தொலைநோக்கும் விசையீர்ப்பும் (அ.மை. – 19)

216

கலீலியோ கலீலி ( Galileo GALILEI) 1564 – 1642

1608ம் ஆண்டு..
குவி ஆடிகள் ( Convex lenses) புழங்கத் தொடங்கி 300 ஆண்டுகள் ஆகியிருக்கும்.
குழி ஆடிகள் (Concave lenses) 150 ஆண்டுகளாய் பயன்பாட்டில் இருந்தன.

நெதர்லாந்து. மிட்டில்பர்க் நகரில் ஒரு கண்ணாடித் தொழிற்சாலை.
உற்பத்தி கண்ணாடிகள் ஒருபக்கம்..
உற்சாகக் கண்ணாடி ஆராய்ச்சிகள் உள்ளே ரகசியமாய்..
அதில் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ( Hans Lippershey, Zacharias Janssen)
டெலஸ்கோப்பின் அடிப்படையை அமைத்துக்கொடுத்த வித்தகர்கள்.
அதிலும் குறிப்பாய் லிப்பர்ஷியின் உதவியாளர்தான் முதல் மரியாதைக்குரியவர்.
அவர்தாம், ஒரு மெல்லிய குவி ஆடியை கைநீட்டும் தூரத்திலும்
ஒரு வல்லிய குழி ஆடியை கண்ணருகிலும் வைத்துப்பார்த்தால்
பார்வையின் கூர்மை பன்மடங்காவதைக் கண்டு சொன்னவர்.

இப்படி இந்த இருவர் 1608ம் ஆண்டின் பின்பாதியில் கண்டுபிடித்த தொலைநோக்கும் சூத்திரம்
கலிலீயோவின் காதுக்கு எட்டியது 1609ம் ஆண்டு ஜூன் மாதவாக்கில்…

அறிவுக்கூர்மையும், செயல்திறனும், செய்ததை இன்னும் செம்மையாக்கும் மனவளமும்
ஒருங்கே அமையப்பெற்ற அதிசயப்பிறவி கலிலீயோ.

காதில் விழுந்த டெலஸ்கோப் சேதியை உள்வாங்கி
அதில் ஈடுபாட்டுடன் பாடுபட்ட அவரின் வேகம் பிரமிக்கவைக்கிறது.
கண்டுபடித்ததைப் பயன்படுத்தி சுற்றியுள்ளவற்றை அவர் ஆராய்ந்த விவேகம் மலைக்கவைக்கிறது.

இதோ அந்த அறிவுப்புயலின் பணிச்சாதனைக் காலப்பட்டியல்:

1609 ஜூன் – டெலஸ்கோப் பற்றி அறிந்தார்.
1609 ஆகஸ்ட் – எட்டு மடங்கு பெரிதாக்கும் டெலஸ்கோப் அமைத்தார்.
1609 டிசம்பர் – இருபது மடங்கு பெரிதாய்க்காட்டும்படி மேம்படுத்தினார்.
1609 டிசம்பர் – நிலவில் மலைகள் உண்டு, அவற்றின் உயரம் இவ்வளவு என அளந்து சொன்னார்.
1610 ஜனவரி – ஜூபீட்டருக்கு நான்கு துணைக்கோள்கள் எனக் கண்டு சொன்னார்.
1610 ஜனவரி – பால்வீதியின் ஒளிப்புகை தூசுகள் அல்ல- கோடானுகோடி தூர நட்சத்திரங்களின் கூட்டம் என்றார்.
1610 பிப்ரவரி – வீனஸ் (வெள்ளி)யும் நிலவைப்போல் தேய்ந்து வளர்ந்து தெரிவதைக் கண்டார்.
1610 பிப்ரவரி – தூய்மையின் சின்னம் எனச் சொல்லப்படும் சூரியனிலும் பருக்கள், வடுக்கள் உண்டு..
அந்தச் சூரியனும் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 25 நாட்கள் ஆவதுண்டு எனச் சொன்னார்.
1610 மார்ச் – வேறெவரும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தம் கொண்டாடும் முன்னே அவசரமாக
அவற்றைத் தொகுத்து ‘ நட்சத்திரத் தூதன்’ என்ற நூலாய் ஆக்கி, உஷாராய் ஒரு முன்பிரதியை
13ம் தேதி பிளாரண்டைன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
1610 மார்ச் – 19ந் தேதி அவர் 550 பிரதிகளாய் வெளியிட்ட அந்நூல் அன்றைக்கே
ஒட்டுமொத்தமாய் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்தது.

