தொடருந்து நட்புகளுடன் கதைத்தபடி வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். மிகவும் தாழொலியில் எங்கள் உரையாடல் இருந்தது. அப்போது இருவர் நாமமர்ந்திருந்த தொடரியின் பெட்டியில் வந்தமர்ந்தனர்.
அவர்களைக் கண்டதும் எங்கள் கண்கள் அவர்களைத் தொட்டு மீண்டனவே தவிர வேறெந்த வகையிலும் எங்கள் கவனத்தை அவர்கள் ஈர்க்கவில்லை. எங்கள் உரையாடல் தொடர அவ்விருவரில் ஒருவர் “இண்டியா?” என்றார்.
என் நண்பர் இல்லை என்றதும் “ஷ்ரிலங்கா” என்றார். ஆமெனப் பதிலிய நண்பர் பதிலுக்கு “நீங்கள் இந்தியாவா? இந்தியாவில் எவவம்” என்றார். “எவடம்” என்பது அவருக்கு விளங்கவில்லை. “எந்த இடம்” என்று “விளக்கினேன்”. “ஆந்திரப்பிரதேஷ்” என்றார்.
சற்று இடைவெளி விட்டு, ஏதோ உந்த “தமிழ் தெரியுமா” என்றேன். «I can understand tamil but I can’t speak Tamil » என்றார். உங்களால் தமிழைப் புரிந்துகொள்ள முடியுமா அல்லது இது தமிழென்று புரிந்துகொள்ள முடியுமா என ஆங்கிலத்தில் வினவியதும், கூர்ந்து நோக்கி விட்டு புன்னகையுடன் இரண்டாவது என்றார்..
அவர்களை கண்டதும் அவர்கள் ஈழத்தவர் என்றுதான் எண்ணினேன். தமிழகத்தோர் போல அவர்கள் தோற்றம் அளிக்கவில்லை. என் எண்ணத்தையே கொண்டிருந்த அருகிலிருந்த நண்பன் இன்னொன்றையும் என்னுள் பற்ற வைத்தான்.
”எங்கட நாடு எண்டதை விட உங்கட ஊர்க்காரர் போல இருக்கிறாங்கள்” என்றார். சட்டென ஒரு நிமிர்வு என்னுள். உட்பார்வை கூரானது. உண்மைதான்.. அகன்ற மார்பு.. திரண்ட தோள்கள்.. ஆஜாபாகுவான உடல்வாகு.. என வயவையூர் ஆண்களுடன் 90 சதவீதம் ஒத்துப் போனார்கள்.
உடலமைப்பில் மட்டுமல்லாமல் அவர்கள் மொழி ஒலிப்பு முறையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. குறிப்பாக ஒண்டு, இரண்டு, மூண்டு என்றவாறு காதில் விழுந்ததாக நினைவு. அல்லது பிரம்மையாகவும் இருக்கலாம் எனும் மங்கலான மனசு.
எப்படியோ.. விழுந்த பொறி தேடுபொறியை உசுப்பி விட்டிருக்க வேண்டும். இரவெல்லாம் அலையோசை கேட்டுக்கொண்டே இருந்தது மனசில்..