துரவுகளில் நடமாடும் துறவி

 

ஏழைகளின் அடிவயிற்றுத் தீயணைக்க
ஏர்முனை கொண்டு விரையும்
ஏகன் இவன்!🖌

கழனிகளுக்கு வண்ண பூச்சேலை
உடுத்த அரை நிர்வாணம்
பூண்ட பெருமகன் இவன்!🖌

நிலமகளுக்கு பச்சை
ஆடைகட்டிட – தன் கந்தல்
ஆடைகள் கொஞ்சம்
துறந்த துறவி இவன்!🖌

நிலாமகள் வானவூர்வலம் வரும் வரை
துரவுகளில் ஓய்ந்திடாமல் வலம் வரும்
துறவி இவன்!🖌

உழவாலும் உடல் உழைப்பாலும்
உயர்ந்து நிமிர்ந்து நிற்கும்
உலகத்தாரின் உன்னதமான
உறவு இவன்!🖌

தேவலோகத்து வானவரிலும்
மேலான பூலோகத்து தேவன் இவன்!🖌

வேட்டைக் கலாச்சாரத்தில் இருந்து
வேளாண்மை கலாச்சாரத்திற்கு வந்த – வடி
வேலன் இவன்!🖌

தூரத்து மேகங்களின்
தூறல்களும் வீழட்டும் இவன்
வாழ்வு வளமாக!🖌