நாள் : 54
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :4
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
விவாதத்துக்குள்ளான தலைப்பு கற்பு.
கற்பு என்றால் என்ன? அது பெண்ணிற்கு மட்டும் தான் உண்டா?
இந்த ஒரு வார்த்தையைப் பற்றித்தான் எத்தனை விவாதங்கள்? வள்ளுவர் கற்பைப் பற்றி என்ன சொல்கிறார்.
கற்பென்னும் திண்மை!!
கற்பு என்பது தூய்மை அல்ல. கற்பு என்பது புனிதம் அல்ல. கற்பு என்பது ஒரு உறுதி.. கற்பென்னும் திண்மை…
ஒழுக்கத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் உறுதியே கற்பு.
ஒழுக்கம் என்றால் என்ன?
ஒழுக்கம் என்பது இப்படியெல்லாம் வாழ வேண்டும் என வகுக்கப்பட்ட ஒழுகும் முறைகள்.
சிக்னலில் ரெட்லைட்டை மதிக்காமல் போவதும், நடைபாதையில் தூவென துப்புவதும், இப்படி வகுக்கப்பட்ட விதிகளை மீறுவதும் கற்பின்மைதான்.
ஆக நன்னெறிகளில் ஒழுகுவதில் உறுதி கொண்ட பெண்ணைப் போல பெருமை கொண்டோர் உலகில் இல்லை.
தாயின் கண்டிப்பும், நன்னெறி உறுதியுமே குழந்தைகளின் பண்பாக மாறுகிறது.
தலைவி நன்னெறிகளில் கொள்ளும் உறுதி குடும்பத்தையே நல்வழியில் செலுத்துகிறது.
ஆக எந்த கட்டாயத்திலும் தீய நெறிகளை கைக்கொள்ளாத ஒப்புக் கொள்ளாத பெண், உயர்ந்தவள். அவளே சிறந்த வாழ்க்கைத் துணை நலம்.