எது நியாயம், எது பாவம், என்று தீர்மானிப்பவன் மனிதனல்லன். இடமும் காலமும்தான்

கனதியான கந்தகக் காற்று எங்கள் நாசிகளை நிறைத்துக் கொண்டிருந்தன!

குண்டொலிகள் செவிப்பறைகளை ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டிருந்தன!

கண்கள் இரண்டும் கனகாலமாய் “கண்ணுறக்கம்” காணாததால் சிவந்து சிவந்து எரிவுணர்ச்சி கொண்டன!

1995 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில்
யாழ்ப்பாணத்தின் பெரு நகரமும் அதன் வீதிகளும் வெறிச்சோடிப் போயிருந்தன!

திருநெல்வேலிச் சந்திக்கு அருகாமையில் எமது அணிகள் நிதானமாய் நிலையெடுத்து சமர் செய்து கொண்டிருக்க யாழ் பருத்தித்துறை வீதிக்கு கிழக்குப் பக்கமாய் நகர்ந்த ஶ்ரீலங்கா இராணுவம் கச்சேரியை நெருங்கியதால் எமக்கான எஞ்சியிருந்த ஒரேயொரு விநியோகப் பாதையும் இல்லை என்றானது.

இராணுவ வியூகங்களை வகுக்கும் ஜெனரல்கள் எப்போதுமே எதிர்த் தரப்பின் ஆயுத, உணவு விநியோக வழிகளைத் தடுத்து சமராடுவார்கள்.

உலக இராணுவ வரலாறு பகரும் அந்த  உத்தி பாரெங்கும் பரவலாகவே நடைபெறுவதுதான் அந்த வகையில் ஶ்ரீலங்கா இராணுவத்தை வழிநடாத்திய ஜெனரலும் தமது வெற்றியை அடைந்திருந்தார்.

முற்றுகை நெருங்க நெருங்க எங்கள் தோழர்கள் பலரும் வீரச்சாவு அடைந்ததாலும் விழுப்புண் அடைந்ததாலும் பின் நகர்த்தப்பட்டுக் கொண்டே இருந்தனர்.

நாலைந்து நாய்களும் நாங்களும் மட்டுமே பசியோடும் தாகத்தோடும் யாழ் நகரத்துப் பெருவீதிகளில் உலாவிக் கொண்டிருந்தோம்!

குருநகர், நாவாந்துறை குடியிருப்புப் பகுதியில் அஞ்சிஞ்சி, ஆட்லெறி மற்றும் விமானக் குண்டு வீச்சினால் இறந்த ஆடு மாடுகளை நாய்கள் புசித்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பசியோடு அலைந்த இரண்டு நாய்கள் செம்மறியாடு ஒன்றினை குருநகர்ப் பகுதியிலிருந்து நகரத்தை நோக்கித் துரத்திக் கொண்டு வந்ததை அவதானித்த கண்டாவளை மண்ணின் கருணைப் பெருங்கடல் நாய்களிடமிருந்து காப்பாற்றி
ஆட்டுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

இஞ்சிக்கு இஞ்சி அஞ்சிஞ்சியுடன் ஆட்லெறியும் வீழ்ந்து வெடிக்க வெடிக்க உயிர் காக்கும் உன்னத பணியும் இரவு பகலாய்த் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அரக்கப் பரக்க செய்வதற்குப் பல பணிகள் கடலெனவே இருந்தாலும் பச்சிலை கொடுத்து அந்தச் செம்மறிக் கிடாய் ஆட்டைக் கண்டாவளை மண்ணின் மைந்தன் கவனித்து வந்தார்.

யாழ் நகரை அண்டிய கட்டடக்காட்டில் பச்சிலைகளும் குழைக் கொப்புக்களும்
என்பது முயற்கொம்புதான் ஆனாலும் அவர் எங்கோ சென்று அவற்றினை கொண்டு வந்து ஆட்டுக்குக் கொடுப்பார்.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது போல எங்கள் மனங்கள் செம்மறி ஆட்டின் மேலே மெல்ல மெல்லத் தாவியே ஏறிக் கொண்டன.

போர்க்களத்தில் அல்லது
போர்க்களத்திற்கு மிக அண்மையில்
சமையல் என்பது சவாலாய் அமைந்தாலும் இளமை நாட்களின் பசியின் வேகம் சவால்களை சாதாரணமாய் முகம் கொடுத்தது.

புகை கண்டால் பகை தாக்கிடுவான் என்ற உணர்வால் யாழ் நகரின் ஒதுக்கமான ஓரிடத்தில் “பால்கஞ்சி காய்ச்சி” சொப்பின் பாக்கில் இட்டு ஒரு கிழமையாக தந்த அந்த ஒற்றை உணவும் இராணுவம் கத்திடக் கேட்டிடும் தூரத்தில் வந்துவிட்டதால் இல்லை என்றானது.