இப்படி அசுர சாதனையை ஆற்றல் மிக்க வேகத்தில் ஒன்பது மாதங்களில் முடித்த கலீலியோ
தம் அடுத்த முத்திரையை அழுத்தமாய் அறிவியலில் பதித்தது 28 ஆண்டுகள் கழித்து –
(முதல் மரியாதைக்குப்பிறகு தேவர் மகன் தர நடிகர் திலகத்துக்கு ஏற்பட்ட இடைவெளி போல..)

——————————————————————————————————————-
எடை அதிகம் உள்ள பொருட்கள் அதிக வேகமாய் பூமி நோக்கி விழும்
என ஆதியில் சொன்னவர் அரிஸ்டாட்டில்.
இறகு போன்ற எடை குறைந்த ஆனால் பரப்பளவு மிகுந்த பொருட்களுக்கு
அவர் சொன்னது பொருந்தினாலும் —

கண்ணுக்கு மறைவான ‘ எதிர்சக்திகளை’ கண்டுசொன்ன முதல் அறிஞர் கலீலியோ.
காற்றின் விசையை வெல்ல இயலா மென்பரந்த பொருட்கள் மிதக்க, மெல்ல விழ
காரணம் சொன்னவர் கலீலியோ.

பைசா கோபுரம் மீதேறி கனத்த, சிறுத்த குண்டுகளை விழச்செய்து
(வேடிக்கை பார்த்த மக்களை பாதுகாப்பாய் விலகச்சொல்லி விட்டுத்தான்..!!!)
நிரூபண ஆராய்ச்சிகள் அவர் செய்ததாய் ‘கர்ண பரம்பரைக்’ கதைகள் உண்டு.

பைசா கோபுரம் மீதேறினாரோ என்னவோ.. சிறு மலைகளின் மீதேறி
கீழ்ச்சரிவில் பலவகை/எடைப் பொருட்களை உருட்டி,
ஒவ்வொரு சிறு பிரிவுக்கும் அவை உருளும் வேகம், அந்த வேகத்தின் அதிகரிக்கும் தன்மை
(acceleration) இவற்றை துல்லியமாய் அளந்தார்.

அப்படி அளக்க அவர் எடுத்தாண்ட கருவிகள் வியக்க வைக்கின்றன.
(அந்தக்கால Sports watch..!) :
1)மனிதர்களின் நாடித்துடிப்பு.
2) பெரிய பீப்பாய்களில் சிறு ஓட்டையிட்டு, வடியும் நீரின் அளவை அறிந்து ஒப்பிடுதல்.

முடிவாய் அவர் உலகுக்குச் சொன்ன புதிய செய்திகள் :
(Mathematical discourses and Demonstrations of Two New Sciences- 1638)
1) வெற்றிடத்தில் எல்லா பொருட்களும் ( எடை, வகை பொருட்டல்ல) ஒரே வேகமெடுத்து
சரியும்.
2) சமதளத்தில் இயங்கத் தொடங்கிய பொருள் அதே வேகத்தில் போனபடியே இருக்கும்-
ஒரு சம எதிர் விசை அதை நிறுத்தும்வரை.

அதுவரை தினசரி மனிதன் ‘ கண்டு’ வந்த உண்மைகளை புரட்டிப்போட்ட
புதுமைச் செய்திகள் இவை..

மெல்ல மெல்ல தவழும் புறாவின் வெண்சிறகு..
நகர்த்துவதை நிறுத்தினால் நின்றுவிடும் நடைவண்டி…

மெல்லியன மெல்ல விழும்..
விசை தொடர்ந்தால் மட்டுமே இயக்கம் தொடரும்..
.
என்று அதுவரை எண்ணி இருந்த மாந்தர்க்கு கண்ணைத் திறந்த சேதிகள் இவை.
குறிப்பாய் நடைவண்டிக்கும் பூமித்தாய்க்கும் இருக்கும் கண்ணுக்குத் தெரியா
எதிர்விசையே வண்டியை நிறுத்துகிறது என்று சொன்ன நூதனச் சேதி…
தொடரும் இயக்கம் (Inertia) பற்றி மூன்று இயக்கவிதிகளுடன்
பின்னாளில் நியூட்டன் சொல்ல ஆதிமூலச் சேதிகள் இவை..
தொலைநோக்கி, விசை ஈர்ப்பு என இரு மாபெரும் சாதனை மைல்கற்கள்
நட்ட நம் கலீலியோவுக்கு இரட்டிப்பு மரியாதையை நாமும் செலுத்துவோம் நண்பர்களே..

 

-ஆக்கம் – இளசு-