வரலாற்று புகழ்பூத்த குடாரப்பு தரையிறக்க பங்காளி மேஜர் சுமி!

உணர்வும் பதிவும் – பசீலன்

சுமி அக்காவே, உன்னுடனான நட்புறவும், தோழமையும் மிக ஆழமானவை மட்டுமல்ல அவை மகத்தானவையும் கூட.

உன்னை சந்திக்க கிடைத்தமை எனக்கு பெரும் பாக்கியமே. அந்த முதல் சந்திப்பு எப்போதும் என் நினைவில் வந்துபோகும்…..

அது 1990 பெப்ரவரி மாதம் தமிழகத்தின் சேலம் மாவட்டம்.
அங்கே பிரபல கல்லூரியான “சாரதா கல்லூரி” யை அண்மித்த fairlands என்ற தெருவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்திருந்தது அந்த முகாம்.

பணி நிமித்தம் வெளியே சென்றுவிட்டு, பசியோடு முகாம் திரும்பிய ஒரு பகல்பொழுது, வீட்டின் வரவேற்பறையில் நுழையும்போதே
“மம்மி” பசிக்குதென்று உரிமையோடு செல்லமாய் சிணுங்கிக்கொண்டு
அன்ரியின் அன்னையை எதிர்பார்த்து நான் சமையலறை நுழைந்தபோது அடுப்படியில் புதியவரான உன்னைக்கண்டு நான் பதறிப்போய் பின்வாங்கினேன்.

நீயோ சிரித்துக்கொண்டே மம்மியிடம் தட்டை வாங்கி உணவை பரிமாற தயாரானாய் இன்னுமொரு அன்னையாக……………

தன்வாழ்வை விடுதலைப் போராட்டத்தின் மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்து அரச வைத்திய அதிகாரியாக இருந்து போராளியாக தன்னை மாற்றிக்கொண்ட, Doctor சாந்தி என்றும் எழுமதி கரிகாலன் என்றும் அறியப்படுபவரும், போராளிகளால்
“டொக்ரர் அன்ரி” என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான Doctor பத்மலோஜினி அவர்களும் அவர்தம் அன்னையும் மட்டுமே அதுவரை எங்களோடிருந்த அந்த முகாமுக்கு நீ புதுவரவாய், ஒரு பெண் போராளியாய் வந்துசேர்ந்தாய்.

தேசியத்தலைவரை தாங்கி நிற்கும்
மணலாற்றுக் காட்டிலிருந்து தலைவனின் அருகிலிருந்து வந்துள்ளாய் என அறிந்தபோது உன்னில் மதிப்பும் மரியாதையம் அதிகரித்தன.

அன்றுமுதல் அக்கா, மம்மியோடு எங்களுக்கு நீ இப்போ சின்னக்காவாக மாறிப்போனாய். கூடவே, அன்றுமுதல் நீ பல வருடங்கள் தொடர்ச்சியாக அன்ரியைத்தாங்கி நின்றாய்.

தமிழகம் முதல் பின்னர் தாயகம் வரை அன்ரியுடனான உன் பயணங்கள் தொடர்ந்தன.

சாதாரண சமூக வாழ்விலுள்ள ஒருவரது விருப்பங்கள், எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தையும் ஓரமாய் தூக்கி எறிந்துவிட்டு, தாயகத்தையும் அதன் விடுதலையையும் அதை தூக்கிச்சுமக்கும் இயக்கத்தையும் தாங்கி நிற்கும் தலைவனையும் ஆழமாய் நேசித்து இலட்சியப்பணியாற்ற தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்போராளி எப்படி இருப்பார் என்பதை முதன்முதலாக உணர்ந்து கொண்டது
உன்னைப்பார்த்துதான்.

ஒரு பெண்போராளி எப்படி நடந்துகொள்வார் என்பதற்கு அப்பால் ஒரு பெண்போராளியுடன் எப்படி நடந்து கொள்வது என்பதையே
உன்னிடம் இருந்துதானே முதலில் புரிந்துகொண்டேன்.

ஒரு பெண் போராளியின் உணர்வுகளை, இலட்சியத்திற்கான வாழ்க்கை நெறியை எனக்கு மட்டுமல்ல அந்த அக்கா, மம்மிக்கும் கூட முதன்முதலாய் உணர்த்தியவரே
நீயாகதானிருப்பாய்.

அக்கா, ஒன்றாக அந்த முகாமில் நாம்
பணிபுரிந்த அந்த இரண்டு மாதங்கள், பின்னாளில் ஒன்றாக நாம் பயணித்த பலவருட பணிவாழ்வைவிட பெறுமதி மிக்கவை என்று நான் உணர்கின்றேன்.

இப்படி நடங்கள்,    இப்படி செயற்படுங்கள் என்று மற்றவர்களுக்கு போதிப்பதைவிட அதை அப்படியே செய்யக்கூடிய முன்மாதிரியான போராளியாக நீ இருந்தாய்.

உன் வீரச்சாவு உணர்த்தி நிற்கும் செய்தியும் உன் முன்னுதாரணத்தையே நினைவூட்டுகின்றன. நாங்கள் தான் இங்கே மேய்ப்பன் இல்லா மந்தைகளாக மட்டுமல்ல கோழைகளாகவும்………………

அக்கா, கடந்தகால நினைவுகளில் என்னுள் அதீத வலியைத்தரும் பல நினைவுகளுள் உன்னுடனான நினைவுகளும் முதன்மையானவை…

உங்கள் கனவுகளும் அந்த நினைவுகளும் எந்த அழிவின்போதும்
மறைந்துவிடப்போவதில்லை………….

வணங்கி நிற்கின்றேன்
அன்பான சுமி அக்காவே……