போராளியின் எ(அ)ழு குரல்!

போராளியின் எ(அ)ழு குரல்!
**************************
உயிரும் உருகும் எமது தேடல்
யாருக்கு தெரியும்
எங்கள் உதிரம் எல்லாம் உறைந்த
உங்கள் நினைவுகள் தழுவும்
நிலத்தில் வாழ்ந்த போது
நிமிர்வில் நாங்கள் நடந்தோம்
நீங்கள் இல்லை சொந்த
நிலத்தில் தலைகள் நாம் குனிந்தோம்

இனத்துக்காக இளமைக்காலம்
முழுவதும் தொலைத்தோம்
இயல்பு வாழ்க்கை விடுத்து இடர்கள்
நாங்கள் களைந்தோம்
நகையும் பணமும் கேளா கழுத்தில்
நஞ்சை அணிந்தோம்
பட்டம் படிப்பு வேண்டா களத்தில்
அரணாய் நாமிருந்தோம்
போரில் நாங்கள் வீழ்ந்த போதில்
யாரை நம்புவோம்
தீண்டாப் பொருளாய் போகவா உயிர்
மீண்டு திரும்பினோம்

கருவாய்த் தானே நெஞ்சில் ஈழக்
கனவைச் சுமந்தோம்
கலையும் என்று நினைத்தா நாங்கள்
களமிசையேவினோம்
சுகமாய் நீங்கள் வாழத் தானே
சுடுகலன்கள் ஏந்தினோம்
சாவரும் போதிலும் சந்ததிக்காகவே
செங்களம் ஆடினோம்
சாதிகள் சண்டைகள் சாய்த்த கொடியை
ஏந்தியே நாம் நடந்தோம்
செங்கோலன் எங்கள் பிரபாகரனை
எங்கென்று நாம் தேடுவோம்
எங்கள் சந்ததி கெட்டுப் போகும்
நிலையினை எப்படி நாம் தாங்குவோம்

முடமாய்ப் போனோம் திடமாய் காப்பாய்
வருவாய் தலைமகனே
முடியாதொன்று இருக்காதெமக்கு
உரைப்பாய் பெருமகனே
மூடர் கூட்டம் போடும் ஆட்டம்
முடியும் விழியசைப்பாய்
முலைப்பாலில் ரத்தம் சொட்டும் ஈழத்
தாயவள் சிரிப்பாள்
இல்லை என்று சொல்லும் வாய்கள்
ஊமை ஆகட்டுமே
இருப்பாய் மனதில் நெருப்பாய் விதிகள்
இனியும் மாறட்டுமே
ஈழம் ஒன்றே தீர்வின் எல்லை தமிழர்
தலைகள் நிமிரட்டுமே
விதைகள் புதைந்த நிலத்தில் மீண்டும்
வாகை பூக்கட்டுமே

க.குவேந்திரன்
07/11/2019