நவீன நாரதர் – 2

717

விளையாட்டுப் போதும் நாரதா சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்..

உங்களாலேயே பொறுக்க முடியவில்லையே!.. இளைஞர்களை எண்ணிப்பாருங்கள் ஈஸ்வரா..

அதாவது தனது மனைவிக்கு எவனொருவன் தன் மிகச்சிறந்த நம்பிக்கையை, மதிப்பை, அன்பை அளிக்கிறானோ அவன் மகிழ்ச்சியைத் தவிர வேறு காண்பதில்லை…

ஏற்கனவே ஒருத்தி என் தலைமேல் அமர்ந்து படுத்தும் பாடு போதாதா? மக்களையும் அந்த வேதனையை படச் சொல்கிறாயா? நாரதா நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்…

அப்படியல்ல அம்மையப்பா! எதிலுமே உடனடி லாபம் எதிர் நோக்கக் கூடாது.. ஒருவன் தன் மனைவியை சிறந்த தோழியாக்கிக் கொள்வதின் மூலம் பாரம் மனைவிக்குத் தான் அதிகமே தவிர அவனுக்கல்ல..

புரியவில்லையே! இது எப்படி! இரண்டும் ஒன்றும் ஒன்று என்று புதுக் கணக்கு சொல்லுகிறாய்?

பிறந்த வீட்டில் இருந்து வரும் ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும் பிரகதீஸா, அவளின் பெற்றோர்கள், தோழர்கள், உறவினர்கள் என அனைவரையும் விட்டு வருகிறாள்.. இத்தனை இழப்புகளையும் தாங்கி வரும் அவளுக்கு கடலில் கிடைத்த கட்டுமரமாய் இருப்பது கணவனின் ஆதரவு.. ஆரம்பகாலத்திலே எதையுமே ஒப்பிட்டு நோக்கக் கூடிய மனது இருக்கும். நம் தந்தை எப்படி பார்த்துக் கொண்டார், நம் அண்ணனுடன் எப்படி விளையாடினோம் என்று..

ஆமாம் ஆமாம்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் தட்சன் நடத்து யாகத்துக்கு செல்வேன் என்று அடம் பிடித்தாளே சதிதேவி..

இப்படிபட்ட ஒருபெண், ஆதரவும் அன்பும் மிக்க ஒருதோள் கிடைக்கும் பொழுது சட்டென தழுவிக் கொள்கிறாள்..

என்ன சொல்கிறாய் நான் அன்பு காட்டவில்லையா?

அன்பு காட்டியிருக்கலாம், ஆனால் சமத்துவம் காட்ட எத்தனைக் காலம் பிடித்தது நினைவிருக்கிறதா உமக்கு.. சக்தியை வணங்காத முனிவனை வணங்க வைக்கத்தானே பாதியிடம் தந்தீர்..

சரி சரி… சக்தி வரும் நேரத்தில் பழைய விஷயங்களை கிளராதே மேலே சொல்…

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முற்றிலும் புதிய இடம் என்று வரும்பொழுது இருக்கும் தற்காப்பு உணர்ச்சி என்பது தொட்டாற்சிணுங்கி போன்றது. ஆகையால் புது இடம் வந்தப் பெண் சட்டென எதிலும் தற்காப்பு நடவடிக்கை எடுப்பாள்.. அத்தை ஒரு வார்த்தை சொன்னது சங்கேதமாய் பூடகமாய் தன்னைக் குத்திக் காட்டுகிறதோ.. ஓரகத்தி (ஓர் அகத்தி, ஒரே வீட்டில் வாழவந்தவள், கணவனின் சகோதரன் மனைவி) சொன்னது தன்னையா, இல்லை அவளுடைய அண்ணியையா.. இப்படி பல எண்ணங்கள்..

கல்யாணம் செய்து கொண்டது அவளும் அவள் கணவனும் தானே இவர்களைப் பற்றியெல்லாம் அவள் ஏன் கவலைப் படவேண்டும்?

என்ன செய்வது இறைவா, இவர்களேல்லாம் தன் கணவனுக்கு பிடித்த உறவினர்கள்.. இவர்களின் கூட்டத்தில் நம்மைச் சேர்ப்பார்களோ இல்லை ஆட்டத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற அச்சம்

இப்படியே போனால் எப்படித்தான் வாழ்வதாம்?

இங்குதான் கணவனின் மீது அவள் கொள்ளும் நம்பிக்கை கை கொடுக்கிறது. கணவன் ஆதரவு பெற்ற எந்தப் பெண்ணும் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் தெளிவாக தைரியமாக இருக்கிறாள்..

அவர்களெல்லாம் தெளிவாகத்தான் தைரியமாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் பயந்து ஒளிந்து..

அவசியமே இல்லை அரனே! பெண்கள் ஆதிக்கம் செய்பவர்களைத்தான் அவதிக்குள்ளாக்குவார்கள்.. நண்பர்களையல்ல.

புரியவில்லை…

சற்று விலகிச் சென்று உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்… நான்கு ஆண்கள் நண்பர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான்கு காரியங்கள் இருந்தால் ஆளுக்கொரு வேலை என்று செய்வார்கள்…

ஆமாம் ஆமாம்

ஆனால் பெண்கள் அப்படியல்ல.. தனித்தனியே செய்யமாட்டார்கள்.. ஒவ்வொரு காரியத்திலும் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்..

ம்ம்… உதாரணத்திற்கு…

இரு ஆண் நண்பர்கள் தங்கள் இருவருக்கும் உடை எடுக்கச் சென்றால், அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் தேர்வு செய்வார்கள்.. பணம் கொடுப்பார்கள் வாங்கி வருவார்கள்… இரு பெண்கள் சென்றால், முதலில் ஒரு பெண்ணிற்கு தேர்வு செய்வார்கள்.. அது இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.. பிறகு அடுத்த உடை.. அதுவும் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும்…

ஓஓஓஓ பெண்கள் உடையெடுக்க தாமதமாகும் காரணம் இதுதானா?

அதுமட்டுமல்ல, தனி ஒரு பெண்ணாக சென்று ஆடை வாங்கினால் எந்தப் பெண்ணுக்குமே திருப்தி இருக்காது.. ஏதோ வாங்கினோம் உடுத்தினோம் என்றுதான் இருப்பார்கள்…

சரி சரி மெனக்கெட்டு எதற்கு இந்த உதாரணத்தை சொல்லுகிறாய்?

இப்படித் தன் தோழியை எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கும் ஒரு மனைவி அந்த தோழிக்கும் மேலாய் தன் கணவனை நினைக்க ஆரம்பித்தால்..

ஆரம்பித்தால்…

யோசித்துக் கொண்டிரூங்கள் அவசர வேலை இருக்கிறது வந்து சொல்கிறேன்