நாளொரு குறள் -55

நாள் : 55
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :5

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இன்று பெண்ணியவாதிகளால் கடுமையாகப் பார்க்கப்படும் செய்யுள் இதுதான். கற்பு கூட கொஞ்சம் ஏற்புதான் அவர்களுக்கு. அதை விட இது அவர்களுக்கு மிக கேவலமானதாகத் தோன்றும். என்னது தினசரி கணவனைத் தொழுதால்தான் நல்ல மனைவியா என்ற போராட்டமே செய்தாலுமே ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆனால் அவர்களெல்லாம் ஒரே ஒரு குறள் அறிவுரை சொல்லுதே அதன் மீதுதான் கோபம் கொள்கிறார்கள் ஆனால் அறத்துப்பாலின் அத்தனை அதிகாரங்களும் குடும்பத் தலைவனுக்குச் சொல்லும் அறிவுரைதானே என்பதை ஏன் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?

இங்கு வள்ளுவர் மிக அழகாக ஒரு முடிச்சு போட்டிருக்கிறார். அதை இதுவரை அவிழ்த்தாரில்லை. நான் அவிழ்க்க முயற்சிக்கிறேன்.

தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள்.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் இப்படித்தானே உங்களுக்கு இந்தச் செய்யுளின் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பிண்ணனி என்ன? ஏன் தெய்வம் தொழாள் என வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். தெய்வத்தையும் தொழுது கணவனையும் தொழுதால் தப்பா?

இதன் உண்மைப் பொருளை அறிய ஏன் தெய்வம் தொழுகிறோம் என்று ஆராய வேண்டும்

நமக்கு குறை இருப்பின், அக்குறை தீர்க்க வழி தெரியாதிருப்பின் தெய்வத்தைத் தொழுது வழி வேண்டி வணங்குவோம்.

இவள் தெய்வத்தை தொழுவதில்லை, காரணம் என்ன?

இவளால் எவ்வளவு பெரிய பிரச்சனயையும் கணவனை வேண்டுவதன் மூலம் தீர்த்துவிட முடிகிறது. அதாவது அவளின் கணவன் அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்க வல்லவனாக இருக்கிறான்.

கணவனும் மனைவியுமே அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து விடுகிறார்கள்.

அப்படி இருப்பின் அவளுக்கு தெய்வம் தொழ வேண்டிய அவசியம் எழுவதில்லை. முன்னறி தெய்வங்களான அன்னையும் பிதாவையும் கூட வேண்ட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

அப்படி ஒரு குடும்பம் இருக்குமாயின் அப்பெண், மழை எப்பொழுது பெய்ய வேண்டும் என அறிந்திருப்பாள். அந்தந்த காலங்களில் மழை பெய்ய பிரார்த்திப்பாள். மழையும் பெய்யும்.

தெய்வம் தொழ தேவையில்லாத காரணம் இதுதான்.

சும்மா காலை ஒற்றி கண்ணில் வைத்துக் கொண்டு பெய்ன்னு சொன்னா, மழை பெய்யாது… பயத்தில ******** வேணும்னா பெய்யலாம்.