வெங்களத்தின் நடுவே வேதனைகளை வென்றவர்கள்.

சமர்க்களநாயகனின் தலைமையில் ஒரு சமர் நடைபெற்றால் பின்தள நடவடிக்கைகளும் நன்கு கட்டமைக்கப்பட்டவையாகவே இருக்கும்.

பின்தளம் அல்லது பின்தள நடவடிக்கைகள் எனும் போது அதனுள் மருத்துவம், ஆயுத வெடிபொருள் விநியோகம்,உணவு விநியோகம், விரைவாக அவற்றை எடுத்துச் சென்று கொடுக்கக் கூடிய சிறிய ரக வாகனங்களும் அடங்கும்.

மருத்துவம் சம்பந்தமான அணிகளில் எத்தனை களமருத்துவர்கள், எத்தனை மருத்துவ நிர்வாக போராளிகள் எங்கெங்கு நிலையெடுத்து உள்ளனர்.

அந்தச் சமருக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள களமருத்துவ அணியின் ஆற்றல் எத்தகையது?, அவர்களின் நடைபேசி(Walkie Talkie)இலக்கம் எல்லாமே அவரிடம் இருக்கும். அந்த விபரங்களை தனது கையடக்க குறிப்பேட்டில்(Note Book) குறித்தும் வைத்திருப்பார்.

எல்லா விபரங்களையும் குறிப்பேட்டில் ஒரு எழுதுவினைஞர் போல எழுதி வைத்திருந்தாலும் தேவைப்படும் போது தனது அதீத நினைவாற்றல் மூலம் நினைவுபடுத்தியே கட்டளைகளை இட்டவாறு இருப்பார்.

மருந்தும் மருத்துவமும் எவ்வளவு முக்கியமோ அதேயளவு வெடிமருந்து களஞ்சியத்தையும் (Ammunition and Armory) அவற்றை விநியோகம் செய்யும் அணியையும் தன்னருகிலேயே வைத்திருப்பார்.

ஒரு சமர்க்களத்தில் முன் தளத்தைப் (Foreword Defence Line) போலவே பின் தளத்தையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து தானே நேரடியாக ஒழுங்கமைப்பவர்.

முன்னணியில் நின்று மூர்க்கமுடன் களமாடும் வீரனுக்கு கொடுக்கும் அதே அளவு மரியாதையினை அங்கீகாரத்தினையும் பின்னணியில் நின்று பணி செய்யும் வீரர்களுக்கு கொடுப்பார்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அடைந்த மகத்தான வெற்றிகளின் பின்னணியில் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பும் அதற்கு என்றுமே அவர் வீரவரலாற்றில் கட்டியம் கூறி நிற்கும்.

“லீமா” எனும் குறியீட்டுப் பெயரினால் களத்திடையே கனகாலம் வாசம் செய்த இந்த பிரிகேடியரின் உளவுரண் ஊட்டல் செயற்பாடு என்றுமே நல்ல ஊட்டமாக அமைவதால் காலில் சக்கரம் பூட்டியவர்களாக வேகமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.

குடாரப்புத் தரையிறக்கமும் அதைத் தொடர்ந்து ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான விநியோக வழிகளை(A9 நெடுஞ்சாலை) துண்டாடி ஒரு இத்தாவில் பெட்டி போன்ற வடிவில் வியூகம் அமைத்தாடிய சமரில் படுகாயமடைந்த பலரின் உயிர்களை காத்த சம்பவங்கள் தமிழீழ மருத்துவப் பிரிவின் வரலாற்றில் உண்டு.

அந்த வரலாறுதனை இயம்பிடும் ஒளிப்படம்தான் இங்கே இணைக்கப்பட்டு உள்ளது.

ஆம், இத்தாவில் பெட்டிச்சமரில் முழங்காலுக்கு மேல் பகுதியில் அதுவும் மேல் தொடையுடன்(Upper Thigh) தனது இரண்டு கால்களையும் இழந்தவர்தான் இந்த ஒளிப்படத்தில் நடுநாயகமாக இருப்பவர்.

வீராவேசத்துடன் மூண்டெழுந்த மூர்க்கமான அந்தச் சமரில் இரு கால்களிலும் பாரிய விழுப்புண் அடைந்தான்.

விழுப்புண் அடைந்த அந்த இடத்திலேயே(On the spot) கால்கள் இரண்டும் தொடைப்பகுதியுடன் துண்டிக்கப்பட்டுவிட்டது.

மனித உடலில் உள்ள பெரிய நாடிகளில் ஒன்றான தொடைநாடிகள்(Femoral Arteries)மூலம் சீறிப்பாய்ந்த குருதியைக் 🩸கட்டுபடுத்தினர் முன் களத்தில் நின்ற களமருத்துவ போராளிகள்.

