உலகளந்தவர் – அறிவியல் மைல்கல் – 07

313

அறிவியல் நெம்புகோல் – அ.மை.06

எரடோஸ்தீன்ஸ் ( கி.மு. 276 -194)

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமியின் விட்டத்தைப்போல் 12000 மடங்கு.

அதனால் சூரியனின் ரேகைகள் பூமியில் படும்போது ஒன்றுக்கொன்று இணையானவையாய்த்தான் இருக்கவேண்டும்; அது ஆஸ்திரேலியாவில் விழுந்தாலும் சரி. ஆப்பிரிக்காவில் விழுந்தாலும் சரி.

இந்த சரியான அனுமானந்தான் இந்த மைல்கல்லை நட்ட எரடோஸ்தீன்ஸ் நம் பூமியின்  குறுக்களவை ( டயாமீட்டர்) அளப்பதற்கு அடிப்படை.

இன்றைய லிபியாவின் ஷாஹத் அன்று சைரீன் என்று அழைக்கப்பட்டது. அங்கே பிறந்து, நம் முந்தைய மைல்கள் நாயகர்கள் சிலரைப்போல் இவரும் அலெஸாண்ட்ரியா அறிவுக்கூடலில் சங்கமம் ஆனவரே. கணிதப்புலி;பூகோளச் சிங்கமான இவர்- அலெக்ஸாண்ட்ரியாவின் மகா நூலகத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

பதவி உயர்ந்தவுடன் படிப்பதை நிறுத்தாத எரடோஸ்தீன்ஸ் அங்கிருந்த பழைய பாப்பிரஸ் ( அன்றைய காகிதம்) நூல்களை ஆவலுடன் வாசித்தபோது ஒரு தகவல் அவர் கவனத்தைச் சட்டென ஈர்த்தது – எகிப்தின் தென்னெல்லையில் , நைல் நதியின் முதல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் சையீன் ( இன்றைய அஸ்வான்) . இங்கு நீளமான பகல் கொண்ட ஜூன் 21 அன்று உச்சிப்பொழுதில் தரையில் நட்ட குச்சிகளின் நிழலே விழுவதில்லை என்ற தகவல்தான் அது. அந்த நேரத்தில் சூரியனின் பிம்பம் மிக ஆழமான கிணறுகளின்அடியில் இருக்கும் நீரில் தெளிவாய் தெரியும்.

அதைப் படித்த நம் எரடோஸ்தீன்ஸ் மனதில் ஒரு கேள்வி. சையீனில் அப்படி என்றால் அதற்கு வெகுதூரம் வடக்கே தள்ளி உள்ளஅலெக்ஸாண்ட்ரியாவில் அதே ஜூன்21 உச்சிப்பொழுதில் நேராய் நிற்கவைத்த குச்சியின் நிழல் விழுகிறதே? அது எப்படி? இணையாக வரும் சூரியனின் கதிர்கள் இருவேறு இடங்களில் இருவகை பிம்பங்களைத் தருகிறது என்றால் – அது ஏன்?

ஆம்… பூமி சமதளமாய் இருக்க சாத்தியமில்லை. அது ஒரு உருண்டையாய் இருந்தால் மட்டுமே இந்த வித்தியாசம் நிகழும்.

என்ன ஒரு மூளை நம் எரடோஸ்தீன்ஸ�க்கு. அலெக்ஸாண்டிரியா மண்ணில் விழுந்த குச்சி நிழலை அளந்தவர், செங்குத்துக்கும் நிழலுக்கும் உள்ள தூரம் ஒரு வட்டத்தின் 50-ல் ஒரு பாகம் பாகை ( டிகிரி) அளவுள்ளது எனக் கணக்கிட்டார். அதாவது 360 -ல் ஐம்பதில் ஒரு பாகம். அதாவது 7 டிகிரிக்கும் கொஞ்சம் கூட. இப்போது அவர் தீர்மானித்தார் – சையீனுக்கும் அலெக்ஸாண்டிரியாவுக்கும் இடைப்பட்ட தூரம் பூமிப்பந்தின் சுற்றளவின் ஐம்பதில் ஒரு பாகம்.

சுற்றளவு என்பது 2(பை)*r.
r = பந்தின் ஆரம் ( ரேடியஸ்)
சுற்றளவு தெரிந்தால், பூமியின் விட்டம் விளங்கிவிடும்.
கணக்குப் போட்டுத் தெளிந்த நம் எரடோஸ்தீன்ஸ் , நேராய் அளந்து பார்க்கக் கிளம்பினார்.
(பூகோளச் சிங்கம் ஒன்று புறப்பட்டதே எனப் பாடத்தோணுதில்ல..)

ஒரு ஆளை அமர்த்தி, அடி மேல் அடியாக நிதானமாய் நடக்க வைத்து
எண்ணிக்கொண்டே வந்து, இந்த தூரத்தை அளந்தார். என்ன ஆச்சரியம்.
(இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட நெருங்கி 800 கி.மீ என அறிந்தார்.)
அதை ஐம்பதால் பெருக்கி சுற்றளவு அறிந்தார். பின் ஆரம், விட்டம் என
எல்லாமே இன்றைய அறிவியல் அளந்ததற்கு மிக நெருக்கமான விடையை
அன்றே சொன்னார்.

ஆம், வெறும் குச்சியின் நிழல், கூலி ஆளின் நடை – இவற்றைக்கொண்டு
உலகளந்த மாமேதை அவர்.
ஓங்கி உலகளந்த முதல் மனிதர்!