குருத்தேவை..

எனது வாழ்வில் மாதா, பிதாவுக்குப் பின்னர் முக்கிய வகிபாகம் குருவுக்கே உண்டு. நல்லதொரு குரு வாய்த்துவிட்டால் நல்வாழ்வு வாய்த்துவிடும். இதனாலேயே குருவை மதிக்க வேண்டும் என்பதுண்டு.

அவ்வாறு மதிக்க வேண்டும் என்பதுக்காக சிவபெருமான் தன் மகனான முருகன் முன் கைகட்டி வாய்மூடி மாணாக்கனாக பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார் என்று முன்னோர் சொன்னார்கள்.

கடவுளே தன் மகன் குருநிலையில் உள்ள போது மதிக்கிறாரே, மனிதர் நாங்கள் எங்கள் குருவை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை இக்கதை எமக்குணர்த்துகிறது.

இப்போதெல்லாம் குருவென்ற சொற்பயன்பாடு காணாமல் போய் ஆசிரியனெனும் சொல் பழக்கத்துக்கு வந்துவிட்டது. அது கூட ஒரு விதத்தில் பொருத்தமானதொன்றுதான்.

ஏனெனில், ஆசியர்கள் எப்போதும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளிடம் புள்ளி பெறுவது எப்படி? எப்படிப் படிக்க வேண்டும்? எவ்வளவு படிக்க வேண்டுமென்று மட்டுமே பாடம் எடுப்பார்கள். ஆனால் குருமாரோ எதைப் படிக்க வேண்டும்? வாழ்வில் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனக் கற்பிப்பார்கள். குருவின் பணியை நாம் விவேகானந்தரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்.

விவேகானந்தரை குரங்குகள் துரத்த அவர் வேகமாக ஓடினார். அவரை எதிர்கொண்ட குரு, “தீமைகளை எதிர்த்து நில்” என்றார். விவேகானந்தர் குரங்குகளை எதிர்த்தார். குரங்குகள் பயந்து ஓடின. அன்று தொட்டு விவேகானந்தர் எவ்விடர் வரினும் எதிர்த்து நின்று வென்றார். இவ்விடத்தில் அக்குரு குரங்குகளை எதிர்த்து நில் என்றிருப்பாரேயானால் விவேகானந்தரால் இடர்களை எதிர்த்து நிற்க முடிந்திருக்காது..

ஆம்.. குருவானவர் இப்படித்தான் கற்பிப்பார். அக்குரு மீதான நன்மதிப்பும் அன்பும் மாணாக்கருக்கும் குருவுக்கும் இடையில் வலிமையான உறவை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக சீக்கிய மதத்தின் கல்சா எனும் ஸ்தாபனத்தின் தோற்றத்தை நோக்கலாம்.

அத்தாபனத்தை உருவாக்கும் போது குரு கோவிந்தசிங் சீடர்களிடம் நரபலி வேண்டும் என்றார். சீடன் ஒருவன் உடனே எழுந்தான். அவனை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்ற குரு குருதிப்படிய திரும்பிவந்து இன்னொரு நரபலி தேவை என்றார்.

எவ்வித தயக்கமும் இன்றி இன்னொருவன் எழுந்து சென்றான். இவ்வாறு ஐந்து சீடர்கள் நரபலிக்காக முன்வந்து சென்றனர்.

இறுதியில் அந்த ஐவரையும் அனைவரின் முன்னால் நிறுத்தி “நல்ல விடயம் ஒன்றைச் செய்ய அர்ப்பணிப்பு அவசியம்” என்ற வாழ்வியல் பாடத்தோடு அவ் ஐவரையும் அத்தாபனத்தின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினார்.

இவ்வாறு வாழ்வியல் பாடத்தை கற்பிக்கும் குருக்களே இன்றைய சமுதாயத் தேவையாக உள்ளனர்.