உயிர்ப் படிமங்கள் – அறிவியல் மைல்கற்கள் -16

387

உயிர்ப் படிமங்கள்

(Fossils என்னும் சொல்லுக்கு இணையாக உயிர்ப்படிமங்கள் எனும்
இனிய இச்சொல்லைத் தந்து உதவிய
இளவல்கள் பிரதீப், முகிலன் ஆகியோருக்கு
எனது சிறப்பு நன்றிகள்….)

கான்ராட் கெஸ்னர் ( Conrad Gesner 1516 -65)

அறிவியல் மைல்கற்கள் -16

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
….

முன்னொரு காலத்தில் மடிந்த உயிர்கள்
மண்ணில் புதைந்து படிமங்களாகி
சொல்லும் வரலாறுகள் ஏராளம்..

அந்த ‘ மண்ணில் தெரியும் கதைகளை’ப் படித்து
உலக, உயிர் வளர்ச்சியை கற்றுக்கொண்டு கற்பித்தவர்கள் பலராகும்.
அந்த சாதனையாளர் வரிசையில் முதல் மரியாதைக்குரியவர்
இந்த மைல்கல் நாயகர் கான்ராட் கெஸ்னர்.

இயற்கையாளரும் ( Naturalist) மருத்துவருமான கெஸ்னர்
16ம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்.
அக்காலகட்டத்தின் மிகப்பெரிய இயற்கையாளராய் மதிக்கப்பட்டவர்.
49 வயது மட்டுமே அவரின் ஆயுள். 1565 -ல் பிளேக் நோயால் இந்த
அறிவுப்பயணம் பாதியில் முடித்துவைக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் கெஸ்னர் சாதித்தவை பிரமிக்கவைப்பவை.
அவரின் மரணத்தின்போது அவர் ஏற்கனவே வெளியிட்டவை ஒன்றல்ல..இரண்டல்ல..
72 அறிவு நூல்கள்.. மேலும் 18 நூல்களை பாதிக்கு மேல் எழுதியபடியே…….

என்ன ஒரு உத்வேகம், குறிக்கோள், ஒருமித்த சிந்தனை, ஓயா உழைப்பு இருந்தால்
இத்தனையும் கைகூடி இருக்கும்? எண்ணவே மலைக்கிறது!

கெஸ்னரின் முக்கிய படைப்புகள்:

1) Historia Animolium – அதுவரை பூமியில் அறியப்பட்ட அத்தனை மிருகங்களைப்
பற்றிய முழுமையான தொகுப்பு நூல்.

2) Bibliotheca Universalis – ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன் மொழிகளில் அதுவரை வெளிவந்த
மொத்த நூல்களின் தொகுப்பு – நூல் பற்றிய சுருக்கம், விமர்சனம் ஆகியவற்றோடு.

3 ) இந்த மைல்கல் நாயகர் விருதை அவருக்கு வாங்கித்தந்த – De Rerum Fosilium –
பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவை பற்றிய புதுமையான நூல்.

அன்று கெஸ்னரின் கண்ணோட்டப்படி உயிர்ப்பொருளோ, கனிமப்பொருளோ –
பூமியின் அடுக்குகளில் படிந்திருந்த அனைத்துமே �பாசில்கள்தாம்.
இன்றும் கூட ஒரு படிமம் உயிரியின் படிமமா அல்லவா என்று உறுதியாக சொல்ல முடியாத
நிலை இருக்கிறது – செவ்வாய்க்கிரகத்தின் சிறுபடிமங்களைப் போல.

எனவே அக்காலத்தில் ஒரு படிமம் எந்த வகையில் உருவாகி இருக்கும் என
புத்தம் புதிய அறிவொளி பாய்ச்சிய கெஸ்னரும் மயங்கியதில் ஆச்சரியமில்லை.
அதுவரை உலகம் கண்டறியாத இப்புதிய அறிவியல் பிரிவை ஆரம்பித்து வைத்த
கெஸ்னர் மிகத்துல்லியமாக படங்கள், மரச்செதுக்கல் மாடல்கள் கொண்டு
வரும் சந்ததியினருக்கு அளித்த மாபெரும் கொடை இந்நூல்.
படிமம் கிடைத்த இடம், நுட்மான விவரிப்பு, அறிவார்ந்த தொகுப்பு, அடுத்த தலைமுறை
அடையாளம் காண ஏதுவாய் படங்களுடன் இவர் வழங்கிய பாசிலிய நூல்
பல கண்டுபடிப்புகளின் முன்னோடி.

ஆகாயத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்பட்ட ‘ நாக்குக்கல்’ (Tongue stone) உண்மையில்
சுறா மீனின் பல்லின் படிமம் என்று கண்டு சொன்னவர் கெஸ்னர்.
கடல்வாழ் உயிரின் படிமம் உள்நிலப்பரப்புகளில் எப்படி வந்தன என்பது உள்ளிட்ட
பல கேள்விகளை எதிர்கால அறிவியலார் எழுப்பி , காம்ப்ரியன் சகாப்தம் உள்ளிட்ட
உயிர் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பின்னர் விருட்சமாய் எழுந்ததற்கு
விதை போட்டவர் – இம்மைல்கல் நாயகர் கான்ராட் கெஸ்னர்.