இவ்வளவு அழகா இருக்கிற இந்த துருவ ஒளிநடனம் வட துருவப்பகுதியைச் சுற்றி உள்ள பல பகுதிகளிலும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களின் தென் கோடியிலும் அண்டார்டிகா பகுதியிலும் தெரியும். ஜப்பானியர்கள், இரஷ்யர்கள், ஸ்காண்டிநேவியன் நாடுகள், கனடா, வட அமெரிக்காவின் சில பகுதிகள் போன்றவற்றில் தெரியும்.
வைகிங் கடற் கொள்ளையர்கள் இதை தங்கள் வேலைக்காரி ஆவிகளின் நடனம் என்று சொன்னார்கள்..
ஸ்காட்லாந்துக்காரர்கள் தேவலோக அப்சரஸ்கள் அங்கு நடனமாடுகிறார்கள் என ஜொள்ளு விட்டனர்,,,
அமெரிக்காவின் பல பழங்குடியினர் பலவாறான கதைகளைக் கொண்டிருந்தனர். சிலர் அங்கு தெய்வீக மருத்துவர்கள் சஞ்சீவினி போன்ற மூலிகைகளை சேகரிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
கிரீன்லாந்தைச் சேர்ந்த எஸ்கிமோக்கள் இறந்து போன உறவினர்கள் பூமியில் உள்ள மக்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என நினைத்தார்கள்
இன்னொரு அமெரிக்கப் பழங்குடியினர் விசில் சைகை மூலம் இந்தப் பேய்களுடன் பேச முடியும் என நம்பினார்கள்.. (இனிமே இருட்டில விசிலடிக்கும் போது எதாவது பேய் அதைக் கேட்டு உங்களுக்கு என்னவோ சொல்ல வரும்னி நினைவு வச்சுக்காதீங்க)
டென்மார்க் ஸ்வீடன் மக்கள் வடதுருவத்தில் பெரிய எரிமலை இருப்பதாக நினைத்தார்கள்..
டேனிஷ்காரர்கள். அது அன்னப்பறவைகள் பறப்பதால் உண்டாகும் எதிரொளிகள் என நினைத்தார்கள்..
நியூசிலாந்துக் காரர்கள் துருவப் பகுதி மக்கள் கேம்ப் ஃபயர் போட்டிருப்பதாகச் சொல்வார்கள்..
இன்னும் சில அமெரிக்கப் பழங்குடியினர் இறந்த மாவீரர்கள், மீனவர்களின் இராட்சசத்தனமான ஆவிகள் என நினைத்தார்க்ள்
அலாஸ்கா பழங்குடியினர் அது அவர்கள் வேட்டையாடு மீன்கள், திமிங்கிலங்கள், கடற்சிங்கங்கள், மான்கள் போன்றவற்றின் ஆவிகள் என நினைத்தார்கள்..
சில எஸ்கிமோக்கள் இந்தப் பேய்களை கத்தி ஈட்டி போன்றவைக் கொண்டும் தாக்குவார்களாம்.
சீனர்கள் அவை டிராகன்கள் என நினைத்தார்கள்..
80 சதவிகித இரவுகளில் துருவப்பகுதிகளான அலாஸ்கா, வட கனடா ஐஸ்லாண்ட், ஸ்காண்டிநேவியாவின் வடபகுதி, வடக்கு ரஸ்யா இங்கெல்லாம் தெரியும். முக்கியமாக குளிர்காலத்தில் இரவு நீண்டிருப்பதால் நன்கு தெரியும்.
வெகு சில நேரங்களில் மெக்சிகோ, சீனா வரை கூட இவை தெரியும். அதனால் வட துருவப் பகுதிகளுக்குப் போனா இந்த ஒளியில் நாம் திறந்த வெளி டிஸ்கோ ஆடிட்டு வரலாம்.
1900 களில் இந்த துருவ ஒளிநடனத்துக்கு காரணம் சூரிய ஒளித்துகள்கள்களாக இருக்கலாம் என கிறிஸ்டியன் பிர்க்லேண்ட் எலெக்ட்ரான் கற்றைகளை காந்தக் கோளங்களின் மீது பாய்ச்சிக் காட்டினார்.
ஆனால் இந்தக் கதிரியக்கம் எப்படி வருகிறது என்பதைப் பற்றி பல தேற்றங்கள் இருந்தன
ஆனால் 1962 க்குப் பிறகே இது சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்றில் உள்ள துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் காரணமாக துருவப்பகுதிகளுக்கு திருப்பப்பட்டு நடக்கும் அதிசயம் என் உணர்ந்தார்கள்..
ஆமாம் காந்தப் புலம் இல்லைன்னா இது தெரியவே தெரியாதா அப்படின்னு தெரியாதவங்க தெரியாம தெரிஞ்சுக்க வேண்டி தெரிஞ்ச என்கிட்ட தெரிஞ்சே கேட்பாங்க..
நீங்களே சொல்லுங்க தெரியுமா தெரியாதா? தெரியும் ஆனா இவ்வளவு அழகா இருக்காது… ஏன்னா சூரியப் புயலின் எலெக்ட்ரான்கள் அடர்த்தி எல்லா இடங்களிலும் விரவி விடுவதால் எல்லா இடங்களிலும் ரொம்ப மெலிதாக தெரியும்..
இப்போ எலெக்ட்ரான்கள் துருவப் பகுதிகளுக்கு தள்ளப்படுவதால் அங்க மட்டும் தெரியுது, ஆனா அற்புதமா தெரியுது..