கணிதப் பிதாமகர் – அறிவியல் மைல்கல் – 5

510

ஒரே ஒரு நூல் கணித உலகையே அதிகபட்சம் புரட்டிப்போட்டதென்றால்
அது யூக்லிட்டின் ‘எலிமண்ட்ஸ்‘ (அடிப்படைகள்?) என்ற நூல்தான்.
யூக்லிட்டின் காலம் – கி.மு. 325 -265.
சில சாதனையாளர்களின் சொந்த வாழ்வைப்பற்றி உலகத்துக்கு அதிகம் தெரிந்திருக்காது.
ஆனால் அவர்களின் படைப்புகள் உலகையே உலுக்கி எடுக்கும்.
நம் யூக்லிட் அந்த வகையைச் சேர்ந்தவர்.
அலெக்ஸாண்ட்ரியா தேசத்தில் முதலாம் டாலமியின் ஆட்சியின் கீழ்
பணியாற்றினார் என்பதைத் தவிர யூக்லிட்டின் சொந்த வாழ்வைப் பற்றி
அதிகம் தகவல்கள் நமக்கு கிட்டவில்லை.
ஆனால் அவர் படைப்புகளோ, அதற்குமுன் இருந்த அத்தனை கணக்கு நூல்களையும்
அமுக்கிவிட்டு, அடுத்த 2000 ஆண்டுகளுக்கு அறிவியலின் அரியணையில் அமர்ந்திருந்தது.
இத்தனைக்கும் இந்த நூல் அவரின் முழுமையான சொந்தச் சரக்கல்ல.
அதற்குமுன் வெளியான கணித நூல்களைத் தொகுத்து, தம் முத்திரை பதித்து
வரிசையாய் 13 தொகுதிகளாய் வெளியிட்டார்.
அந்தத் தொகுத்தலில் அவரின் ஆசிரியத்தன்மை முழுக்க வெளியானது.
அடிப்படைகளில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல கடினமான பகுதிகளை
தந்த விதம் – சொல்லிக்கொடுக்கும் கலைக்கு சிறந்த உதாரணம்.
புள்ளி, கோடு, தளம், வட்டம் என மிக எளிமையாய் தொடங்கி
தேற்றங்கள் , கோட்பாடுகள் என படியேறி
இன்னும் சிக்கலான தேற்றங்கள் என சிகரம் தொட்டவர் யூக்லிட்.
இரு இணையற்ற கோடுகள் எங்கோ ஒரு புள்ளியில் சேரும்
என்பது இவரின் ஒப்பற்ற தேற்றங்களில் ஒன்று.
விகிதங்கள், மடங்குகளை ஒழுங்காய் அறிமுகப்படுத்தியவரும் இவரே.
ஜியோமெட்ரி இவரின் செல்லக்குழந்தை.

அறிவியல் மைல்கல் – தாவரவியலின் தந்தை

செங்கோண முக்கோணத்தை ஒட்டிய பிதாகரஸ் தேற்றத்தை
வேறு வடிவில் முன்னமே சொன்ன பிதாமகர் இவர்.
ஒழுங்கான திட வடிவங்கள், பிரைம் எண்கள், இரண்டின் வேர் எண் என
இவரின் பங்களிப்புகள் முதன்மையானவை, மேன்மையானவை.
பின்னாளில் ரிலேட்டிவிட்டி , குவாண்ட்டம் கொள்கைகள் நிறுவப்படும்வரை
கணித உலகில் கோலோச்சிய மன்னர் இவரே.
ஆசியா, ஐரோப்பா, மத்திய நாடுகள் என பல தேசங்களில், மொழிகளில்
இவரின் நூல் பரவியதால்
‘ஆயிரம் பதிப்பு கண்ட அபூர்வ யூக்லிட்’ எனவும் அழைக்கலாம்.