அறிவியல் நெம்புகோல் – அ.மை.06

592

கிரேக்க தேசம்…
தாயாதி சண்டைகளால் துண்டு துண்டாய் கிழிந்து கிடந்த காலம்..
ஆண்டு —- கி,மு. 300 .
அங்கே ஒரு குட்டி ராஜா. அவனுக்கு மிக உயர்ந்த விலையில் அழகாய்
ஒரு கிரீடம் செய்துகொண்டான்…
பொற்கிரீடம் தகதகத்தது…
கூடவே மன்னனின் மனதில் சந்தேகமும்…
பொற்கொல்லன் கணிசமாய் தங்கத்தை ” சுட்டு இருப்பானோ??!!”
கலப்படமாய் செம்பை அள்ளி “உட்டு இருப்பானோ!!!”
யார் சொல்வார் இந்த தலைக்கிரீட பொன் – செம்பின் சரி விகிதம்?
அரண்மனை அமைச்சர்கள் சொல்லி, அந்த இளைஞன் அழைத்துவரப்பட்டான்..
“அரசே…இவன் ஒரு ஞானி..விஞ்ஞானி…
கணக்குகளே இவன் தவம்….
தீர்க்க சிந்தனையே இவன் பலம்..
இந்த சிந்தனை மூலம் இவன் காணும் தீர்வுகளே இவனுக்கு பரவசம்…
இவன் பெயர் ஆர்க்கிமெடிஸ்….”
மன்னன் கேட்டான் ; ” உன்னால் முடியுமா தம்பி?”
” முயற்சி செய்கிறேன்…”

ஒரே சிந்தனை… ஒரே நோக்கம்…
ஒரே நினைவு..அதே கனவு…
ஞானிக்குப் பக்தியே பரவசம்…
படைப்பாளிக்கு படைப்பதே பரவசம்…
விஞ்ஞானிக்கு கண்டுபிடிப்பதே பரவசம்…
Ecstasy – இது பரவசமா…. பெருமிதமா..
உள்ளுக்குள் உள்ளம் பொங்கும் விம்மிதமா?
ஆதியில் அன்னையின் அணைப்பில்,
பின் தந்தையின் கனிவில்
ஆசிரியரின் பாராட்டில்
நட்பின் நெகிழ்வில்
காதலின் ஊஞ்சலில்
காமத்தின் தேரில்
பணி நாளின் முடிவில் தோன்றும் முழுமையில்
சனிஞாயிறு தோட்டம் செப்பனிட்டு பூத்த ரோஜா மொட்டில்..
படிப்பதில்..பகிர்ந்து சிரிப்பதில்…
எங்கும் உண்டு இந்தப் பரவசம்..
தேடி தேடி அடைவதே படைப்பின் சூட்சுமம்…

இதில் தனிவகைப்பரவசம் விஞ்ஞானிகளுடையது…
நாம் பார்த்து பரிதாபப்படும் வண்ணம் அவர்கள் வேலைநேரம்..
அடடா… இசை, ஓய்வு இதெல்லாம் மிஸ் பண்றாரே…
இல்லை… அவர்கள் எதையும் இழக்கவில்லை..
நம் உச்சு கொட்டும் பரிதாபம் அவர்களுக்குத் தேவையுமில்லை..
அவர்களுக்கு அந்த ஆராய்ச்சியே இன்பம்..
இயற்கையின் அதிசயங்களை, இரகசியங்களை
உள்ளே ஒளிந்துள்ள பரிபாஷைகளை புரிந்துகொள்ளலே இன்பம்…
அந்த பரவச நிலைதான் ஆர்க்கிமெடிசுக்கும் இப்போது…

“உண்ணும் போதும்
உறங்கும் போதும்
ஏன் குளிக்கும் போதும்
எண்ணம் முழுதும்
மன்னன் கேள்விதானே..”

கிரேக்கதேசத்தின் புகழ்பெற்ற பொதுக்குளியல் அறைகள்…
தொட்டித்தண்ணீரில் அமிழ்கிறான் ஆர்க்கிமெடிஸ்..
அட்றா டேய் அட்றா…
அவனுடைய கனபரிமாண அளவு தண்ணீர் வழிகிறதே?
மின்னல் வெட்டியது…
தன்னை மறந்தான்… தன் ஆடையில்லா கோலம் மறந்தான்…
“யுரேகா… யுரேகா……”
(“கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்..”)

