.
நேப்பியர் 1614-ல் வெளியிட்ட A Description of Marvelous Rules of Logarithm
நூலில் உள்ள அட்டவணைகள் மூலம், மாலுமிகள் அதே கணக்கை
சில நிமிடங்களில் முடித்தார்கள். பயணம் பாதுகாப்பானது.
1617-ல் நேப்பியர் மறைந்தாலும், அவரின் லாகரிதத்தை பெரிதும் மதித்த
ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஹென்றி ப்ரிக்ஸ் அந்த அட்டவணைகளை
10 -ன் அடிப்படையில் செப்பனிட்டு வெளியிட்டார்.

கால்குலேட்டர்கள் வரும்வரை கிளார்க் அட்டவணைகள் உள்ளிட்ட
பல வடிவங்களில் நேப்பியரின் லாகரிதமே கணித ராஜ்ஜியத்தின்
அரியணையில் இருந்தது.

 

ஆக்கம் – இளசு