அனேகமாக ஏழு மணிக்கே புட்டுக்கு மா குழைத்துவிடுவார் எங்கள் அம்மா!

பஞ்சகால பஞ்சு
விளக்கே ஏற்றி வைக்க முடியாத போர்க்காலத்தில் சில வேளை ஆறு மணிக்கே அம்மாவின் அடுப்படி வேலை நிறைவுக்கு வந்துவிடுவது உண்டு.

அப்பா வானொலிப்பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு முற்றத்தில் ஆரோகணித்திருப்பார்.

ஓயாமல் உழைத்து ஓய்வூதியம் பெற்ற அப்பாவின் ஒரே நண்பன் அந்த வானொலிப்பெட்டிதான்.

ஏழு மணிக்கு வெரித்தாஷ் வானொலி கேட்க சுற்றம் கூடும் எங்கள் முற்றத்தில் ஆனால் அம்மா மட்டும் அடுப்படியில் இருப்பாள்.

எட்டரை மணிக்கு புலிகளின் குரல் செய்தி கேட்க ஊரே கூடும் எங்கள் முற்றத்தில் ஆனால் அம்மா மட்டும் அடுப்படியில் இருப்பாள்.

ஒன்பது மணிக்கு இலண்டன் பி.பி.சி செய்தி கேட்க மீண்டும் ஒரு முறை முழு ஊருமே முத்தமிழ் முழங்கும் எங்கள் முற்றத்தில் கூடும் ஆனால் அம்மா மட்டும் அந்த நேரத்திலும் அடுப்படியிலேயே இருப்பாள்.

எத்தனை பரபரப்புச் செய்திகள் ஒய்யாரமாய்
ஒலிபரப்பானாலும் ஒன்றுமே அம்மாவின் காதில் ஏறியதே கிடையாது.

மாலைக்கருக்கல் கடந்தும் மாடாய் உழைத்துவிட்டு மாங்குளத்திலிருந்து காட்டுவழியால் பயணப்பட்டு வரும் மகனின் சைக்கில் சத்தம் படலையில் கேட்கின்றதா என்பதை காது கொடுத்துக் கொண்டிருப்பார் அம்மா.

இளைக்க இளைக்க இருபது மைல்கள் ஓடியோடி ஓய்ந்து வரும்
சைக்கிலின் முன் சில்லு வேகமாய் படலையில் மோதும் சத்தம் நன்றாய் கேட்ட பின்பே அடுப்பில் புட்டு ஏற்றுவார் அம்மா.

ஆம்,

ஏழு மணிக்கே புட்டு அவித்தால் காய்ந்து தலைமகனின் தொண்டையில் கீறிவிடுமென அடுப்படியிலேயே காய்ந்திருப்பார் எங்கள் அம்மா!

ஆரம்பத்தில் எங்கள் அம்மாதான் இப்படி அடுப்படியில் தவம் இருக்கின்றார் என்றே யான் நினைப்பதுண்டு.

எங்கள் அம்மாவைப் போல
பல அம்மாக்களின் வாழ்க்கையும் இப்படித்தான் இருப்பதை பின்னர்தான் நண்பர்களின் வீடுகளில் அடியேன் கண்டு கொண்டேன்!

என்றுமே வற்றாத தூய அன்பினதும் அறத்தினதும் தாய்நிலமாய் மிளிரும்
அம்மாக்களுக்கும் அகிலம் வாழ் மகளிர் அனைவருக்கும் வயவனின் வாழ்த்துக்கள்! 😍