குருதிப் பெருக்கை கட்டுப்படுத்த முன்னரும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சில நிமிட நேரங்களுக்கும் இடையிலும் அன்னளவாக 1.5 லீற்றர்களுக்கு அதிகமான குருதியினை எம் மண்ணில் சிந்தியிருந்தான் வெஞ்சமராடிய இந்த வீரன்.

ஒரு மனிதனின் நியம குருதி அமுக்கம் 120/80 mm Hg ஆகும். ஆனால் இவனின் குருதியமுக்கம் அளவிட முடியாத அளவு அந்த நேரத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தது.

செங்களத்தில் செக்கச் சிவந்திருந்த
அவனது கண்களும் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் வேகமாக வெளிறிப் போயிருந்தன.

உடலின் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்து உடல் ஐஷ்கட்டி போல குளிர்ந்து போயிருந்தது.

ஒரு சிறிய குழாயின் வழியே வேகமாக சீறிப்பாய்வது போல அவனின் உடலை விட்டு வெளியேறிய திரவ(குருதி) இழப்பை தனி ஒரு கையினூடாக ஏற்றப்படும் சேலைன் எனப்படும் திரவங்கள் மூலம் ஈடுசெய்யமுடியாது.

இப்போது அடுத்த தீர்மானம் ஒர் மில்லி செக்கனில் எடுக்கப்பட்டு செயல்வடிவம் பெறுகின்றது.

ஆம், அந்த மருத்துவ அணி ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் சேலைன்களையும் இரத்தத்தையும் பாய்ச்சினர்.

அதிகரித்த இந்தக் குருதிப் பெருக்கால் ஏற்பட்ட Hypovolemic shock அல்லது Hemorrhagic shock இனால் இறந்து கொண்டிருந்தவனை விரைந்து மீட்டு கடவுளாகினர் களமருத்துவர்கள்.

இத்தாவிலுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையேயான யாழ்நீரேரியில் கண்டல் தாவரங்களின்(Mangrove) மிடுக்கான மிண்டிவேர்களுக்கு(Aerial roots) இடையே சாதுரியமாய் படகு ஓட்டி
வேதனையால் துடித்த இவ் வீரனை
மீட்டனர் கடற்புலிகள்.

அதன் பின்னர் மாமுனையில் அடுத்தகட்ட மீளயுயிர்ப்பித்தல் (Resuscitation)நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட பின்னர் கடற்கரைச்சாலை வழியாக மெல்லப் பத்திரமாய் பின் நகர்த்தப்பட்டான்.

மணல் கொண்ட பாதையிலும் கிடங்கும் பள்ளமும் கொண்ட ஒழுங்கைகளிலும் பக்குவமாய் வாகனம் ஓட்டி கட்டைக்காட்டிலும் வன்னியின் தருமபுரம் தமிழீழ இராணுவ வைத்தியசாலையில் சேர்த்தனர் அர்ப்பணிப்பும் வேகமும் மிக்க வாகனப்பிரிவு(Ambulance Team) போராளிகள்.

சமர்க்கள நாயகனால் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பல பிரிவைச் சேர்ந்த போராளிகளின் வேகமானது விவேகமானதுமான செயற்பாடு இந்தக் காணரும் வீரனின் இன்னுயிரினை புத்தாயிரம் ஆண்டில் காத்து நின்றது.

ஆம், யாழில் இவ்வீரன் செங்களமாடிய களமுனைக்கும் வன்னியில் அன்றிருந்த எங்கள் பிரதான வைத்தியசாலைக்கும் இடையே இவனுக்கு பாய்ச்சப்பட்ட குருதியின் எண்ணிக்கை மட்டும் 04 பைந்துகள் (Pints) ஆகும்.

அதைவிட பல பைந்த் சோலைன்களும்(IV fluids)கொஞ்சம் நோ நிவாரணிகளும்(Pain Killers)
நோயுயிர்முறிகளும்(Antibiotics) இவனின் உயிர்காப்புச் செயற்பாட்டுக்காக ஏற்றப்பட்டது.

இக் காணரும் வீரனுக்கு இத்தாவில் பிரதான மருத்துவநிலை தொடக்கம் கட்டைக்காட்டில் அன்று அமைந்திருந்த சிறு சத்திரசிகிச்சைக்கூடம் வரை அந்த வீரனுக்கு தொடர் சிகிச்சைகள் அளித்த களமருத்துவர்களை ஒளிகொண்ட இவ் ஒளிப்படத்தில் நீங்கள் காண்கின்றீர்கள்.

– வயவையூர் அறத்தலைவன் –

1 COMMENT

  1. ஆளும் சிங்கள பேரினவாத அரசால் நன்கு திட்டமிடப்பட்டு இல்லாது செய்யப்படும் எங்கள் வரலாறுகளை காப்பதாயின் இவ்வாறான வரலாற்றுப் பதிவுகளை எம்மில் பலரும் செய்திட முன்வரவேண்டும்.

    வயவன் இணையத்தாருக்கு
    நன்றிகள்!

Comments are closed.