கிறுக்கத் தொடங்கிய புதிதில், கவிதைப்போட்டி ஒன்றுக்காக கிறுக்கி வாகை சூடிய கவிதை. முத்தம், மாலை, காதல், வெட்கம், கண்ணீர் என்ற ஐந்து சொற்களைக் கொடுத்து, அவற்றைக் கட்டாயம் கவிதையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். காதல் ரசம் சொட்டும் கவிதைக்கு ஏற்ற சொற்களை வைத்து போடப்பட்ட இயற்கை கொஞ்சும் கவிதை என்று பாராட்டப்பட்ட கவிதையும் கூட..
——*———————————————
ஏரு பூட்டி உழவு ஓட்டி
விதைத்து விட்டுக் காத்திருந்தான்
வானம் பார்த்து பூமிபோல
ஊருகூடி பொங்கல் வைத்தும்
மழையாத்த கண்ணைத்துறக்கலை
தூரு வாரிய கிணற்றில்கூட
தண்ணி ஊத்து எட்டியும்பார்க்கலை
மழலைச் சத்தம் இனிக்கலை
மனைவி முத்தம் இனிக்கலை
மாலையில் மனம் லயிக்கலை
காதல் செய்யவும் புடிக்கலை
இயற்கை அவனிடம் தோற்றது
வெட்கத்தில் தலை குனிந்தது
சோகத்தில் மேகத்தில் கறுத்தது
கண்ணீர் மழை பொழிந்தது
வயல் விளைச்சல் பெருகியது
அவன் மனசும் நிறைஞ்சது