கட்டாய ஆட்சேர்ப்புக் குறித்து பல விதமான கருத்துக்களை வெளியிடும் பலருக்கு “கட்டாய வாசிப்பு”குறித்து தலைவர் விடுத்த உத்தரவு தெரிய வாய்ப்பில்லை.
“வரலாறு எனது வழிகாட்டி”என உரைத்த தலைவர் தமிழினத்தின் வல்ல வரலாறுதனை தனது மக்களும் போராளிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என ஆழமாய் விரும்பினார்.
1993 ஆம் ஆண்டளவில் தலைவர் தளபதிகளுடனும் முக்கிய பொறுப்பாளர்களுடனும் கதைக்கும் போது வரலாற்று நாவல்களை வாசியுங்கள் எனக் கண்டிப்பும் கனிவும் கலந்து சொன்னார்.
எழுத்தாண்மை மிக்க அமரர் சாண்டியன், அமரர் கல்கி ஆகியோரின் நூல்களை கட்டாயமாக வாசியுங்கள் என்றார்.
குறிப்பாக சாண்டில்யன் படைத்த “கடல்புறா”வை வாசியுங்கள் என்ற விடையத்தைப் பல தடவைகள் பல சந்திப்புக்களில் திருவாய் மலர்ந்திருக்கின்றார்.
எண்ணத்தைக் கவரும் வண்ண வண்ணப் படங்களுடன் புதிய பதிப்பாக அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த பல வரலாற்று நாவல்கள் தமிழர்தம் நிழலரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளுக்கு வருவிக்கப்பட்டன.
மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நிழலரசால் பொது மக்களுக்காக அமைக்கப்பட்ட படிப்பகங்களில் நிறைந்து கிடந்தன.
அஃதே,
மீனகங்களையும் தேனகங்களையும் தன்னகத்தே கொண்டு இலங்கும் எங்கள்
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அடர் அடவிகள் தோறும் இட அமைவு பெற்றிருந்த பாசறைகள், தங்கங்கள் என எல்லா இடங்களிலும் இந்த வரலாற்று நூல்களை தாம் வாசித்ததாக பல மூத்த போராளிகள் சொல்வார்கள்.
அதிகரித்த வேலைப்பளுவுடன் களத்திடை வாசம் செய்த எங்கள் தளபதிகள்,பொறுப்பாளர்கள் வரலாற்று நூல்கள் அனைத்தையும் எவ்வளவு தூரம் எழுத்தெண்ணி வாசித்தார்களோ தெரியாது.
ஆனால் மருத்துவக் கல்லூரியில் பல பென்னம் பெரிய ஆங்கில நூல்களுடனும், உடற்கூற்றுப் பகுப்பாய்வுக்குரிய உடலங்களுடனும் (cadaver or corpse ) வாசம் நாங்கள் (சு)வாசித்தோம்.
(சு)வாசித்துவிட்டு “கடல்புறா”, “பொன்னியின் செல்வன்”,”மலைவாசல்” ஆகிய நாவல்களில் வீரவலம் வந்த வீரபுருசர்களாகவும் வ(ந)ல்ல
பாத்திரங்களாகவும் எங்கள் வீரத்தளபதிகளுடனும் போராளிகளுடனும் வாழ்ந்தோம்.
“கொன்சன்ரைன்”ஆகவும்…,
“லூர்த்து மேரி” ஆகவும்…,
“சர்மா” ஆகவும்…,
“லாவண்யா”ஆகவும்..,
“ஜுனைதீன்” ஆகவும்…,
ஊருக்குள் வாழ்ந்த இளைஞன்களும் இளைஞிகளும்…
“ஆதித்தகரிகாலன் ஆகவும்”
“வந்தியத்தேவன் ஆகவும்”,
“குந்தவை ஆகவும்”,
“வானதி ஆகவும்”,
“பூங்கோதை” ஆகவும்,
“அருண்மொழிவர்மன் ஆகவும்”,
“மலையமான் ஆகவும்”
இயக்கப் பெயர்கள் தாங்கி களத்திடை வீரவுலா வந்தனர்.
நிழலசின்(De facto state) கட்டாய ஆட்சேர்ப்பு என்பது காலத்தின் கட்டாயமாக எமது செம்மண்ணுக்கு வந்த போதும் கூட பல பொதுமக்கள் அதனை கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் பல போராளிகள் கூட முழுமனதோடு உடன்படவில்லை.
ஆனால்,
“கட்டாய வாசிப்பினை” ஆனந்தமாய்
ஆத்மாத்தமாய் அனைவருமே ஏற்றுக் கொண்டோம்!
ஆம்,
பொன்னியின் செல்வன் (PS-1) பெருமையுடன் மீட்டிடும் நினைவுகள் எந்தன் அடுத்த பதிவில் தொய்வின்றித் தொடரும்!…