நெருப்பில் பூத்த மலர் வெய்யிலில் வாடுமா!

மூன்று வயதில் முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தாண்டி பின்னர் வவுனியா செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள முட்கம்பி வேலிகளையும்(Concentration camp) தாண்டி மீண்டவன் அருண்மொழி வாமணன்!

அலை வந்து அடிக்கடி அலைக்களிக்கும் அழகிய மாங்கனித்தீவில் “கறுப்பு ஜூலை” என கரிய வரலாறாய் பதிந்துவிட்ட ஜூலையை தனது பதின்னான்கு அகவையில் இன்று நினைவு கூருகிறான்.

கருவிலே திருவுடைய இக்குழந்தை 2006ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் எனும் தொல்லூரில் பிறந்தவன்.

இவன் பிறந்து 6 ஆவது மாதப்பாலகனாய் இருக்கும் போதே 5ஆம் கட்ட ஈழப் போராட்டம் முகமாலையிலும் பின்னர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியிலும்
ஆரம்பித்துவிட்டது.

எங்கள் தரப்பில் மருந்து, உணவுத்தட்டுப்பாடு(Economic embargo)போலவே மருந்துவர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாகவே நீண்ட நாட்களாகவே தலை தூக்கியிருந்தது.

அதே நேரம்,நேர்மை இல்லாத நோர்வே தலைமையில் சமாதான நாடகம்
எம் மண்ணில் நடைபெற்ற காலத்தில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,
மன்னார் ஆகிய பகுதிகளில் பணியில் பல புதிய வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து ஶ்ரீலங்கா அரசால் வெளியகற்றப்படுவதற்கு
சற்று முன்னதாகவே பல
புதிய வைத்தியர்களுக்கு கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடமாற்றம் வந்துவிட்டது.

அவர்களும் தங்களது உத்தியோகத்தினை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாகவே வன்னியைவிட்டு சென்றுவிட்டனர்.

வைத்தியர்கள் இல்லாமல் பல வைத்தியசாலைகள் இயங்கின.

இவ்வாறான அவல நிலையில்
போராளி வைத்தியரான அருணின் தாய் வீட்டில் இருக்க அவள் போராளி மனம் ஒப்பவில்லை.

குழந்தையை வீட்டில் ஒப்படைத்துவிட்டு வரவும் அவர்கள் வீட்டில் யாரும் இருக்கவில்லை.

பச்சிளம் பாலகன் அருணை தூக்கி வந்து எமது வைத்தியசாலையின் ஒரு ஓடையில் சேலையால் தொட்டில்
கட்டி தூங்கவிடுவாள்.

அருண் தூங்கிய பின் காயமடையும் அப்பாவிப் பொதுமக்களுக்கும்
விழுப்புண் அடையும் போராளிகளுக்கும் சத்திரசிகிச்சை அளித்துக் கொண்டிருப்பார்.

காயமடைந்தவர்களின் வேதனையின் காரணமாக வெளிப்படும் முனகலையும் ஒரு வைத்தியசாலையின் பரபரப்புக்களையும் தாலாட்டாய் காதில் கேட்டு வளர்ந்த பிள்ளை அருண்மொழி.

போரில் குளித்த எங்கள் தேசத்தின் ஆபத்துக்களையும் சொல்லோணாத் துன்பங்களையும் கடந்து வெற்றி நடை போடும் எங்கள் பிள்ளை வரைந்த ஓவியம் பல வழிகளிலும் முக்கியப்பட்டு நிற்கிறது.

அருண்மொழியின் ஓவியத்தை ஓவியக் கண்ணோடு பார்ப்போமானால்,

உள்ளதை உள்ளபடி வரைவது ஓவியக்கலையில் ஆரம்பகட்ட நிலை ஆகும்.

உள்ளத்தில் உள்ளதை வரைவதுதான் ஓவியக்கலையில் முதிர்ச்சி நிலை ஆகும்!

உள்ளத்தில் உள்ளதை வரைந்து ஓவிய ஆளுமையையும் தேசப்பற்றுதலையும் வெளிபடுத்தி உள்ளான்.

அருண் எனும் தமிழ்க்குழந்தை மட்டுமல்ல இனி வருங்காலங்களிலும் தமிழ்த்தாயின் மடி தவழும் எந்தக் குழந்தையும் “கறுப்பு ஜூலை”யை மறக்காது!

மறக்கவும் கூடாது!

1 COMMENT

Comments are closed.