வன்னிப் பெரு நிலப்பரப்பில் உள்ள, தண்ணீர் வசதி அற்ற ஒரு குடியிருப்புக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்துள்ளார்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வயாவிளான் மக்கள். அவர்களுக்கும் அவர்களை ஒருங்கிணைத்த வயாவிளான் மக்கள் ஒன்றியத்துக்கும் வயாவிளான் மக்கள் பெருங் கைதட்டல்களை மனமுவந்து வழங்கலாம்.
உந்தித்தள்ளுவதும் பின்னின்று இழுப்பதுமாக தமக்குள் கன்னை பிரித்து விளையாடும் உணர்வுகளுக்கு ஈடு கொடுத்துப், பனிப்புலங்களில் வாழ்வோட்டி, குறிப்பிட்டளவு பொருளாதார வலுவை அடைந்தவர்கள் நாங்கள்.
அவ்வலுவே இன்று பலருக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குகிறது. எம்மூரகங்களை மறுமலர்வு அடையச் செய்கிறது. மனதளவில் தளர்வு இருந்தாலும் இவ்விரு விடயமும் மகிழ்வுக்குரியனவே.
ஆனாலும் தமிழர் தாயகமெங்கும் அடிப்படைத் தேவைகள் தீர்ந்து விட்டனவா? மறுமலர்வு கண்டு விட்டனவா? என்றால் இல்லை என்ற கசப்பே விடை..
ஆம்.. இம்மறுவாழ்வை இறங்கு வரிசைப்படுத்தினால் வன்னியின் பெரும்பாகமும் கிழக்கு மாகாணமும் இறுதி இரு இடங்களில் இருக்கும். இதற்கு என்ன காரணம் எனப் புலனாய்வு செய்வதை விட இதை எப்படிக் களையலாம் என திறனாய்வு செய்வதே நன்மை பயக்கும்.
அவ்வாறு திறனாய்ந்து பயத்த நன்மைதான் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தின் மக்கள் குடி இருப்புக்கு, வயாவிளான் மக்கள் ஒன்றியம் – அவுஸ்திரேலியா அமைத்துக் கொடுத்த குழாய்க்கிணறு.
அன்றாடம் கனதூரம் பொடி நடையாய்ப் போய் , தம் அடிப்படை நீர்த்தேவையை அல்லல்பட்டு தீர்த்த இம்மக்களுக்கு அருகிலேயே அமைந்த குழாய்க்கிணறு மிகப்பெரு மறுமலர்வு.
இதனை அமைத்துக் கொடுத்த வயவை மக்கள் ஒன்றியம் அவுஸ்திரேலியாவால் வயவையூருக்கு பெரு மகிழ்வும் பெருமிதமும்…
ஆம்.. அவர்களால் அமைக்கப்பட்டது கிணறு அல்ல.. அவர்களால் திறக்கப்பட்டது வயவையூரின் புதிய வரலாறு….
இந்த வரலாற்றுப் பாதை வடக்கைத் தாண்டி கிழக்கைத் தொட்டு உச்சம் அடையட்டும். முதலடி எடுத்து வைத்த வயவை மக்கள் ஒன்றியம் அவுஸ்ரேலியாவை காலம் வாழ்த்தட்டும். நாமும் வாழ்த்துவோம்..
அமைத்த கிணறு தொடர்பாக அறிய