நாளொரு குறள் – 37

நாள் : 37
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :7

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை. .

இந்தக் குறளுக்கும் மற்றவர் சொல்லும் பொருளை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம். என்கிறார்கள். ஆனால் அறத்தின் பயன் மனத்தூய்மை என்று சொன்ன வள்ளுவரா அறம் செய்பவன் பல்லாக்கில் செல்பவனாக இருப்பான் என்பார்?

அதனால் அறத்தின் பலனால் ஒருவன் சிவிகையில் போகிறான்.. அறம் செய்யாத பலனினால் சிலர் பல்லாக்கு தூக்குகிறார்கள் என எண்ண வேண்டாம்.

அறத்தின் பயன் அப்படி இருப்பதில்லை என்கிறார் வள்ளுவர். பாவ புண்ணியங்கள், சுக துக்கங்கள் ஆகியவை அறத்தின் பலன்கள் அல்ல என்கிறார். இதனால்தானோ என்னவோ இந்தக் குறளுக்கு எல்லோரும் மழுப்பலான உரையே எழுதி இருக்கிறார்கள்.

இன்னொரு வேறுபாடான புதியகால உரை, பல்லாக்கைத் தூக்குபவனிடமும், பல்லாக்கில் உட்கார்ந்திருப்பவனுடனும் அறம் பற்றிப் பேசாதே என்பதாகச் சொல்கிறது.

அறம் பற்றி ஆண்டான் அடிமையிடம் பேசாமல் வேறு யாருடன் பேசுவது என வள்ளுவர் எங்குமே கைகாட்ட வில்லை.

பல்லாக்கில் ஒருவன் இருக்கிறான். சிலர் தூக்குகிறார்கள். எல்லோரும் ஒரே இடத்திற்குத்தான் போய்ச் சேரப்போகிறார்கள்.

பல்லாக்கில் இருப்பவன் சொகுசாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது அது சவமாகவும் இருக்கலாம். இயலாதவனாக, நோயாளியாக எவனாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பல்லாக்கைத் தூக்கியவர்கள் நகராத வரை பல்லாக்கு நகராது. அது போகுமிடம் போய்ச் சேராது.

எனவே பல்லாக்கைக் கண்டவுடன் இதுதான் அறத்தின் பாதை எனச் சொல்ல வேண்டாம். தூக்குவதும் தூக்கப்படுவதும் கருமபலன்களும் இல்லை.

எனவே பல்லக்கில் செல்பவனெல்லாம் புண்ணியவானும் இல்லை. பல்லாக்கைத் தூக்குபவனெல்லாம் பாவம் செய்தவனும் இல்லை.

அறம் பாவ புண்ணியங்களை, தருவதில்லை. அறம் அனைவரையும் வாழ வைக்கிறது அவ்வளவுதான்.!!!!

ஏற்ற தாழ்வுகள் அறத்தின் வழி இல்லை.