இங்கிலாந்தில் வாழும் ஆபிரிக்கர் ஒருவர் தன் மூதாதையரையும் தன் பரம்பரை வேரையும் தேடிய பயணத்தையும், அவன் தன்னுடைய பரம்பரை வேரைக் கண்டுபிடித்து, தன் மூதாதையருடன் கூடிக் குதூகலித்த நெகிழ்வான தருணங்களையும் இலண்டன் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் பதிவு செய்திருந்தது. அதைப் பார்த்தது முதல் என்னுடைய பரப்பரைச் சங்கிலியைத் தேடும் ஆர்வம் மேலிட்டது.
ஊருக்குப் போய் தேட முடியாத அபாக்கியத்தை எண்ணிக் கலங்கிய கண்களுடன் புத்தகங்களுக்குள்ளும், இணைய வெளியிலும், பன்னாடுகளில் உயிர்வாழும் வயவையூரின் மூத்த தலைமுறை மூலம் செவி வழியாகவும் என் பரம்பரைச் சங்கிலியைய் தேடும் பயணம் தொடங்கியது.
அப்பயணத்தில் பல அரிய தவல்கள் கிடைத்தாலும் அவற்றை விட கிளம்பிய கேள்விகளின் எண்ணிக்கை அதிகம். கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்தவும், கிளம்பிய கேள்விகளுக்கான பதில்களை அடையவுமாக நீண்ட பயணம் படலமாக பரிணாமம் பெற்றது.
பழைய நூல்கள், பழைய வரலாற்றைப் புதுபித்த நூல்கள், உண்மையை வரலாற்றை உரக்கச் சொன்ன நூல்கள், ஆன்றோர் பதிவு செய்த சான்றுகள் என படலம் படலமாகப் போனாலும் பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.
அப்பதில்களை அடைய முயல்வதே இத்தொடரின் முதன்மை நோக்கம்.
என் தேடல் படலத்தில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது இரண்டாவது நோக்கம்.
உங்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்று தேடல் படலத்தைத் தொடர்வது இன்னொரு நோக்கம்.
என் தேடல் பயணத்தில் உங்களையும் இணைத்து வயவையூரின் வரலாற்றைப் பதிவு செய்வது மற்றொரு நோக்கம்.
இந்நோக்கங்கள் நிறைவேற ஒத்தாசையாக இருப்பீர்களென நம்புகிறேன்.
இத்தொடர் பதிவில் உறுதிப்படுத்தப்பட்டவற்றை ஆதாரத்துடன் பதிவு செய்கிறேன்.
அவை தோற்றுவித்த ஊகங்களை ஊகங்களாகப் பதிவு செய்யப் போவதில்லை. அவற்றை ஆய்ந்து ஏன் இப்படி இருந்திருக்கக் கூடாது என்ற நிறுவல் கேள்விகளாகப் பதிவு செய்கிறேன். அனைவரும் கலந்தாய்ந்து வயவையூரின் உண்மை வழித்தடத்தை கண்டு பிடிக்கும் பொருட்டே இந்த முடிவு.
இப்பதிவுத் தொடர் மனம் தடவிச் செல்லும் தென்றலையும், உடல் தழுவிச்செல்லும் காற்றையும் கொண்டிருந்தாலும், ஆங்காங்கே வயவையூர் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் தூவப்பட்டிருக்கும். கடிபட்டு உறைத்தால், சுவைக்காகத் தூவப்பட்டதே தவிர, சுவாரசியத்துக்காக அல்ல என்ற எங்களூர் தண்ணீரைப் பருகுங்கள். வயவையூரின் வழித்தடம் எனும் தாக சாந்தி அடையலாம்.
தொடர்வோம்.