வயவை மண்ணில் விளைந்தவர்களில் விளையாட்டு வீரர்களும் அடங்குவர். பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தினருக்குரிய விளையாட்டுகளை விளையாடிக் களித்தமை இன்றும் என் நெஞ்சை விட்டகலவில்லை.
குறிப்பாக உதைபந்து வயவன்களின் பெருவிருப்பாக இருந்தது. குறிச்சிகளுக்கிடையான பயிற்சிப் போட்டி.. ரோட்டுக்கு அங்கால ஒரு அணி.. மெயின் ரோட்டுக்கு இங்கால ஒரு அணி எனப் பிரிந்த பயிற்சிப் போட்டி என வயாப்பள்ளம் நிறைந்ததை இப்போ நினைத்தாலும் மனசு சிலிர்க்கும்.
பார்த்த எனக்கே இப்படி என்றால் விளையாடியவர்களுக்கு எப்படி இருக்கும்.. சொற்களால் சொல்ல இயலா உணர்வுக்குவியலாக இருக்கும்.
அந்த வரிசையில், கலை, விளையாட்டு, கைத்தொழில், கமம் என சகல துறை ஆட்ட வல்லமை கொண்ட வயவையூர் கால மாற்றத்துகேற்ப, இப்போ கிரிக்கெட்டை தத்தெடுத்துள்ளது.
ஆம்.. வயாவிளான் திடப்புல மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிவாசிகளின் உழைப்பில் வயாவிளான்.நெற்றின் உதவியுடன் இவ்வாடுகளம் அமைக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய இளம் வட்டத்தின் உள உடல் ஆரோக்கியத்திற்கும், குழுமனப்பான்மை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இது போன்ற “ஆடுகளங்கள்” அவசியமானவை ஆகும்.
அவசியம் அறிந்து ஆடுகளம் அமைத்த திடப்புல மக்களும் அவர்களுக்கு உதவிய வயவன்.நெற்றும் பாரட்டப்பட வேண்டியவர்களே. மனமுவந்த பாராட்டுகள் இரு தரப்பினருக்கும்.