தெருவழியே “அப்படியே” ஓடினான்….
வீட்டில் உள்ள பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிறைத்தான்..
கல் போட்டான்..மூழ்கியது.. வழிந்த நீரை அளந்தான்.
கட்டை போட்டான்..மிதந்தது..வழிந்த நீரை அளந்தான்.
தொகுத்தான்..பகுத்தான்..வகுத்தான்…
வெற்றி என்பது
1% உந்து (Inspiration)
99% உழைப்பு (Perspiration)

விடாமல் உழைத்து ஆர்க்கிமெடிஸ் கண்டதுதான்
“மிதத்தல் விதி”.
ஒரு பொருள் மிதக்கிறதென்றால்
அப்பொருளின் எடை அளவு திரவம் வெளியேறும்..
ஒரு பொருள் மூழ்கினால்
அப்பொருளின் கனபரிமாண அளவு திரவம் வெளியேறும்..
(கப்பலின் ஆதார தத்துவம் இதுவே)

கிரேக்கத்தில் அநேகர் குளித்து அழுக்கு நீரை
தொட்டிவிட்டு வெளியேற்றி இருப்பர்.
ஆர்க்கிமெடிஸ் மட்டுமே அதில் இருந்து
அற்புத இயற்பியல் விதி கண்டான்…
ஏன்…எதற்கு… எப்படி..
கேள்வி பிறந்ததாலே – நல்ல
பதில் பிறந்தது….
அவன் போன்ற விஞ்ஞானிகள் மெய் கண்டறிய
ஆசை கொண்டதாலே
யாவும் நடந்தது….
அந்த விஞ்ஞானிகள் மெய் காண மேற்கொள்ளும்
வழிமுறைகள் என்ன?
மிதத்தல் விதியைக் கண்டுபிடித்து அரசனின் ஐயத்தை நீக்கிய
ஆர்க்கிமெடீஸ்… ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் அதைக் கண்டுபிடித்து
விடவில்லை.

ஆனால்… உலகம் அப்படித்தான் அதைச் சித்தரிக்கிறது…
அப்படித்தான் நம்ப விரும்புகிறது…
இங்கிலாந்தின் ஒரு மூலையில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து
கனாக்கண்டுகொண்டிருந்த நியூட்டனின் மடியில் ஆப்பிள் வந்து
விழுந்த உடனேயே அவன் புவியீர்ப்பு விசையைப் பற்றி புரிந்துகொண்டான்
என நம்ப விரும்புகிறோம்.
புதிய நோட்டுப்புத்தகம் வாங்க காசில்லாமல், பழைய கிழிந்த நோட்டிலேயே
அவன் எழுதிய கிரகங்களுக்கிடையேயான ஈர்ப்பு,
அவை போகும் நீள்வட்டப்பாதைகளுக்கு என்ன சூத்திரங்கள், என்ன சூட்சுமங்கள் என மூளையைக்
கசக்கி அவன் எழுதிய குறிப்புகளைப் படித்து அதே சிந்தனையில் கொதித்த மூளையுடன்
அந்த கனி விழும் நிகழ்வுக்காக அவன் உழைப்பால் தயாராகிக் காத்துக்
கொண்டிருந்தான் என்பதை அறிய நமக்கு விருப்பமில்லை.

கடும் உழைப்பில் ரொமான்ஸ் இல்லை..
கண்டான்,வென்றான் என்ற கவர்ச்சி இல்லை.
ஆனால் உண்மை நாம் எதிர்பார்க்கும் இனிப்பாக பெரும்பாலும் இருப்பதில்லை.
திட்டமிட்ட படிப்படியான உழைப்பே வெற்றிக்கு உறுதியான வழி…
ஆர்க்கிமெடிஸ் ஏறிவந்த உழைப்புப்படிகள் என்னென்ன..?

