நாளொரு திருக்குறள் – 33

நாள் : 33
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :3

ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்

இந்தக் குறளை பலரும் பல வகையில் விளக்குவார்கள்.

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும் என்பார் கலைஞர்..

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும் என்பார் மு.வ.

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க என்பார் சாலமன் பாப்பையா

ஒல்லும் வகையான் என்பதை இயன்ற வகையில், இயன்ற வரையில் என பொருள் கொண்டதால் இந்த பேதங்கள் முளைத்தன. ஒல்லும் என்பது ஒப்புக் கொள்ளத்தக்க என்றும் ஒரு பொருள் உண்டு என்பதை ஏன் மறந்தார்கள் எனப் புரியவில்லை.

அறம் என்று அவரவர் தனிப்பட்ட கருத்துகள் கொண்டு இருப்பார்கள். ஆனால் புறச்செயல்கள் செய்யும் பொழுது அவை ஒப்புக் கொள்ளத்தக்க வகையிலேயே அறக்காரியங்களை சிறிதும் அவ்வழிகள் நீங்காமல், அவற்றைச் செய்ய இயன்ற அத்தனை இடங்களிலும் செய்தல் வேண்டும்.

இதில் மூன்று படிகளாகச் சொல்கிறார்.

1. எங்கெல்லாம் அறக்காரியங்கள் செய்ய இயலுமோ அங்கெல்லாம் செய்க.
2. அறக்காரியங்களைச் செய்யும் பொழுது எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய அறவழியில் செய்க
3. அப்படி அறவழியில் காரியங்கள் செய்யும்பொழுது மனம்தளராமல் விடா முயற்சியோடு செய்க.

மூன்றும் மிக முக்கியம்