சாமித்தட்டு

மன்னார் களச்சூட்டில் பறக்கும் ஆவியாக..

250

நெய்விளக்கேற்றியதும்
முகஞ்சுழித்ததில்லை
ஏசுவும் மாதாவும்.

மெழுகுவர்த்தி எரியும் போது
கண்களை மூடிக் கொண்டதில்லை
சிவனும் சக்தியும்..

இருட்டில் விட்டாலும்
ஒருவருக்கொருவர் நெருப்பெடுத்து
வீட்டை எரித்ததில்லை..

எந்தவொரு கணமேனும்
சண்டையிட்டுக் கொள்ளும்
சத்தம் கேட்டதில்லை..

அவர்கள்
அவர்களாகவே உள்ளார்கள்..
நாங்கள்தான்
நாங்களாக இல்லை..

ஒருவேளை
அவர்களைப் போன்று
ஒரு (சாமித்)தட்டில் இருந்தால்
நாங்களும் இருக்கக் கூடும்
நாங்களாகவே…!!