METHODS OF SCIENCE…
(1) அரசன் முதலில் ஒரு பிரச்னை எழுப்புகிறான்.
அதன் அடிப்படையில் கேள்வி பிறக்கிறது.
(Facing a problem, Forming a question).
(2) இக்கேள்வி தொடர்பாக தெரிந்த தகவல்கள், மேற்கொண்டு திரட்டும் கூடுதல்
தகவல்கள் இவற்றைத் தொகுக்கிறான்.. பகுத்து அறிகிறான்..
(Collection of relevant data and analysis).
(3) பல்வேறு செய்திகளை ஒருமுனைப்பட்ட சிந்தனையில் ஆராயும்போது
மின்னல் போல் ஓர் இணைப்புப்பாலம் – அனுமானம் தோன்றுகிறது.
(Generation of a hypothesis).
(4) இந்த அனுமானத்தை அடிப்படையாய்க்கொண்டு , அதை ஐயந்திரிபற
நிரூபிக்க பலகட்ட சோதனைகள் அமைத்து, தவறுகள், முரண்களை
மீண்டும் மீண்டும் செப்பனிட்டு இறுதியில் வெற்றி காண்கிறான்.
(Designing and refining experiments to prove the hypothesis beyond doubt.)
(5) அப்படி அவன் கண்ட உண்மையை உலகின் எந்த மூலையிலும்
உள்ள இன்னோர் விஞ்ஞானி அவன் சொல்லும் வழியில் சோதனை செய்து
அதே முடிவுக்கு வர வழிசெய்து, நிலைத்த உண்மை என நிலைநாட்டுகிறான்.
(Reproducibility of consistent results by others).
இந்த வழியே ஆர்க்கிமெடிஸ் சென்ற வழி… வென்ற வழி..!

(1) கிரீடத்தில் தங்கம் எவ்வளவு, செம்பு எவ்வளவு? இது கேள்வி.
(2) ஒரே வெற்றிடத்தை இரண்டு பொருட்கள் ஒரே சமயத்தில் ஆக்கிரமிக்க முடியாது
என்பது அவனுக்கு முன்னமே டெமாக்ரிடஸ் சொல்லிச்சென்ற தகவல்.
ஒரு கனசதுரம், கூம்பு இவற்றில் அடங்காத கிரீடத்தின் கனபரிமாணம் அறிய
இந்த விதியே அவனுக்கு உதவி…
செம்பின் அடர்த்தி, தங்கத்தின் அடர்த்தி இவை அவனுக்கு ஏற்கனவே தெரியும்.
(3)கிரீடத்தை மூழ்கடித்தால் வெளியேறும் நீரின் கனபரிமாணம்….
சுத்தத் தங்கம் என்றால் எவ்வளவு..?
செம்பின் சதவீதம் பத்து சதவீதம் என்றால் எவ்வளவு எனக் கணக்கிடலாமே?
இது அவன் அனுமானம்.
( அம்மணமாய் அவசரமாய் ஓடி வரும் அளவுக்கு பரவசம் தந்த அனுமானம்!)
(4) வீட்டுக்குப்போய் முறைபட இதை சோதனை செய்தான்… மீண்டும் மீண்டும்..
ஐயந்தீர்ந்தான்.
(5) அரசவையில் அனைவர் முன்னிலையிலும் நிரூபணம் செய்தான்.

உதாரணமாய்…
கிரீடத்தின் எடை 10 கிலோ என்றும் , கனபரிமாணம் 700 cc என வைத்துக்கொள்வோம்.
அதில் X cc தங்கம் என்றால், 700 – X cc செம்பு.
ஒரு cc தங்கம் எடை = 19. 3 கிராம்.
ஒரு cc செம்பு எடை = 8.9 கிராம்.
10 கிலோ = 10000 கிராம்
= X * 19.3 + (700-X) * 8.9
X = 362. 4 cc தங்கம்.
700 – X = 337.5 cc செம்பு !!!!
இந்த உதாரணமே அன்று ஆர்க்கிமெடீஸ் நிரூபித்த உண்மையாய் இருந்தால்…
கண்டிப்பாய் கிரீடம் செய்த பொற்கொல்லனுக்கு சங்குதான்…..!!
இப்படி அரசனின் கிரீடத்தின் தங்க அளவு சந்தேகத்தைத் தீர்த்த
அந்த மாமேதயின் ஆயுள் கணக்கைத் தீர்த்தவன் யார் தெரியுமா?
பொற்கொல்லன் செய்த கிரீடத்தில் தங்கத்தின் அளவைச்
சரியாக கணித்து சொன்னதோடு ஆர்க்கிமெடீஸ் கதை
முடிந்துவிடவில்லை. (இனிமேல் “அவர் ” என்று அழைக்கப்போகிறோம்!)

