குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை
****************************************************
இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளை மருத்துவப் போராளிகளைப் போலவே அனேகமாக எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள்.
களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள் (Field compressor) வைத்திருப்பார்கள்.
ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட வேண்டும் எந்தெந்த காயங்களை எப்படியெல்லாம் நகர்த்த வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும்.
எங்களிடம் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்ப்பட்ட போது அந்தக் கட்டுக்களை அவிழ்த்து மணலும் சேறும் சகதியுமாய் இருந்த காயங்களை சேலைன் மூலம் கழுவித் துப்பரவு செய்தோம்.
இப்போது காயங்களில் கிருமித் தொற்றுக்கள் (Infection) ஏற்படாது தடுப்பதற்காக நோயுயிர் முறிகள் (Antibiotics) போடப்பட வேண்டும்.
நோயுயிர்முறிகளில் பொதுவாக பென்சிலின் (Penicillin) வகை மருந்துகள் சிறந்தவை.
இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலிருந்து இன்று வரை பக்ரீரியாக்களுடன் அல்லது நுண்ணுயிர்களுடன் போரிட்டு மாந்தரின் உயிர்காக்கும் அந்த மருந்துகளை ஊசி மூலம் நாளத்தினூடக (Intravenous) ஏற்றவேண்டும்.
இரவு முழுவதும் அதிகரித்த தாக்குதல் காரணமாகவும் ரோச் வெளிச்சம் கூட பாவிக்க முடியாத காரணத்தால் பென்சிலின் போடுவதற்கான சோதனை ஊசி (Penicillin sensitive test) போடுவது சாத்தியமற்று இருந்ததது.
எதிரியின் பைற்ரர் உலங்கு வானூர்தி வட்டமிட்டு வட்டமிட்டு தாக்கிய வண்ணம் இருக்க அநேகமான பெரிய காயக்காரருக்கு அம்பிசிலின் ஊசி மருந்துகளையே (Ampicillin Injection) ஏறினோம்.
இன்று காலையும் காயமடைந்தவர்களை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு அனுப்ப முடியாதிருப்பதை புரிந்திருந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் தளபதிகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம்.
யாழ் மாவட்ட முன்னாள் தளபதி திருமிகு செல்வராசா அவர்கள் தளமிட்டிருந்ததால் அவரின் மூலம் கடலில் எங்கள் படகுகள் வரக்கூடியதாக உள்ளதா என்பதை அறிந்து கொண்டோம்.
பெனிசிலினிற்கான சோதனை ஊசிகளை பெண் மருத்துவர் வித்தகி ஏற்றி பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
செறிவான குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் ஒரு கொலைவலயத்தில் காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஒரு எறிகணையிலேயே நிறைய பேரை இழக்க வேண்டிவரும் என்ற போரியல் பட்டறிவு எம்மிடம் இருந்தது.
ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரின் போது தமிழீழத்தின் பிரபல பாடகர் சிட்டு விழுப்புண் அடைந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தற்காலிக மருத்துவநிலையின் மீது வீழ்ந்த குண்டினால் மீளவும் பாரிய காயமடைந்தே வீரச்சாவு அடைந்தார்.
அந்தச் சம்பவம் போல இங்கேயும் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம்.
வெவ்வேறு மரங்களின் கீழும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள பதுங்ககழிகளில் பாதுகாத்தோம்.
வெம்மை கூடிய அந்த மணல் பிரதேசத்தில் பென்னம்பெரிய விருட்சம் ஒன்று கூட இருக்கவில்லை.
பரட்டையான மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் இருந்தன.
சிறுபராயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போனால் கடற்கரைக்கும் செல்வோம். எழில் மிகு மணல் திட்டிகள் தாண்டிச் செல்வது கனி பறிக்க, ஆம் நாவல் கனி பறித்துச் சுவைத்து உண்பதற்கு!
இன்றும் அதே கடற்கரையின் சற்றுத் தெற்கே வெற்றிக்கனி பறிப்பதற்காய் தரையிறங்கி நிற்கின்றோம் என்பதை மனம் எண்ணிக் கொண்டது!
அந்த அருங்கனிக்காக நண்பர்களின் இன்னுயிர்களையும் அங்கங்களையும் கொடுக்கவேண்டி இருக்கின்றதே என நினைத்த போது நெஞ்சு கனத்தது.
குண்டுகளால் நிலம் அதிர்ந்து கொண்டிருந்தாலும், நம்பிக்கைகளுடன் காலை விடிந்தது.
தங்கை அருள்நங்கை ஈரத்துணியால் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளின் முகங்களை தாயன்புடன் துடைத்துக் கொண்டிருந்தாள்.
“உண்ண எதாவது கொடுக்கலாமா?”
என்று அருள்நங்கை கேட்டாள்.
ஆம், எனச் சொல்லிவிட்டு சாப்பிடு வதற்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார் பொறுப்பு வைத்தியர்.
அப்போதுதான் எங்களின் உலர் உணவுப் பைக்கற்றுகளும் தீர்ந்துவிட்டமை அவளிற்கு நினைவில் வந்தது.
மூன்று நாட்களுக்குத் தேவையான உலர் உணவு தந்து அனுப்பப்படிருந்தாலும் சண்டையில் நின்ற போராளிகளும் தங்களது ஆயுதங்களையே அதிகம் கவனம் கொண்டிருந்ததால், மீதமிருந்த கொஞ்ச உணவுகளையும் தவறவிட்டுவிட்டார்கள்.
நாங்களும் உயிர் காக்கும் உன்னத பணியினை மிகச்சரியாக செய்ய வேண்டும் எனும் உந்துதலே மேலிட்டு நின்றதால் மருந்துப் பொருட்களையும் மருத்துவ தளபாடங்களையும் காவி வந்தோமே ஒழிய உலர் உணவுகளை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
இப்போது நோயாளருக்கு உணவு இல்லையே என்ற போது அனைத்து களமருத்துவ போராளிகளின் முகமும் வாடிவிட்டது.
தொடரும்…