தாம்பூலத்தட்டு வாழ்க்கை

காதலை உணர்ந்தேன்
உன் வாசத்தில்
என் சுவாசத்தில்

ஓரிழையாய் ஓடும்
நாடா ஓட்டம்
என் இதயத்தில் நெய்யும்
சிங்காரப் புடவையாய்
உன் எண்ணங்கள்

மஞ்சளான உன் முகம்
குங்குமமாய்ச் சிவக்க
என்னுள் வளர்ந்தது

இலையாய்(வெற்றிலை)
பூவாய்(மல்லிகை)
காயாய்(தேங்காய்)
கனியாய்(வாழை)
விதையாய் (பாக்கு)

வெற்றிலை ஏன் தெரியுமா?
வெறுமை இல்லை எனச் சொல்ல
தேங்காய் ஏன் தெரியுமா
எங்கும் தேங்காய் எனச் சொல்ல
மல்லிகை ஏன் தெரியுமா
மணமாய் வாழ்ந்திட
வாழை ஏன் தெரியுமா
வாழ வை என்றிட
பாக்கு ஏன் தெரியுமா
பாங்காய் இருந்திட

சங்கேதங்களாய் சடங்குகள்
சங்கீதமாய் வாழ்க்கை
உனக்கும் எனக்கும்,

—————————————–

நிச்சயதார்த்தத்திலும், சடங்குகளிலும் தேங்காய் பழத் தட்டுகள் வைப்பார்கள். அதில் தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை பாக்கு இவை இருக்கும். இவை முறையே இலை, பூ, காய், கனி, விதை இவற்றைக் குறிக்கும். ஒரு தாவரத்தின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும் இது, முழு வாழ்க்கை என்பதை குறிக்கும் அடையாளம்.

இதிலும் எதைக் கொண்டு குறிக்கிறார்கள்

வெற்றிலைக் கொடியின் பெரும்பயன் வெற்றிலை
பாக்கு மரத்தின் பெரும்பயன் பாக்கு
தென்னையின் பெரும்பயன் தேங்காய்
வாழையின் பெரும்பயன் பழம்
மல்லிகையின் பெரும் பயன் பூ

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் பயனுள்ளவராய் இருத்தலே நிறைவான வாழ்க்கை.. அதனாலேயே இவை கொண்டு தாம்பூலத் தட்டு.
———————————–