தெளிவின்மையும் அழிவின் விளிம்பும்

982

கடந்த உரையாடல் “தடியில் பூச்சுத்தி அடித்தல்” வகையில் அமைந்தது. ஆனால் அதை ஒரு அன்பர் தவறாக விளங்கி உள்ளார். அவருடைய பதிலாடலில் அவர் சார்ந்த அமைப்பின் மீது கொண்ட பாசமும் ஊர் மீதான அவருடைய பற்றும் வெளிப்பட்டது. இவ்விரண்டையும் மதித்து தலை பணிந்து என் பேனா எழுதியதே இந்த உரையாடலின் துவக்கம். இவ்வுரையாடலின் நோக்கம் இறுதியில் வந்தே ஒட்டிக்கொள்ளும்.

ஊரில் உள்ள ஒருவருக்கு உழைச்சு முன்னேறுங்கள் என்று மாடு வாங்கிக் கொடுத்தால், அவர் மாட்டை வித்து விட்டு, மாடு களவு போனதாகப் பொய் சொல்கிறார். அப்படிச் செய்தவருக்கு அப்படிச் செய்ய வேண்டாம் என்று சொன்னதுதான் கடந்த உரையாடல்.

“இப்படி நீங்கள் செய்தால் வெளிநாட்டில் காசு கொடுக்கும் மக்கள் சோர்ந்து விடுவார்கள். உதவுவோர் எண்ணிக்கை குறைந்து விடும். அவர்கள் உதவியில் நீங்கள் உழைத்து முன்னேறினால் இன்னும் பலர் உதவ முன் வருவார்கள். உங்களைப் போல் இன்னும் பலர் பயனடைவார்கள்” என்று மேலும் சொன்னதுதான் கடந்த உரையாடல்..

“நீங்கள் இப்படிச் செய்வதால் தான் உதவி வழங்கும் போது போட்டோ எடுத்துப் போட வேண்டி இருக்கு. நீங்கள் நேர்மையா நடந்தால் போட்டொ எடுத்து போட்டு உதவியதைச் சாட்சிப்படுத்த வேண்டியும் வராது. இப்படிப் போட்டோ எடுத்துப் போட்டு விட்டினமே என்று நீங்கள் கவலைப்படவும் வேண்டி இராது. உதவி செய்யுறதை போட்டோ எடுத்துப் போட்டு விளம்பரம் தேடுகிறார்கள் என்ற அவப்பெயர் அமைப்புகளும் வராது” என்று தொடர்ந்ததே கடந்த உரையாடல்..

உதவும் கரங்கள் என்றால் உதவி செய்யும் மக்கள். அமைப்பு அல்ல.. உருவாக்கும் மனங்கள் என்றால் அந்த உதவியை நேர்மையாக, சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் மக்கள் என்பதே கடந்த உரையாடல் நடைபெற்ற புள்ளிகள்.

இதைப் பத்துப் பேருக்கு விளங்கக் கூடிய மாதிரி என்னால் எழுத முடிந்தது. ஒருவருக்கு விளங்கக் கூடிய மாதிரி எழுத முடியவில்லை. நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன், நான் சாதாரணமானவன். மிகு புத்திசாலிகளுக்கானவன் அல்ல…

இதை இப்போ சொல்ல வேண்டிய காரணம் இப்படியான செயற்பாடுகளின் அபாய மணியாக ஒலிக்கவே. மற்றப்படி வேறெந்த உள் நோக்கமும் இல்லை.

தெளிவின்மை.. இதன் உடனடி விளைவு ஆத்திரம். ஆத்திரத்தின் நேரடி விளைவு தன்னிலை மறத்தல். அதன் விளைவு சொல்லடி.. அடிதடி.. அடிதடியின் விளைவு ஒற்றுமைக் குலைவு. ஒற்றுமை குலைவின் மிச்சம் என்ன என்று சொல்லத் தேவை இல்லை.

இத்தெளிவின்மையின் ஆரம்பம் அடிமனசின் பதிவிலேயே தொடங்குகிறது. எங்களுக்குப் போட்டியாக வந்து விட்டார்கள் என்ற தவறான அபிப்பிராயமும், போட்டியாக எவரும் வந்து விடக்கூடாது என்ற எண்ணமும், குறை சொல்கிறார்கள் என்ற பிழையான புரிதலும், உடைந்து பாழாகி விடுமோ என்ற நியாயமான பயமுமே தெளிவின்மைக்கான முக்கிய காரணங்கள்.

அவ்வாறானா தெளிவின்மைகளை சண்டைக்கு முன் தீர்ப்போம். அதற்கு எம் மனதில் இருக்கும் தப்பான அபிப்பிராயங்களைக் களைவோம். சம்மந்தப்பட்டோரை அணுகுவோம். அணுகுவதற்கு ஏற்றாற் போல் கதவுகளைத் திறந்து வைப்போம்.  பரஸ்பரம் இருசாராரும் தெளிவடைவோம். தவறுவோமானால், தெளிவின்மையோடு பயணிப்போமானால் எவ்வளவு முயன்றாலும் அழிவின் விளிம்பில் நின்று போராடுகிறோம் என்பதையும் அதன் மூலம் மாபெரும் தவறுக்கு வித்தாகின்றோம் என்பதையும் நெஞ்சில் நிறுத்துவோம்.

எங்கள் ஊரும் ஊரின் பேரும் கெட்டுப் போக தெளிவின்மையுடன் செயற்படும் உண்மையான ஊர்ப்பற்றாளர்களும் ஒரு காரணம் என்பதையும் நாங்கள் மறுக்க முடியாது.

உரையாடுவோம்..