கணிதம் போலொரு நிர்மல அறிவியல் இல்லை.
அந்த இடத்துக்கு இரண்டாவதாய் வரும் தகுதி
இயற்பியலுக்கு உண்டு.
தாமுண்டு, தம் ஆராய்ச்சியுண்டு என்று தமது வீட்டில்
புனித கணிதத்தையும் இயற்பியலையும் இணைத்து
“கணித இயற்பியல்” (Mathematical Physics) என்று
புதிய குழந்தையை உருவாக்கி அதைச் சீராட்டி
வளர்த்துக் கொண்டிருந்தார் ஆர்க்கிமெடீஸ்.
பதவி வந்தாலே கூடவே ஆபத்தும் வருமல்லவா?
அரசனுக்கு அண்டை நாட்டின் படையெடுப்பு ரூபத்தில் வந்தது.
அப்போது அவனுக்கு மீண்டும் ஆர்க்கிமெடீஸ் ஞாபகம் வந்தது!
அரச கட்டளை = ஆண்டவன் கட்டளை!களத்தில் இறங்கினார் ஆர்க்கிமெடீஸ்.
நெம்புகோலும், கயிறு இழுக்கும் கப்பி ( Pulley) -இரண்டும் சேர்த்து
ஒரு விசித்திர இயந்திரம் உருவாக்கினார்.
நெம்புகோலின் ஒரு பக்கம் எரிகின்ற தீப்பந்தங்களையும், கொதிக்கின்ற
எண்ணெய்ப் பானைகளையும் வைத்து,
நெம்புகோலின் இன்னொரு நுனியில் நூறு “குண்டர்”களை திடீரென
குதிக்கச் சொன்னார். அந்த நூறு குண்டர்கள் எடை போல பல நூறு மடங்கு
எடையுள்ள ராட்சசத் தீப்பந்து, சீறிப்பாய்ந்தது.
தூரத்தில் முற்றுகை இட்டு சோம்பல் முறித்துக்கொண்டிருந்த எதிரிப்படையின்
நடுவே விழுந்தது… ( அன்றைய ஸ்கட் மிஸ்ஸைல்!!!).
அவர்கள் சேதம் பாதி, புதுவித தாக்குதலில் ஏற்பட்ட பீதி மீதி என
அலறி அடித்தபடி ஓடியே போய்விட்டார்கள்.

வெற்றிக்கு ஒரு பழக்கம் உண்டு… துணைக்கு இன்னும் பல வெற்றிகளை
அடுத்தடுத்து அழைத்து வரும்!
Nothing succeeds like success!
அய்யா ஆர்க்கிமெடீஸ் அரசவை விஞ்ஞானி ஆனார்.
(இதேபோல் இன்னொரு அரசவை விஞ்ஞானியாய் இன்னொருவர் வர
1500 ஆண்டுகள் ஆயின… அவர் யார்? சஸ்பென்ஸ்… அப்புறம் சொல்கிறேன்..
இன்றைய நாயகன் ..மன்னிக்கவும் நாயகர் ஆர்க்கிமெடீஸ்.. அவரைப் பற்றி மட்டும்
இப்போது பேசுவோம்.. இல்லன்னா கோவிச்சுக்குவார்.. பதவி அப்படி!)
தக்க மரியாதை, நிலபுலன் பரிசென்று “காவல் தெய்வத்தை” காவலன்
நன்றாகவே கவனித்தான். கூடவே எந்நேரமும் அரசவையில் இருக்கச் செய்தான்.
பாம்பாட்டி வேடிக்கை காட்டும் நாற்சந்தியா பாம்பின் இயல்பான இருப்பிடம்?
சமயம் வாய்த்தபோது ஆர்க்கிமெடீஸ் கழன்று கொண்டார்.
சிந்தனை, செயல் மூலம் சாதிக்கப் பிறந்த செம்மல் அவர்.
அரசவை என்னும் சர்க்கஸ் கேளிக்கையில் சரிசமமாய் கலந்துகொள்ள முடியவில்லை.
நகரின் ஒதுக்குப்புறம். எளிய வீடு. அமைதி.
நைல் நதியில் இன்றும் தண்ணீர் இறைக்கப் பயன்படும் இயந்திரத்தை
அய்யா வடிவமைத்தது இங்கேதான்.
இன்னும் எவ்வளவோ இயற்பியல் தத்துவங்கள்..
ஓலி பற்றி, ஒளி பற்றி…
இடைவிடா சிந்தனை, ஆராய்ச்சி.
ஆம், அகரம் என ஆரம்பித்த அய்யாவைப்போல் இன்னொரு விஞ்ஞானி அவனியில்
அதற்கு முன் இருந்ததில்லை.
அவரோடு ஒப்பிட இன்னொருவன் வந்தான் – யாரென்று இரண்டாயிரம் ஆண்டு
கழித்து விழுந்த ஒரு ஆப்பிள் கனிக்குத் தெரியும்.
ஆனால் அதற்குப்பின் 200, 100, 50 ஆண்டுகள் என ·பாரடேயும் மேக்ஸ்வெல்லும்
ஐன்ஸ்டீனும் மடமடவென வந்துவிட்டார்கள்.
களர்மண்ணை முதலில் கொத்தி சமைத்த அய்யாதான் இயற்பியலின் பிதாமகர்.
பின் வந்த தலைமுறை விரைந்து வெற்றிக்கனி பறிக்க தோள் கொடுத்த தாளாளர்.
வாழ்ந்தவர் கோடி, இறந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?

