கரவையின் மத்தொலியும் வயவையின் பந்தொலியும்

அழகும் அர்த்தமும் கொட்டிப் பரவி விழிக்கு விருந்தளிக்கும் பாண்டியர் காலத்தின் சிற்பங்கள் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ இல்லை ஒரு வருடத்தில் அமைக்கப்பட்டவை அல்ல!

மாறாக பல தசாப்த காலங்களா ஓய்வொழிச்சல் இன்றி உழைத்த எங்கள்
சிற்பக்கலைஞர்களின் கற்காவியம் ஆகும்!

தாய்த் தமிழகத்தில் அழகு ஒளிரும் “சிற்பக்காடுகள்” அமைந்துள்ள
*மாமல்லபுரத்தில்* பல ஆண்டுகள் “*உளியொலி*”கள் அல்லது “*உளியின்_ஓசை*” கேட்டுக் கொண்டேயிருந்ததாக வரலாறு ஆசிரியர்கள் அழகழகாய் கூறுகின்றார்கள்.

 

தமிழர்தம் மாங்கனித்தீவின் சிரசமெனத் திகழும் வடமராட்சியின் “கரவையூர்” என அழைப்படும் கரவெட்டி பகுதியில் பசுமை நிறைந்த மேய்ச்சல் நிலத்தில் அதிகம் அதிகம் மந்தை வளர்த்து பால் கறந்தனர்.

கறந்த பாலை உறையவிட்டு ‘மத்தினால் தயிர் கடைந்த’ இடத்தில் “*மத்தொலி*”கள் கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஆதலினால்…

எங்களின் அந்தத் திருவூர் “*மத்தொலி*” என்று பெயர் பெற்றது.

 

அஃதே!

எங்கள் தொல்லூராகிய வயவையூரில் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக “பந்தொலி”கள் கேட்டுக் கொண்டேயிருந்தது.⚽️

கரப்பந்தாட்டம்,கால்ப்பந்தாட்டம், துடுப்பாட்டம் என எங்கள் பல பகல்களும் இரவுகளும் இனிமையாய் இருந்தன.

1986ஆம் ஆண்டிலும் பின்னர் 1990 ஆம் ஆண்டிலும் எம் செம்மண்ணை ஆக்கிரமித்துக் கொண்ட (அ)சிங்கபாகு வாரிசுகள் “வேட்டொலி” போட்டதால் முப்பது(30) ஆண்டுகள் பந்தொலி கேட்கவில்லையாயினும் இனிமேல் “பந்தொலி”க்கும் ஆயகலைகளுடன் அர்த்தம் கொண்ட அத்தனையும்
அரங்கேறும்!⚽️

அறிவாண்மையும் ஊராண்மையும் கூடவே ஏராளம் ஏராளம்
ஏராண்மையையும்
கொண்ட இளைய வயவர்கள் நாளை புதிய பூபாளம் இசைப்பர்.

பேரூராம் பலாலியின் கடலோரமும்
பெருத்தவூராம் வயாவிளானிலும் – இனி
“சிலம்பொலி”யுடன்
“பந்தொலி” கேட்கும் கேட்கும்!⚽️

(கரவெட்டி ஊரின் சிற்றூராம் “மத்தொலி” காலவோட்டத்தில் மெல்ல மருவி இன்று “மத்தொனி” ஆகிவிட்டமை குறிப்பிடத்தக்கது)