யாழவர் தயாரித்த மகிழுந்துக் கண்காட்சி

486

விசாலமான பாரிய உள்ளரங்குகளில், வண்ண வண்ண விளக்குகள் மின்ன, அலங்காரப் பெண்கள் புன்னகை சிந்த,  அம்சமான ஆடவர்கள் சித்திய புன்னகையில் மிதக்க.. டொக்… டொக்.. கென மனிதக் குதிரைகள் நிசப்தம் கலைக்க… நாளைய வீதி நாயகர்களாக காட்சி அளிக்கும் மகிழுந்துகள். ஆம்… எதிர்கால மகிழுந்துக் கண்காட்சிகள் உலகளாவிய ரீயில் பிரபல்யமானவை.

ஈராண்டுக்கொரு முறை பிரான்சில் நடக்கும் மகிழுந்துக் கண்காட்சியைக் காண உலகின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து மெனக்கெட்டு வருவோர் தொகை மிகவும் பெரிது. வாங்கும் நோக்கில் கோடீஸ்வரர்களும், ரசிக்கும் நோக்கில் ஆர்வலர்களும், செல்ஃபி எடுக்க பெருந்தொகையான மக்களுமாக அலை மோதிம் கண்காட்சியகத்தில் நின்றால், மனசோரம் ஒரு சோக கீதம் ஒலிக்கும்.

பேரறிவும் பேராற்றலும் கொண்ட, வசதியும் வாய்ப்புமற்ற, சதிச் சாபத்துக்கு ஆளான தமிழினத்தின் தளைகள் அறுபடுமேயானால், இதை விட உயர் ரக மகிழுந்துகள் வரிசை கட்டுமே என்ற ஏக்கம் பிறக்கும்.

அவ்வேக்கம் காணாமல் போகக்கடவதென, சாபம் கொடுக்க கடந்த ஞாயிறு 13/05/2018 அன்று யாழ்ப்பாணத்தில் கார்க் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தின் பெரு முயற்சியில் உருவான நான்கு வாகனங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைக் கொண்டு ஓராண்டு உழைப்பில் இவ்வாகங்கள் உருவாக்கட்டுள்ளன.

சிறுவர்கள் கூட எளிதாக இயக்கக் கூடிய வகையில் இவை தயாரிக்கப்பட்டமை சிறப்பம்சம் ஆகும். யாழ்ப்பாணத்தில் பதிக்கப்பட்டுள்ள இச்சுவடு ஒரு புறம் மகிழ்வை நிரப்பினாலும், இதை விடப் பல சாதனைகளை புரியும் வாய்ப்பை நாங்கள் தவற விட்டு விட்டோமெனும் நினைப்பு கருமை படர்த்தியது.

சர்வதேசமே வாயடைக்கும் வண்ணம் கண்காட்சி நடைபெறும் நாளுக்காகக் காத்திருப்போம்.