நாளொரு குறள் – 34

நாள் : 34
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

இதுவும் தவறாக பொருள் கொள்ளப்பட்ட செய்யுள்.

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை என்பார்கள் உரையாசிரியர்கள்.

ஆனால் உண்மைப் பொருள் சற்றே வித்தியாசம் கொண்டது. அறங்கள் செய்கிறோமோ அதன் பலன் என்ன?

அனைத்து அறங்களும் மனதின் குற்றங்களை நீக்கி மனதை தூய்மைபடுத்திக் கொள்ளவே செய்கிறோம். அறங்களை வேறு காரியங்களுக்காகச் செய்வதாக நினைத்துக் கொண்டு செய்வது அது ஆரவாரம் செய்யும் கடல் நீரைப் போல வெறும் பகட்டுக்காகச் செய்யப்படுபவையாய் ஆகிவிடுகின்றன.

அறம் என்பதைச் செய்யச் செய்ய மனம் தூய்மையாகும். அறம் செய்வதை நிறுத்தினால் மனம் குப்பையாகும்.

அறம் செய்யச் செய்ய மனபாரம் குறையும். அறம் செய்யச் செய்ய மனம் ஒளிபெறும். தெளிவு கிடைக்கும்.

மற்றபடி இப்படியான பலனைத் தராத பிற காரியங்களைச் செய்தால் அலைகள் ஆடும் கடல் நீரைப்போல் ஆரவாரமே மிஞ்சும்.

இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிகோடியாய் கொட்டப்பட்டன…
கடலில்!

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

ஆழ்கடலோ அமைதியாக!!!