அந்த நேரத்திலேதான் உணவு தேடி அலைந்த அக்கொடிய நாட்களில் அன்பாய் வளர்த்த அந்தச் செம்மறியாட்டை அடித்துக் காய்ச்சி உண்ண வேண்டிய நிலை வந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்கள் நிலைமையை மென் மேலும் மோசமாக்க தேத்தண்ணி ஆத்திக் குடிக்கவெனத் தந்த பால்மாவைத் தவிர உண்பதற்கு வேறு ஒன்றுமே இல்லாத நிலை வந்தது!

பசியோடிருந்த உடையாருக்கு யாழ் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் பண்ணைக்கடலில் மீன் பிடித்து உண்ணும் பெருமளவு நீர்க்காகங்களின் ( cormorants) ஒரு பெரிய புகலிடம் நினைவுக்கு வந்தது.

பாவம் மரத்திற்குக் கீழே கன்னங்கரிய தார் வீதியில் வெள்ளை வெள்ளையாய் கோலமிட்டிருந்த அவற்றின் எச்சம் அந்த நீர்ப்பறவைக்கு ஆப்பாய் ஆபத்தாய் அமையுமென அவை கிஞ்சித்தும் பார்த்திருக்காது!

ஆம், நாய்களிடம் இருந்து தனைக் காத்துத் தப்பியோடி வந்த செம்மறி ஆடும்…,

பகல்ப் பொழுதெல்லாம் பண்ணைக் கடலில் மீனை வேட்டையாடி குஞ்சுக்கும் கொடுத்து அந்திசாயும் நேரத்தில் மரத்தில் ஓய்வு கொண்ட பறவைகளும் எமது பசிக்கு இரையாகிப் போனவே என்ற மனப்பதிவுகள் மூளையின் இடுக்குகளில் இருந்து இடையிடையே எட்டிப் பார்த்து இன்றும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்த நேரத்தில் எனக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய அந்த நூல் அறிவுரையும் ஆறுதலும் தந்து ஆழ்மனத்தின் அசாதாரண ஆழம் வரை ஊடுருவுப் பாய்ந்து ஆற்றுப்படுத்துகின்றன.

ஆம், அந்த நியாய வரிகளை கீழே கொட்டிப் பரவுகின்றேன். நீங்களும் பொறுக்கி வாசித்து ஆறுதல் ஆறுதல் கொள்ளலாம்!

….”எது நியாயம், எது பாவம்,
என்று தீர்மானிப்பவன்
மனிதனல்லன்.
இடமும் காலமும்தான்.

தாகத்தில் சாகப் போகும்
பாலைவனப் பயணிகள்,
தங்கள் ஒட்டகத்தையே
கொன்று அதன் உள்ளிருக்கும்
நீரை அருந்துவார்களாம்.
அங்கே ஒட்டகவதை என்பது
பாவமல்ல. பாலைவன
நியாயம்.

பசி உடம்பைத் தின்னத்
தொடங்கும் பஞ்சநாட்களில்
எறும்புப் புற்றை இடித்து,
அதன் மாரிக்காலச்
சேமிப்பான
தானியம் எடுத்துச்
சமைப்பார்களாம்.
அங்கே அது திருட்டு அல்ல.
அது பசியின் நியாயம்.

உணவு கிட்டாத காலத்தில்
உயிர்காக்க நினைக்கும்
இருளர்கள், களிமண்
தின்பார்களாம்.
அங்கே மண் தின்பது என்பது
பாவமல்ல.
பழக்க நியாயம்.

பயிர் செய்ய முடியாமல்
வருஷத்தில் பாதி நாட்கள்
பனிமுடிக் கிடக்கும்
பிரதேசங்களில்
துருவக்கரடிகளும் நாய்களும்கூட
அன்றாட உணவாகுமாம்.
அங்கே அசைவம் என்பது
பாவமல்ல. பூகோள
நியாயம்.

சோமாலியாவின் பஞ்சத்தில்
எலும்பும் உயிரும் வெளியேறத்
துருத்திக் கொண்டிருக்கும்
உடம்புக்குச்
சொந்தக்காரர்கள்
ஒன்றும் கிடைக்காமல்
உடைகளையே தின்னத்
தொடங்கினார்களாம்.
அவர்கள் உடை தின்றது
பாவமல்ல. கால நியாயம்…”

 

நியாயங்கள் கூற முடியா நெடுந்துயர் காவும் எங்கள் மனங்களில் ஆறா ரணங்களாய் இருக்கும் சில அன்றைய அநியாயங்கள் இன்று நியாயங்களாகிப் போவதும் காலமும் இடமும் கணித்த கணிதம்தான். செம்மறியும் நீர்க்காகமும் அவ்வகை கணிதம்தான்.