வாழ்வில் சிறப்பு கண்டோர் பலருண்டு.
இறப்பிலும் சிறப்பு கொண்டோர் எத்தனை பேருண்டு?
ஒரு சாக்ரடீஸ்…
ஒரு மேடம் கியூரி…
ஒரே ஒரு ஆர்க்கிமெடீஸ்.
அய்யாவை ஆதரித்த மன்னன் மரணிக்க உள்நாட்டுக்கலவரம்.
அன்று அய்யா எரிந்த எரிபந்துக்கு பயந்து ஓடிப்போன எதிரி அரசன்
குழப்பத்தைப் பயன்படுத்திக் கோட்டையைப் பிடித்துவிட்டான்.
அதிகாரம் கைக்கு வந்தால் அடுத்து என்ன பழிவாங்குதல்தானே?
நள்ளிரவாய் இருந்தால் என்ன? கைது செய்வது புதிதா என்ன?
பழிவாங்கவோ இல்லை பயன்படுத்திக்கொள்ளவோ…புது அரசன்
பதவியேற்றவுடன் முதல் வேலையாய் முன்னாளில் தன் படைகளை
விரட்டி அடித்த ” தனி நபர் இராணுவமான” அய்யாவை அழைத்து வர
படைத்தலைவனை அனுப்பினான்.
அய்யோ, ஒரு அறிவான ரோஜாவை கொய்துவர கோடரியா போவது?
நெஞ்சம் பதைக்கிறது இப்போதே எனக்கு…
கோடரி அய்யா வீட்டுக்குப் போனது..
வீட்டுக்குள் யாருமில்லை…
தேடி அலுத்த கோடரி தோட்டம் பக்கம் போனது…
மெல்லிய வயோதிக ரோஜா, தோட்டத்து மண்ணில்
ஏதேதோ கிறுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தது….
கோடரி கூப்பிட்டது…
சிந்தனைக் கோயிலில் தவம் செய்துகொண்டிருந்த
தெய்வீக ரோஜாவின் காதில் அது விழவில்லை…
கோடரி கத்தியது…
ரோஜா இன்னும் அசையவில்லை..
கோடரிக்குக் கோபம் வந்துவிட்டது…
கத்தியை உருவி அதன் முனையால் ரோஜாவின் தோளைத் தட்டியது..

” ஏய் கிழவா… நான் ராஜாங்கப் பிரதிநிதி!
படைத்தலைவன் வந்திருக்கிறேன்..
நீ கொஞ்சமும் மதிக்காமல் தரையில் கிறுக்கிக் கொண்டிருக்கிறாயே..!
எங்கே உன் எஜமானன் ஆர்க்கிமெடீஸ்..?”
” இருப்பா, என்னுடைய வட்டங்களை அழித்துவிடாதே…
Pray… Do not disturb my circles…
இதோ.. இந்தத் தேற்றத்தின் நிரூபணம் தெளிவாகிவிட்டது பார்”
இனிமேலும் எழுத என் கை பலமின்றி தொய்கிறது…

அந்த மேதை சொல்லி முடிக்குமுன் சொருகிவிட்டான் கத்தியை!
ஏன் இப்படி…உலகத்தில்?
நல்லதோர் வீணை செய்து
அதை நலமறியா கயவர் கையில் கொடுப்பது யார்?
இப்படி ஒரு மேதமையை அவருக்கும் கொடுத்து
அவர் கதையை முடிக்க
இப்படி ஒரு மகாப் பேதையைப் படைத்தவன் யார்?
வாழ்ந்தவர் கோடி, இறந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?

அமை 07

https://vayavan.com/?p=8996